ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கையில் உறுதி மிக்கவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடைகளிலும் தோழர்களிடத்தும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டிருந்த வருமான தோழர் நீலவேந்தன், அருந்ததியருக்கு 6 விழுக்காடு உள் ஒதுக்கீடு கோரி திருப்பூர் பார்க் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தீ வைத்து, எரித்துக் கொண்டு உயிரா யுதமானார். 26.9.2013 அதிகாலை 2 மணி யளவில் திருப்பூரில் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ‘தீக்குளிப்பு’ என்ற ‘உயிரிழப்பு’ சமூகப் போராளிகளுக்கு உகந்தது அல்ல என்பது நமது உறுதியான கருத்து. மேடைகளில் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளை அற்புதமாக பேசக் கூடிய ஒரு வலிமையான பேச்சாளரை செயல் வீரரை நாம் இழந்திருக்கிறோம்.

செய்தி அறிந்தவுடன் கழகப் பொரு ளாளர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், பல்லடம் மண்டல அமைப்புச் செயலாளர்  விஜயன், வெளியீட்டுச் செயலாளர் தமிழ்ச் செல்வி, மேட்டூர் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல், மற்றும் கோவை திருப்பூர் சேலம் மாவட்ட கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டனர். ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், சென்னையி லிருந்து கண் அறுவை சிகிச்சை செய்த நிலையில், கார் மூலம் திருப்பூர் வந்தார். ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். மாலை 4 மணியளவில் அனுப்பர்பாளையம் மின் மயானத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி உடல் எரியூட்டப் பட்டது. இறுதி ஊர்வலம் 3 மணி நேரம் நடந்தது.

சென்னையில் நிகழ்ச்சியில் இருந்த கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி செய்தியறிந்து, அடுத்த நாள் திருப்பூர் கழகப் பொறுப்பாளர் களுடன் அனுப்பர்பாளையத்திலுள்ள நீலவேந்தன் இல்லம் சென்று குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். 32 வயதே ஆன நீலவேந்தன் – வழக்குரைஞர். இன்னும் திருமணமாகவில்லை. தாய் தந்தையோடு சகோதரி ஒருவர் இருக்கிறார். அவரும் ஒரு வழக்கறிஞர். பேச்சு, செயல், சிந்தனைகளில் ஆற்றல் மிக்க தோழரின் இழப்பு சமுதாயத் துக்கான இழப்பே ஆகும். திராவிடர் விடுதலைக் கழகம் வீர வணக்கத்தை உரித்தாக்குகிறது!

இராணுவ வாகன மறியலில் சிறைச் சென்ற போராளி

தோழர் நீலவேந்தன் அவர்களின் இயற்பெயர் ஸ்ரீதர். இவர் திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் 9.4.1979 அன்று பிறந்தார். இவரது தந்தை பழனிச்சாமி, தாயார் செல்வி ஆவார். இவர் உடன்பிறந்த தங்கை ஸ்ரீமதி.

நீலவேந்தன் தன்னுடைய பட்டயப் படிப்பை 1998 ஆம் ஆண்டு முடித்தார். இவர் தன் பள்ளிக் காலங்களிலேயே பெரியாரிய இயக்கக் கொள்கைகளில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். பட்டயப் படிப்பு முடித்த சமயத்தில் இவருடைய தந்தையார் வைத்திருந்த பட்டறையில் ஒரு ஆதிக்க சாதிக்காரன் இவர்களைக் கேட்காமலேயே வேலை செய்து வைத்திருந்த இரும்பு கேட் ஒன்றை எடுத்துச் சென்றுவிட்டான். இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பின் தோழர் நீலவேந்தன் அவர்களும், அவரின் தந்தையாரும் முடிவு செய்து தம்மைப் போல் தலித் சமுதாய மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நல்ல சம்பளத்தில் பொறியாளராக ஆகும் வாய்ப்பை உதறித் தள்ளி வழக்கறிஞராக ஆக முடிவு செய்து தன் படிப்பைத் தொடர்ந்தார்.

வழக்கறிஞர் படிப்பின்போது ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக குரல் கொடுத்து பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வந்த அவர், பின்னாளில் தன்னை ஆதித் தமிழர் பேரவையில் இணைத்துக் கொண் டார். அம்பேத்கரியல் வாதிகள் தங்கள் அடையாளமாக நீலச் சட்டையை அணிய வேண்டும் என்பதை வலி யுறுத்தி முதன்முதலில் நீலச் சட்டையை அணிந்தவர் இவர். இன்று தமிழகமெங்கும் நாம் காணும் நீலச் சட்டைத் தோழர்கள் அனைவரும் அணிந்திருக்கும் நீலச் சட்டைக்குப் பின்னால் நீலவேந்தனின் பங்கு முக்கியமானதாகும்.

இவரின் 16 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போருக்கு, இராணுவத் தள வாடங்கள் அனுப்பிய இந்திய இராணுவத்தை மே 2, 2009 அன்று கோவை மாவட்டம் நீலம்பூரில் தடுத்து நிறுத்திய வழக்கில் கைது செய்யப் பட்டு, 81 நாட்கள் சிறையில் இருந்தார். மாவீரர் நாள் சுவரொட்டி ஒட்டிய வழக்கில் 15 நாட்களும், கூடங்குளத் துக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மறியல் செய்து கைது செய்யப்பட்டு 10 நாட்களும் சிறையில் இருந்தார். பல்வேறு வழக்குகளில் மொத்தம் 163 நாட்கள் சிறையிலிருந்தார்.

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

 

You may also like...