கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக  பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.

மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது.

இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன் விளைவாகவே இஸ் லாமிய மதகுருக்கள் தங்கள் போக்கை மேலும் கடுமையாக்கிக் கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே இஸ் லாமியர் களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கிறித்தவர்கள் கொணர்ந்த திட்டம் என்று பிரச்சாரம் செய்யும் அளவுக்கு மதத்தின் மீதான வெறி சென்றுள்ளது. இதே அடிப்படையில் போலியோ சொட்டு மருந்துக்கெதிராக பாகிஸ் தான், ஆப்கானிஸ் தான், நைஜீரியா போன்ற நாடுகளில் தாலிபான்கள் பல சுகாதார ஊழியர்களை கொலை செய்துள்ளனர்.

மனிதர்கள் கடவுள் கொள்கையை ஏன் கண்டு பிடித்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்ற நிறுவனமே பயத்தின் அடிப்படையில் பிறந்ததுதான். அதுவும் மனிதர்களால் விளக்கம் சொல்ல முடியாத இயற்கை நிகழ்வுகளின் மேல் ஏற்பட்ட பயம்தான், அவர்களைக் கடவுள் பக்கம் தள்ளியது. இன்று நவீன அறிவியலில் அநேகமாக அனைத்து இயற்கை நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் கிடைத்து விட்டது. இன்று இயற்கையைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவை இல்லாததால், ஆதி காலத்தில் இந்துக்களோ, கிரேக்கர்களோ வழிபட்ட சூரியக் கடவுள், வாயுக் கடவுள் போன்ற இயற்கைக் கடவுள்களுக்கும் தேவை இல்லாமல் போய் விட்டது.

உண்மையில் இயற்கையின் இயக்கத்துக்கு கடவுளை அழைக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாவற்றுக்கும் விஞ்ஞானம் விடை தந்துவிட்டது. காட்டுமிராண்டி காலத்தில் அதற்கெல்லாம் விடை தெரியாத மனிதன், இவை எல்லாம் எப்படி இயங்குகிறது என்பதை அறியாது, ஏதோ ஒரு சக்தி, நமக்கெல்லாம் அப்பால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினான். இன்றைய விஞ்ஞான அறிவியல் முன் இது பொருத்தமில்லாத வாதம். கடவுள் ஒருவரே என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட மதங்கள்கூட இயற்கைக் கடவுள் வழிபாடுகளை கைவிட்டு விட்டன. ஆனாலும் இன்று வரை நமக்கும் மீறிய அதீத சக்தி ஒன்று இருக்கிறது என்று வாதிடு கிறார்கள். அது என்ன எல்லாவற்றையும் மீறிய சக்தி? முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானத்தின் ஆய்வுக்குட்படாத எந்த அதீத அற்புத சக்தியும் கிடையவே கிடையாது. உண்மையில் நாம் பிறக்கும்போது பகுத்தறிவு உணர்வுகளோடுதான் பிறக்கிறோம். இயற்கை விதிகள் குறித்த உலகத்தின் புரிதல் எப்போதுமே ஒன்றேபோல் தான் இருந்து வருகிறது. மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கான தனித்துவத்தை இயற்கை விதிகளே வழங்கின.

இன்னும் பேச்சுக்கூட வராத ஒரு வயது குழந்தை, ஏதோ வழமைக்கு எதிரான ஒரு அதிசயத்தைப் பார்க்க நேரிட்டால், பாதிப்புக்குள்ளாகி அழத் தொடங்கி விடுகிறது. ஒரு மாஜிக் நிபுணர் தனது கலையைப் பயன்படுத்தி நிகழ்த்தும் இயற்கை விதிகளுக்கு மாறான சம்பவங்கள் இயல்பான இயற்கைப் போக்குகளுக்கு மாறாக இருப்பதால் குழந்தைகளை மிரள வைத்து விடுகின்றன. இதுதான இயற்கையாக குழந்தைகளிடம் உள்ள பகுத்தறிவு உணர்வு. வளரும் பருவத்தில்தான் நாம் பகுத்தறிவை ஒதுக்கிவிட்டு, மேஜிக் தந்திரங்களை ரசிக்கத் தொடங்குகிறோம். ஆனால், பெற்றோர்களோ குழந்தைகளிடம் சிறுவயதி லேயே பகுத்தறிவுக்கு எதிரான கருத்துகளை திணித்து விடுகிறார்கள். கடவுளை கும்பிடச் சொல் கிறார்கள். மேஜிக்போல் அற்புதங்கள் செய்வோரை கடவுள் சக்தி மிக்கவர்களாக நம்பச் சொல்கிறார்கள். தங்களுடைய இயல்பான பகுத்தறிவு உணர்வுகளுக்கு எதிராக குழந்தைகள் இந்தத் திணிப்புகளை ஏற்றுக் கொள்கின்றன. காரணம் பெற்றோர்களும் ஆசிரியர் களும் எல்லாம் தெரிந்தவர்கள் என்று குழந்தைகள் ஏற்றுக் கொள்வதுதான்.

2001 செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையத்தைத் தகர்த்த பயங்கரவாதிகள், கடவுளுக்கு எதிரானவர்களைத் தாங்கள் தண்டிப்பதால் கடவுள் தங்களுக்குப் பரிசளித்துப் பாராட்டுவார் என நம்பியிருக்கக் கூடும். அதனால்தான் “மதம் என்பது மனித கவுரவத்தை அவமதிக்க பாதைப் போட்டுத் தருகிறது. மதம் என்ற ஒன்று இல்லாவிடில், நல்ல மனிதர்கள் நற்செயல்களைப் புரிவார்கள். கெட்ட மனிதர்கள் கெடுதல்களைச் செய்வார்கள். ஆனால் நல்ல மனிதர்களும் கெடுதல் செய்வதற்கு மதமே தூண்டுகோலாக இருக்கிறது” என்கிறார் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஸ் டீவன் வெய்ன்பர்க். மதத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள், ‘நம்மைச் சுற்றிலும் உள்ள வலிகளும் துயரங்களும் நாம் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உறுதியாக உள்ளதா என்பதை அறிய அவர் வைக்கும் சோதனை’ என்பார்கள். புற்று நோயால் துன்பத்தை அனுபவித் துக் கொண்டிருக்கும் ஒரு ஏதுமறியா குழந்தையின் பெற்றோர்களிடம் இப்படிச் சொல்லிப் பாருங்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் உள்ள ஒரு கடவுள் இருந்து கொண்டு, அவர் உண்மையிலேயே ஒரு குழந்தையை இப்படி சோதிக்கிறார் என்றால், அவரை உலகிலேயே மிகக் கொடுமையான மனிதராகவே கருத  வேண்டும் அல்லவா? ஜன்ஸ் டீன், பெட்ரண்ட் ரஸ் ஸல், இங்கர்சால் போன்ற சிந்தனையாளர்கள், கடவுள்கள், மதங்கள் அற்ற ஓர் உலகை – அ றிவு, அன்பு, தைரியம், தன்னம்பிக்கைக் கொண்ட மனிதர்களை உடைய ஓர் உலகை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றுள்ளனர்.

குகைக் காலத்தில் வாழ்ந்தவர்கள் குகைகளில் எழுதிய ஓவியத்தைவிட பல உலகப்புகழ் வாய்ந்த ஓவியங்கள் வந்துவிட்டன. குகை ஓவியங்களை பார்த்து நகைக்கத்தான் முடியும். அந்த ஓவியங்களை கேலி பேசக் கூடாது என்று தடை போடுவது கேலிக்குரியது அல்லவா?

‘நான் ஏன் கிறிஸ் துவன் அல்ல’ என்ற நூலில், பெட்ரண்ட் ரசல், கடவுள் சிந்தனை, பாசி படிந்த பழைய சிந்தனையில் உதித்தது. அது மனிதனை விடுதலை செய்யாது. அறிவும் துணிவும் அன்பும் நிறைந்த புதிய உலகமே தேவை என்று எழுதியதை சிந்திக்க வேண்டும்.                                 ட

பெரியார் முழக்கம் 10102013 இதழ்

You may also like...