வினாக்கள்… விடைகள்…
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை மாநகராட்சி மரணச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இது குறித்து மேயர், ஆணையரிடம் அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார். – செய்தி
விளக்கம் அளிப்பதற்கு முன்பு, மேயரும் ஆணையரும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை கையோடு எடுத்து வரச் சொல்லுங்கள்; கவனம்!
நாட்டிலுள்ள ஏழைகள் நாணயமானவர்கள்; நம்பத் தகுந்தவர்கள். – ப. சிதம்பரம்
ஆகவே நாணயமானவர்களை அதிகரிக்கச் செய்வோம்! அவர்கள் எண்ணிக்கை பெருகு வதற்கு நம்பத் தகுந்த ‘பட்ஜெட்’ போடுவோம்!
இந்து கோயில்களை உண்மையான பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். – இல. கணேசன்
“இவர் உண்மையான பக்தர்தான்” என்று எந்தக் கடவுளாவது நற்சான்றிதழ் தர முன் வந்தால் பரிசீலிக்கலாம்.
காந்தியடிகள் சிலைக்கு இலவச மின்சாரம் அளிக்க விதிகளில் இடமில்லை. – சேலம் மின்சார வாரியம் அறிவிப்பு
நியாயம் தானே? காந்திக்கு என்ன ஓட்டா இருக்குது?
எனக்கு இந்தி தெரியாது. ஆனால், திருச்சியில் மோடி பேசிய விதமும் ஆவேசமும் பேச்சில் விஷயம் இருப்பதைக் காட்டியது. – ‘துக்ளக்’ சோ பேட்டி
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்துக்கு ராஜகோபாலாச்சாரி தலைமை ஏற்றார் என்பதற்கு பதிலாக வ.உ.சி. பெயரைக் கூறினார் மோடி. அதனாலென்ன? பேசிய விதமும் ஆவேசமும் தானே முக்கியம்?
முதலில் கட்ட வேண்டியது கழிப்பறை; பிறகு தான் கோயில் என்று பேசிய மோடிக்கு, விசுவ இந்து பரிஷத், சிவ சேனா கண்டனம். – செய்தி
இப்படி சகோதர அமைப்புகளே சண்டை போடலாமா? சரி, போகட்டும், கழிப்பறை களையே ஆகம விதிகள்படி கட்டி, அங்கே கண் காணிப்பாளராக அர்ச்சகர்களை நியமித்து விட்டால், கழிப்பறைகளே கோயிலாகிவிடுமல்லவா? கொஞ்சம் பரிசீலியுங்கள், சார்!
இதுதான் முடிவு; இதுதான் கடவுள்; இது தான் பிரார்த்தனை என்று சனாதனதர்மம் என்கிற இந்து மதம் முடிவாகக் கூறவில்லை. சனாதன தர்மம் தேடிக் கொண்டே இருக் கிறது. – ‘இந்து’ ஏட்டில் பாலகுமாரன்
சரி; இதுதான் ‘சனாதன தர்மம்’ என்பதை மட்டும் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? அதையும் தேடிக் கொண்டே இருக்க வேண்டியது தானே?
2005-2012 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருந்து வீரிய பரிசோதனையில் 2,644 பேர் இறந் துள்ளனர். 12,000 பேருக்கு விபரீத விளைவுகள் ஏற்பட்டுள்ளன. – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
‘எக்ஸ் பைரி’ மருத்துக்கா- மனிதர்களுக்கா?
சென்னை இரயில் பெட்டித் தொழிற் சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காந்தி பயணம் செய்த ரயில் பெட்டியை காணவில்லை. – மாநகர ஆணையரிடம் புகார்
இரயில் பெட்டித் தொழிற்சாலையாவது பாதுகாப்பாக இருக்கிறதா?
பெரியார் முழக்கம் 10102013 இதழ்