அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்கள் – காவல்நிலையங்களில் ஆயுத பூஜைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மயிலாடு துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு சரசுவதி பூஜை கொண்டாட்டம் விழாவாக நடத்தப்பட்டதை எதிர்த்து களமிறங்கிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேட்டுப் பாளையத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் மீது பா.ஜ.க. ஆர்.எஸ் .எஸ் . காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் உருவானது. கழகத்தினர் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. செய்தி விவரம்.

மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்தவோ, கடவுள் படங்கள் வைப்பதோ கூடாது என்ற அரசு ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அனைத்து அலுவலகங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் மாவட்ட தலைவர் மகாலிங்கம் பெயரில் வேண்டுகோள் கடிதங்களை ஒரு வாரத்துக்கு முன்பே நேரில் தந்தனர். கடிதம் பெற்றதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

மயிலாடுதுறையிலுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ஒருவரும் வேறு சில அதிகாரிகளும் அலட்சியப்படுத்தி தங்களிடம் கண்டவர்களும் வந்து வேண்டுகோள் வைக்க முடியாது என்றும் பூஜைகளை நடத்துவோம் என்றும் கூறி வேண்டுகோள் கடிதத்தை வாங்க மறுத்தனர். பிறகு, பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி பிற்பகல் 7 மணியளவில் தோரணங்கள் கட்டப்பட்டு ஏராளமான வாழைக் கன்றுகளை கட்டி கோலாகலமாக ஆயுத பூஜையை விழாவாகக் கொண்டாடினர். கழகத் தோழர்கள் விரைந்துச் சென்று அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது உள்ளே விழா கொண்டாடிக் கொண்டிருந்த அலுவலகத்தோடு தொடர்பில்லாத இடைத் தரகர்கள் கார் ஓட்டும் பயிற்சி நடத்துவோர் மற்றும் அர்ச்சகர் விளக்குகளை அணைத்தனர். இருள் மயமானது. அதிகாரிகள் அலுவலகத்தை அப்படியே விட்டுவிட்டு வெளியேறினார்.

காவல்துறையினர் விரைந்து வந்து தோழர்களைக் கைது செய்வதாக அறிவித்தனர். நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அரசு ஆணைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி புகார் மனுவைப் பெற்ற காவல்துறை தண்டனைச் சட்டப் பிரிவு 141, 448, தமிழ்நாடு சட்டம் 3(1) பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மாஜிஸ் திரேட் இல்லத்தில் நள்ளிரவில் நேர் நிறுத்தி, விடியற்காலை 4 மணியளவில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அரசு விடுமுறை காரணமாக தோழர்கள் கிளைச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். நாகை மண்டல செயலாளர் வழக்கறிஞர் இளைய ராஜா, மாவட்ட செயலாளர் கே. மகேஷ், நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகர செயலாளர் அன்பரசன், நகர துணைச் செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் ரமேசு, நடராசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள்.

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையைக் கண்டித்து கண்டன சுவரொட்டிகள் நகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கிடையே தோழர்கள் அடைக்கப்பட்டிருந்த கிளைச் சிறை வாயிலிலேயே ஆயுத பூஜைகள் கொண்டாட சிறைத் துறையினர் முற்பட்டபோது கழகத் தோழர்கள் நேரில் சென்று சட்டவிரோதமாக ஆயுதபூஜை கூடாது என்பதை எடுத்துக் கூறி நிறுத்தினர். கழகத் தோழர் விஜயராகவன் அலைபேசி வழியாக இத்தகவல்களைத் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் : கோவை-மேட்டுப்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை பேருந்து நிலையத்தில் கழகத் தோழர்கள் முருகேசன், ரவி ஆகியோர் பொது மக்களிடம் ஆயுத பூஜை, சரசுவதி பூஜைகளின் அறிவுக்கொவ்வாத கற்பனைக் கதைகளையும், பூஜைகளால் நடக்கும் வீண் விரயங்களையும் விளக்கி துண்டறிக்கைகளை வழங்கினர். அப்போது ஆர்.எஸ் .எஸ் .சைச் சார்ந்த ராஜ்மோகன் என்பவரோடு ஒரு கும்பல் வந்து கழகத் தோழர்களிடம் தகராறு செய்து தாக்கியது. செய்தியறிந்த கோவை மாவட்டக் கழகக் காப்பாளர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து கருத்துப் பிரச்சாரத்தை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டபோது அவரையும் தாக்கத் தொடங்கினர். காவல்துறையினர் அனைவரையும் காவல்நிலையம் கொண்டு சென்றனர். செய்தியறிந்து மேட்டுப்பாளையம் மற்றும் கோவையிலிருந்து கழகத்தோழர்கள் ஏராளமாக காவல்நிலையத்தில் திரண்டனர். காவல்துறையினர் தாக்கிய ஆர்.எஸ் .எஸ் .காரர்கள் 3 பேர் மீதும், கழகத் தோழர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு இல்லம் திரும்பினார். தாக்குதல் தொடர்பாக மேலும் சில ஆர்.எஸ் .எஸ் ., பா.ஜ.க.வினரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தாலும் காவல்துறை செயல்பாடு ஆர்.எஸ் .எஸ் .காரர்களுக்கு ஆதரவாகவே இருந்தது. கழகத் தோழர்கள் மீது தண்டனைச் சட்டம் 294(பி), 505(சி), 506/1 கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

விழுப்புரத்தில் : விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் 12.10.2013 அன்று மாலை 3 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் பெரியார் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ச. பெரியார் வெங்கட், க. ராமர், ந. அய்யனார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சி. சாமிதுரை, சே. நகபிள்ளை, குப்புசாமி, திருநாவுக்கரசு, சாத்தூர் மூர்த்தி, டார்வின் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கழகத் தோழர்கள், அரசு

ஆணை நகலை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று வழங்கினர். இதனால் பல இடங்களில் ஆயுத பூஜை போடுவது நிறுத்தப்பட்டது.

சேலத்தில் : அரசாணையை மீறி சட்ட விரோதமாக அரசு அலுவலகங்களில் சரஸ் வதி பூஜை நடத்துவதைக் கண்டித்து 7.7.2013 காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டத் தலைவர் சூரிய குமார், கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி உட்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் : சென்னையில் 10.10.2013 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட தலைவர் பா.ஜான், செயலாளர் இரா. உமாபதி, அமைப்பாளர் சுகுமாரன், காஞ்சி மாவட்ட தலைவர் டேவிட், காஞ்சி மாவட்ட பொருளாளர் சேகர் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் உமாபதி, டேவிட், அய்யனார், தஞ்சை சிவசுப்ரமணியன், குடியாத்தம் சிவா ஆகியோரைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கண்டன உரையாற்றினார்.

கன்னியாகுமரியில் : கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், அரசு  அலுவலகங்களில் ஆயுத பூஜை போடுவதற்கு எதிரான அரசு ஆணை, நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி, ஆயுத பூஜை மடமைகளை விளக்கிடும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த குமரி மாவட்ட இந்து முன்னணியினர், மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் கழகத் துண்டறிக்கைகளைக் காட்டி புகார் கூறினர். இதை மாவட்டத்தில் அனைத்து ஏடுகளும் பெரிய செய்திகளாக வெளியிட்டன. மாவட்ட காவல்துறை அதிகாரி, கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சதாவை நேரில் வந்து விளக்கம் தர அழைத்துள்ளார்.

திருச்சியில் : திருச்சி மாவட்ட கழகம் சார்பாக ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு 10.10.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் அனைவரும் அண்ணாவின் உருவம் பொறித்த முகமூடியுன் கலந்து கொண்டனர். பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் எஸ் .எஸ் . முத்து, தண்டோரா போட்டு அண்ணாவின் அரசு ஆணையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி, மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்ட அமைப்பாளர் குணா, மாவட்டப் பொருளாளர் மனோகரன், திருவரங்கம் நகர அமைப்பாளர் அசோக், ஆதித் தமிழர் பேரவையின் மகளிரணி மாவட்டத் தலைவர் ராசாத்தி அம்மாள், மாவட்ட செயலாளர் செங்கை குயிலி, நிதிச் செயலாளர் தில்லை சரவணன், இளந்தமிழர் பேரவை மாவட்டப் பொருப்பாளர் மலர்மன்னன், கழகத் தோழர்கள் தமிழ் முத்து, மணி, பழனி, முருகானந்தம், சென்னை தோழர் டார்வின்தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 17102013 இதழ்

You may also like...