மண்ணை மணந்த மணாளர் பெரியார்

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கேட்ட தோழர்களிடம், ‘தமிழகத் தலைவர்கள் – தமிழுக்காக உழைத்தவர்கள் – தமிழ் எழுத்தாளர்கள் – தமிழ்ப் பேச்சாளர்கள்’ என்ற நான்கு வகைப்படுத்தலிலும்  பெரியார் எதிலும் இடம் பெறவில்லை என்று அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்ட தாம்.

பெரியாருக்கு சான்றிதழ்களை வழங்கும் உரிமைகளை இவர்களே கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவில் பேசிய மருத்துவர் இனியன் இளங்கோ, தனது உரையிலேயே பெரியார் புறக்கணிப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியார் பேச்சு-எழுத்து பற்றி ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ வ.ரா. என்று அழைக்கப்படும் ராகவ அய்யங்கார், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, திரு.வி.க. ஆகியோரின் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறோம்.

வ.ரா. எழுதுகிறார்

“தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாத்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. ‘பாதகன்’ என்று சிலர் உறுமுகிறார்கள். வீட்டைக் கட்டி வைக்கோலைத் திணிப்பதைக் காட்டிலும், வீடு கட்டாமலே வைக்கோலைப் போராய்ப் போடலாம் என்ற சிக்கன யோசனை சொல்வது தவறா? அழுகி அழுகிப் போய் புழு நெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும், உயிர் விடுவது உத்தமம் என்று  அபிப்பிராயம் கொடுத்தால், “சாகச் சொல்கிறான் பாவி” என்று திட்டுவதா?

கண்டவர்க்கெல்லாம் குனிந்து சலாம் செய்து மண்ணோடு மண்ணாய் ஒட்டிக்கொண்டு மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், “பாபி, நம°காரத்தைக் கண்டிக்கிறான்” என்று அபத்தம் பேசுவதா? மனசாட்சிக்கும், தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை, நா°திகன் என்று அழைக்கும் அன்பர்கள், நா°திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன்…

அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பதுபோல் வந்து மொய்ப்பார்கள்.

அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை… செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப் படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு, அவர் கண்ணில் அரைகுறையாகப் பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்ல முடியும்?)

ஆனால், மலைகளையும், மரங்களையும், வேரொடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.

(1933இல் ‘காந்தி’ இதழில் எழுதியது)

கல்கி கிருட்டிணமூர்த்தி

பிரபல பார்ப்பன எழுத்தாளர் கல்கி கிருட்டிணமூர்த்தி பெரியாரைப் பற்றி எழுதுகிறார்.

சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.

பண்டிதரின் பிரசங்கத்தை, அரை மணி நேரத்துக்குமேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. ‘பஞ்சாப் படுகொலை’யைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால், பண்டிதர், சுராஜ்உத்டௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885 ஆம் வருஷத்தில் காங்கிர° மகாசபை °தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும்.

ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவு தான் நீட்டினாலும், அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்?

தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான், என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக் குள்ளே முதன்மை °தானம் தயங்காமல் அளித்து விடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில், முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங் களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக் கின்றனவோ நானறியேன்!

தாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள்தாமாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய், பயனிலைகள், ஒருமை – பன்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவைகளைப் பற்றியும் அவர் கவலைப்படு வதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ, சொல்ல வேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப் படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேக மில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத் திறமை அபாரமானது. “இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்” – என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.

(1931இல் ‘ஆனந்தவிகடன்’ இதழில் எழுதியது)

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்

தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெரியாரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

வைக்கம் வீரர்களுக்கு பல திற அணி களுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். மயிலை மந்தைவெளியிலே (8.3.1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நித்னை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு ‘குகானந்த நிலைய’த்திலே, நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார்; யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடிய படியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. ‘மழை பெய்தது தெரியுமா?’ என்று நண்பரைக் கேட்டேன். ‘மழையா?’ என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு, 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம், நாயக்கர் மனத்தின் மீது சென்றது. ‘அவர் மனம் பொன்னா? சஞ்சல முடையதா?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

1942 ஆம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆ°பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது, அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும், சண்முகானந்த சாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், “இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது?” என்று ஒருவரோடொருவர் பேசியது, என் காதுக்கு எட்டியது. அழுகைக்குக் காரணம்

என்ன?

அஞ்சாமையும், உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங் குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான், நாகரிக நாடாக இருக்க முடியும். கருத்து வேற்றுமைக்கு இடங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான், மிருக ஆட்சியாகத் தான் காட்சி யளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும், சென்னை வந்தால், அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம் ஈரோடு செல்வன்.

இராமசாமி பெரியார், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ, தென்னாட்டிலும், வட நாட்டிலும், பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கிறது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா.வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.

ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந் துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா. வின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை.

பெரியார் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால், எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக் கிறார்.

இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.

“…. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” இது பெரியாருக்குத்தான் பொருந்தும்.                             ட

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...