பெரியாரின் விடுதலைப் பெண் தோழர் கௌசல்யா கடிதம்

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண்டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடையவராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன். மனிதன் என்பவன் சமூகவிலங்கு என்ற அடிப்படையில் பார்த்தால் சமூகம் குறித்து எந்த அக்கறையும் சிந்தனையும் இல்லாதவன் ஆறறிவு உள்ள மனிதனாகக் கருதப்பட மாட்டான். அவன் வெறும் ஐந்தறிவு கொண்ட விலங்கு என்றுதான் வரையறுக்க முடியும். ஆம் சமூகவாழ்வோடு இணைந்திராத விலங்குகள் சமூகம் பற்றி கவலைப்படாதுதான். ஆனால் சமூகவாழ்வோடு பிண்ணிப்பிணைந்த மனிதன் சமூகம் பற்றி சிந்திக்க சமூகத்திற்கு பங்காற்ற கடமைப்பட்டவன். இப்படிப்பட்ட சமூகமனிதனாக உருவாகாதவரை நாம் ஆறறிவு மனம் கொண்ட மனிதர்கள் இல்லை வெறும் விலங்குதான். கல்வி இல்லையானால் கண்கள் வெறும் புண்கள்தான். சமூகத்திற்குப் பங்காற்றாத மனிதன் வெறும் விலங்குதான்.

அப்படிப்பார்த்தால் என் காதல்தான் சங்கரின் மீது நான் கொண்ட காதல்தான் என்னைச் சமூக மனுசியாக்கியதற்கு அடிப்படை. அது அடிப்படையாக இருந்திருக்கலாம். அதே காதல் சாதி வெறியால் கொல்லப்பட்டதன் விளைவாக எனக்கென்று  ஒழிப்பு எனும் குறிக்கோள் வந்து சேர்ந்தது. இன்று சாதி ஒழிப்பிற்காக இயங்குகிறேன். இப்போது நான் விலங்கு அல்ல. இப்போதுதான் நான் மனுசி! என் காதலும் காதலுக்கான நீதியும்தான் என்னைச் சமூகமனுசியாக்க அடிப்படை எனலாம். ஆனால் அப்படி ஒரு சமூக மனுசியாக வாழ்வதற்குரிய தெம்பையும் விடுதலை உணர்வையும் வலிமையையும் என்னுள் விதைத்தது தந்தை பெரியார்தான்.  நான் பெண்ணுக்குரிய அடக்க ஒடுக்கத்தோடு, பெண்ணுக்குரிய அழகு நளினங்களோடு பெண்ணுக்குரிய வெட்கம் கண்ணீரோடு வாழ்வது என்னைச் சாதி ஒழிப்புக்காரியாக சமூகமனுசியாக இயங்க வைக்குமா..? ஒருபோதும் முடியாது. பெண்ணுக்குரிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற அயோக்கியத்தனத்தைத் தூக்கியெறியாமல் நான் உயிரோட்டமான சமூகமனுசியாக இருக்கவே முடியாது. சமூகமனுசியாக காதல் ஆக்கியிருக்கலாம். ஆனால் அதற்கேற்ற விடுதலைப் பெண்ணாக என்னை ஆக்கியது பெரியார்தான். அப்படிப்பார்த்தால் உள்ளத்தளவிலேயே என்னை வலிமையுள்ளவளாக திமிறும் நெஞ்சம் கொண்டவளாக எனைப் பெற்றது தந்தை பெரியார்தான். இந்தப் பொருளில் சொன்னால் பெரியார்தான் என்னை விடுதலை பெண்ணாக இன்னொரு முறை பெற்றெடுத்த தந்தை. என்னைப் பெற்றெடுத்தத் தந்தை என்ற பொருளில்தான் நான் அவரை தந்தை பெரியார் என அழைக்கிறேன்.

பெண்களைப் பார்த்து நீ கிராப் வெட்டிக் கொள், பேண்டு சர்ட் போட்டுப் பழகு, நகைகள் அணியாதே, பூவைத்துக் கொள்ளாதே, கணவன் அடித்தால் திருப்பி ஓங்கி அடி, உனக்குத் தாலி கட்டினால் அவனுக்கு நானும் தாலி கட்ட வேண்டாமா எனக் கேள் என்றெல்லாம் தள்ளாடும் கிழவன் கைத்தடி ஊன்றி நடக்கும் கிழவன் சொன்னான். அவன்தான் சொன்னான். அவன்மட்டும்தான் சொன்னான்.

இப்போது யோசித்துப் பாருங்கள். என் வயதொத்த ஒரு இளைஞன் கூட இப்படிப் பேசத் தயங்குவான். பெண் இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்றுதான் கருதுவான். இப்படி இன்றுள்ள ஆண்களோடு பெரியார் எனும் ஆணை ஒப்பிட்டுப் பாருங்கள் அவருடைய மேன்மை புரியும். அவர்தான் என்னை விடுதலைப் பெண்ணாக இன்னொருமுறை பெற்ற தந்தை என்பேன்.

இன்று அனிதாவை இழந்துள்ளோம். பெரியார் இருந்திருந்தால் அனிதாவை இழக்கும் சூழலே வந்திருக்காது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை போராடிச் செய்யவைத்த பெரியார் இல்லாத வெற்றிடம் அனிதாவின் இழப்பால் உணர்கிறோம். நாமும் போராடுகிறோம் ஆனால் பெரியார் எனும் பெரும் ஆளுமை இருந்திருக்குமானால் நீட் இங்கே நுழைய அல்லது நுழைக்க எவனும் எண்ணியுமிருக்கமாட்டான். அனிதாவை இழந்திருக்க மாட்டோம். அனிதாக்களின் விடுதலை வாழ்வை கல்வி உரிமையை வென்றெடுக்க இன்றும் பெரியார் எனும் பேராயுதம் நமக்குத் தேவை. ஆயுதம் இல்லையேல் பிரசவமே இல்லை. நம் விடுதலைக்கு பெரியாரியமே பெரும் ஆயுதம்.! இன்னும் கூர்மை மழுங்கா ஆயுதம்! வாருங்கள் விடுதலை வென்றெடுக்க பெரியார் எனும் ஆயுதம் ஏந்துவோம்.

தோழர் கெளசல்யா அவர்களின் (17.09.2017) பதிவு : கோத்தகிரியில் இன்று பெரியார் விழா.

gow

You may also like...