கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ கருத்தரங்கம் மதுரையில் 03022016
கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தோழர் முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார்.
கருத்தரங்கில் ரோகித் வெமுலாவின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச் சரியாக பின்பற்றியிருந்தால் ரோகித் போன்றோரின் மரணங்களைத் தடுத்திருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டனர்.
குறிப்பாக ஹென்றி டிபேன் உரையாற்றும்போது, பலகலைக் கழக மானியக் குழுவின் தலைவராக பேராசிரியர் தோரட் இருந்தபோது 2012ஆம் ஆண்டில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் குறைதீர்க்கும் மையங்கள் அமைக்கப்பட்டு, தலித், பழங்குடி, சிறுபான்மை, மாற்றுத்திறன், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பாகுபாடு போன்ற புகார்களை விசாரித்துத் தீர்வு காண்பது குறித்து வெளியிட்ட் அறிவிக்கையை விளக்கினார். அதேபோல்,பல்கலைக் கழக மானியக் குழு 2013ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிட்டுள்ள ’உயர்கல்வி நிறுவனங்கள் சமத்துவ மேம்பாட்டு நெறிமுறை அறிவிக்கை’யில்,பாகுபாடு, சமத்துவம், தொல்லைகொடுத்தல், கேலிசெய்தல், பாதகமாக நடத்தல், பழியெடுத்தல் போன்றவற்றை வரையறை செய்துள்ளதையும், மாணவர்கள் குறைகளை அறிவதற்கும்,புகார்களைப் பெறுவதற்கும், மேல்நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரமுள்ள ‘பாகுபாடு களைவு அதிகாரி’ ஒருவர் ஒவ்வொரு கல்லூரியிலும் நியமிக்கப்பட வேண்டுமென்றும், அம்முறையில் செயல்படாத கல்லூரியின் அனுமதியை இரத்து செய்யவும், மானியங்களை நிறுத்தவும், பலகலைக் கழக இணைப்பைக்கூட இரத்து செய்யவும் உள்ள விதிமுறைகளையும் விளக்கினார். நம்மையொத்த கருத்துள்ளவர்கள் இவ்விதிமுறைகளைக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சரியாக பின்பற்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தோழர் கார்த்திக் நன்றிகூற கருத்தரங்கம் இரவு 8-00 மணியளவில் நிறைவடைந்தது.