தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம்.

பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த பார்ப்பன மதவாத சக்திகள், திராவிட அரசியல் கட்சிகள் மாறி மாறி வைத்த அரசியல் கூட்டணிகளால் தமிழகத்தில் தங்களை காலூன்றிக் கொண்டு அமைப்பு ரீதியாக வலிமை பெறக்கூடிய தீவிர செயல் திட்டங்களில் இறங்கிவிட்டனர். இதற்கு ஒத்திசைவாக ஜாதிய கட்சிகள் ஜாதிய அணி திரட்டலுக்கான முயற்சிகளில் இறங்கி, தலித் மக்களை எதிரிகளாகக் கட்டமைத்து, தங்களை வளர்த்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

மற்றொரு புறத்தில் தமிழ் தேசியம் பேசும் சக்திகள், பெரியாரைத் தனிமைப்படுத்திடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். பெரியார் தமிழறிஞர் அல்ல என்றும், தமிழ்ப் பகையாளர் என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆக, திராவிடக் கட்சிகள், மதவாத அமைப்புகள், ஜாதியக் கட்சிகள், தமிழ் தேசியம் பேசும் சில அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே ‘பெரியார் எதிர்ப்பு’ என்ற ஒரே பார்வை மேலோங்கி நிற்பதைப் பார்க்க முடிகிறது. பெரியார் என்றுமே தன்னை தமிழ் அறிஞராகவோ, பேச்சாளராகவோ, எழுத்தாளராகவோ கூறிக் கொண்டதில்லை. தன்னை ஒரு கருத்தாளன் என்றே அவர் வரையறுத்துக் கொண்டார்.

“நாம் பத்தாவது வயதிற்குமேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்கு புத்தக ஆராய்ச்சி இல்லை. நம் சக்திக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதை கண்ணியமாய் ஒப்புக் கொள்கிறோம்.”        – பெரியார் (குடிஅரசு 25.12.1927)

– என்று நேர்மையாக அறிவித்தவர் பெரியார். ஆராய்ச்சியாளர்களும், தமிழில் புலமைப் பெற்றவர்களுமே தமிழர் வரலாற்றில் மதிப்புக்குரியவர்கள் என்ற பார்வைக்குப் பின்னால், பச்சையாக பதுங்கிக் கிடப்பது, பார்ப்பனியம் பொதுப் புத்திக்குள் நுழைத்து வைத்திருக்கும் ‘மேட்டிமை’ கருத்தியல் தான்! சமுதாயத்தின் வளர்ச்சி நோக்கியப் பார்வையில் பெரியார் முன்வைத்த சிந்தனைகளின் உள்ளடக்கத்தைப் பகுத்துப் பார்ப்பது என்பது வேறு; அதற்கு உள் நோக்கம் கற்பித்து சேறு வாரி இறைப்பது என்பது வேறு. மொழி பற்றிய பெரியாரின் கருத்துகளையும் அவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்துவதே சரியான அணுகுமுறை யாகும். எந்தத் தமிழர்களின் மானத்துக்கும் உரிமைக்கும் போராடினாரோ, அதே மக்களை ‘கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளே’ என்று பெரியார் உரிமையோடு கூறினார். அப்படி விளித்தபோது, அதற்காக அவரது உழைப்பால் பயன்பெற்ற சமுதாயம் அவர் மீது ஆத்திரம கொண்டு பாய்ந்துவிடவில்லை. அப்படிப் பேசுவதற்கு உரிமை அவருக்கு உண்டு என்றே உணர்வுள்ள தமிழர்கள் அங்கீகரித்தார்கள். பார்ப்பனர்கள்தான், ‘காட்டுமிராண்டிகள்’ என்று கூறுகிறார், என தூண்டிவிட்டு எழுதினர்; பேசினர்.

மொழியின் வளர்ச்சிக்கும், அறிவியலுக்கும் பெரியார் முன் வைத்த கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பித்து, ‘பெரியார் தமிழைக் கொச்சைப்படுத்து கிறார், பார்’ என்று அதே பார்ப்பனியத்தின் குரலில் எழுதவும் பேசவும் கிளம்பியிருக்கிறார்கள். “திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்” என்று கூட பெரியார் கூறினார். திருமணமானவர்களிடம் போய் உங்களை எல்லாம் கிரிமினல் என்று கூறி தமிழ்ப் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிறார், பெரியார் என்று, இவர்களே பேசினாலும் வியப்பதற்கில்லை.

பார்ப்பனியம் முழுமையாக தமிழனைஅடிமைப்படுத்தியிருந்த சமூகத்தில் வடமொழிகளை விரட்டி, திருமணம், இறுதி நிகழ்வு, வீடு திறப்பு என்று ஒவ்வொரு நிகழ்விலும் தமிழை ஒலிக்கச் செய்தவர் பெரியார். தமிழ் எழுத்துக்களின் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதோடு, தமிழறிஞர்களுக்கு சமுதாயத்தில் சுயமரியாதையை உருவாக்கியதிலும் பெரியாருக்கு பங்கு உண்டு. தமிழரின் ‘வரலாற்றுப் போக்கைத் திருப்பிய’ ஒரு தலைவரின் தன்னலமற்ற – நேர்மையான சமுதாயத் தொண்டை புறந்தள்ள வேண்டும் என்ற சதி தொடங்கியிருக்கிறது. இத்தகைய தமிழகச் சூழலில் சுயமரியாதை சமத்துவத்தை இலக்காகக் கொண்ட ஒரு இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய களத்தில் நாம் நிற்கிறோம்.

ஆற்ற வேண்டிய கடமைகளின் அவசியத்தை நெஞ்சில் நிறுத்தி, தோழர்கள் களப்பணியாற்ற கடமை அழைக்கிறது! தோழர்களே மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக இயக்கத்துக்கு புதிய தோழர்களைக் கொண்டு வந்து இயக்க நிதி திரட்டலையும் துரிதப்படுத்துங்கள் என்று உரிமையோடு அழைக்கிறோம்!

பெரியாரியமே இன விடுதலைக்கான சரியான பாதை!

பெரியார் முழக்கம் இதழ் 12122013

You may also like...