தடை தகர்ந்தது!
• வழக்கம்போல் சேலம் காவல்துறை மாநாட்டுக்கு கடைசி நேரத்தில் பிப்.17ஆம் தேதி அனுமதி மறுத்தது. உடனே உயர்நீதிமன்றத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் சார்பில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, மனுவை தாக்கல் செய்து வாதாடினார். மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் மாநாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. சரியாக 8 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது.
• மாநாட்டு அரங்கில் பெரியார்-அம்பேத்கர் கருத்துகளை தலைவர்களின் படங் களோடு பதாகைகளாக வைக்கப்பட் டிருந்தன.
• சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் பதாகைகள் கண்காட்சியாக வைக்கப்பட் டிருந்தது.
• மாநாட்டு அரங்கிற்கு வெளியே பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டியிருந்தனர்.
• காலை கருத்தரங்கில் நேரு அரங்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்; ஜாதியை ஒழிக்கக் கூடியவர்கள்” என்ற ‘பாட்ஜை’ சட்டைகளில் குத்தியிருந்தனர்.
• திறந்தவெளி மாநாட்டில் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.
• பொது மக்கள் ஏராளமாக திறந்தவெளி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். 750 இருக்கைகள் நிரம்பி வழிந்ததோடு இரண்டு பக்கத்திலும் ஏராளமாக நின்று கொண்டும் கருத்துகளைக் கேட்டனர்.
கழகத்தின் அடுத்த மாநாடுகள் தூத்துக்குடி – சங்கராபுரத்தில்!
ஈரோடு, சென்னை, சேலத்தைத் தொடர்ந்து அடுத்த பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு ஜன.23ஆம் தேதி தூத்துக் குடியிலும், காந்தியார் படுகொலை செய்யப் பட்ட நாளான ஜன.30இல் சங்கராபுரத்திலும் நடக்க இருக்கிறது. கழகத் தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர்.
பெரியார் முழக்கம் 24122015 இதழ்