கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்
தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும், மேலவையிலும் (2.12.1970) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து வைணவப் பார்ப்பன மடாதிபதியான எத்திராஜ ராமானுஜ ஜீயர் மற்றும் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட வேறு 11 பேரும் சேர்ந்து நேராக உச்சநீதிமன்றத்தில் தனித்தனி ரிட் மனுக்களாக வழக்கு தொடர்ந்தனர். வழக்கை திரைமறைவிலிருந்து, இறந்துபோன காஞ்சி சங்கராச்சாரி இயக்கினார். மனுதாரர்கள் சார்பில் பிரபலமான வழக்கறிஞர்கள் நதானி பல்கிவாலா, பராசரன் போன்றவர்கள் வாதாடினார்கள். (அதே பராசுரன்தான், இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர் களுக்காக வாதாடினார்) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி தலைமையிலான அய்ந்து நீதிபதிகளடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் பரம்பரை அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டது. ஆனால் நியமிக்கப்படும் அர்ச்சகர்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ஆகமங்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக அனுமதிப்பது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய உச்சநீதிமன்றம், ஆகமங்களால் அதிகாரம் அளிக்கப்படாத எவர் ஒருவர் விக்கிரகத்தைத் தொட்டாலும் தீட்டுபட்டு விடும் என்று தர்மசாஸ்திரங்களிலிருந்து எடுத்துக் காட்டியது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமை (25, 26ஆவது பிரிவுகள்) மதத்தின் கோட்பாடு, மத நம்பிக்கைகள் என்பதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. ஒரு மதத்தைப் பின்பற்று வதற்கான நடைமுறைகளும், அதாவது சடங்குகள், கிரியைகள், ஆச்சாரங்களும் மதச் சுதந்திரத்துக்கான சட்டபூர்வ உரிமைதான் என்று கூறியது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தின் நோக்கம் இந்தத் தீர்ப்பின் வழியாக சிதைக்கப் பட்டது. பாரம்பர்ய அர்ச்சகர் உரிமை என்ற முறையை மட்டும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. எனவேதான் அன்றைக்கு ‘விடுதலை’ –
“ஆபரேஷன் வெற்றி; நோயாளி மரணம்” என்று மிகச் சரியாகவே எழுதியது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்த பெரியார், 1972 முதல் 1973 டிசம்பர் 19ஆம் தேதி தனது இறுதிப் பேருரை வரை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மாற்றப்பட்டு, ‘சூத்திர’ இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராடினார்; எழுதினார்; பேசினார். சென்னை பெரியார் திடலில், தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு (1973, டிசம்பர் 8, 9) ஒன்றைக் கூட்டினார். பெரியார் மரணமடையும் வரை பெரியரின் இறுதி இலட்சியம் வெற்றி பெறாத நிலையில்தான் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது இரங்கல் உரையில், “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியாமலே அவரை அடக்கம் செய்து விட்டோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த முக்கிய பிரச்சினை நீண்டகாலம் அப்படியே கிடப்பில் போட்ட நிலையில், பெரியார் திராவிடர் கழகம், 2003இல் இந்தப் பிரச்சினைக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கோயில் கர்ப்ப கிரக நுழைவுப் போராட்டத்தை ஜன.30இல் அறிவித்தது, சுமார் 1000 தோழர்கள் கைதானார்கள். இடையில், புதிய ஜனநாயக முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்கள், திருவரங்கம் கோயிலுக்குள் கர்ப்பகிரக நுழைவுப் போராட்டத்தை நடத்தினர்.
2006ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது, “உரிய கல்வி பயிற்சி பெற்ற எந்த ‘இந்து’வையும் இந்து கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்” என்ற அரசாணையை (23.5.2006) பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது (29.8.2006). “ஜாதி மற்றும் பிரிவு பாகுபாடின்றி கோயிலில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள். ‘பழக்க வழக்கங்கள்’ என்ற அடிப்படையில் இந்த நியமனங்களை தடைப்படுத்த முடியாது. இதற்கேற்றவாறு இந்து அறநிலையத் துறையின் 55ஆவது பிரிவு ஏற்கனவே திருத்தப்பட்டிருக்கிறது” என்று சட்டம் கூறியது.
இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட தற்கான பின்னணியில் ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு இருந்தது. அதுதான் கேரளாவில் ஆதித்யன் என்ற நம்பூதிரிப் பார்ப்பனர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. நம்பூதிரி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக வரவேண்டிய கோயிலில் வழமைக்கு மாறாக ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, அதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய அமர்வு, நம்பூதிரி பார்ப்பனரின் மனுவை தள்ளுபடி செய்து முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியது.
“இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன்னால் இப்படி ஒரு பழக்கம் (ஒரு குறிப்பிட்ட ஜாதியாரே அர்ச்சகராக வேண்டும் என்ற பழக்கம்) இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, பழைய வழக்கத்தைக் காட்டி, அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையை கோர முடியாது. அரசியல் சட்டத்தால் மனித உரிமைகள், கவுரவம் – சமூக சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டப் பிறகு, இதற்கு நேர் எதிரான வேறு உரிமைகள் ஏதும் இருக்க முடியாது…. அர்ச்சகர்களாக நியமிக்கப் படுபவர்கள் குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்; அந்த ஜாதியின் பெற்றோர் களுக்குப் பிறந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அத்யாவசியமானது அல்ல. அப்படி சொல்வதற்கு அடிப்படையும் இல்லை” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்புதான் மீண்டும் தமிழக அரசு ஒரு சட்டத்தைப் பிறப்பிக்க காரணமாயிற்று.
தமிழக அரசின் 2006ஆம் ஆண்டின் ஆணை மற்றும் சட்டத்தை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு, அனைத்து இந்துப் பிரிவினரும் அர்ச்சகராகும் உரிமைக்கு வழி வகுத்திருக்கிறதா என்பது இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்தத் தீர்ப்பை பார்ப்பனர்கள் வரவேற்கிறார்கள். அதே போன்று திராவிடர் கழகமும் வரவேற்றுள்ளது. பார்ப்பனர்கள் போட்ட வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும், தமிழக அரசின் சட்டம் செல்லத் தக்கது அல்ல என்று நீதிமன்றம் கூற வில்லை என்பதும் உண்மைதான். ஆனால், உச்சநீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தின் உயிரைப் பறித்து, பிணமாக நடமாடவிட்டிருக் கிறது என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
உண்மையில், பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கு, ஆதித்தன் வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியவாறு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம் – தீண்டாமை ஒழிப்புக்கு எதிரானது. இந்தச் சூழலில் அரசியல் சட்டத்தின் சமத்துவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டிக் கொண்டே வர்ண ஜாதி வேற்றுமையை உறுதிப்படுத்தும் ‘ஆகமங்களுக்கும்’ உச்சநீதி மன்றம் உயிர் கொடுத்திருக்கிறது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
“ஜாதி-பிரிவு-பால் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற அரசியல் சட்டத்தின் உறுதிப்பாட்டை மீறும் வகையில் அர்ச்சகர்கள் தேர்வு இருந்துவிடக் கூடாது” என்றும், “அனைத்து மத நம்பிக்கைகள் – மத நடைமுறைகளைவிட அரசியல் சட்டம் தனது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள அதேபோழ்து இதற்கு நேர்மாறான கருத்து களையும் திட்டவட்டமாக அறுதியிட்டுக் காட்டியிருக்கிறது.
‘பாகுபாடு காட்டக் கூடாது’ என்ற அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உறுதியை மீறி நிற்கிறது. ஆகமம்! சத்திரியரும் வைசியரும் மகா மண்டபத் துக்குள்ளும் ‘சூத்திரர்’ கோபுரத்துக்கு வெளியில் நின்றும் தரிசனம் செய்ய வேண்டும் என்றே பெரும்பான்மையான ஆகமங்கள் விதிக்கின்றன.
கர்ப்பகிரகத்துக்குள் நுழையவும் பூஜைகள் நடத்தவும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தனித்த உரிமையுடையவர்கள் என்ற ஆகமங்களின் விதிகளை நியாயப்படுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதை தீண்டாமைக் கொள்கையாக கருத முடியாது. அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கு எதிரானதும் அல்ல என்று கூறியிருக்கிறது.
(agamas was not violation of the right to equality… the exclusive right given to a particular group or denomination to enter the sanctum sanctorum of a temple and perform rituals could not be construed a practice of untouchability)
அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளில் மதக்கோட்பாடு – மத நம்பிக்கைகள் மட்டுமல்ல; மதத்துக்காக பின்பற்றப்படும் சடங்குகள், கிரியைகள்கூட மத சுதந்திரத்துக்கான உரிமைதான் என்று 1971ஆம் ஆண்டு வழக்கில் (சேஷம்மாள் வழக்கு) உச்சநீதிமன்றம் கூறியதை அப்படியே இப்போதும் இந்தத் தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.
பார்ப்பனர்களில்கூட எல்லோரும் கருவறைக்குள் நுழைந்துவிட முடியாது என்றும், அதற்கான ஆகம தகுதியுடைய பார்ப்பனர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும் என்றும் பார்ப்பனர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், ‘சூத்திரர்கள்’ ஒட்டு மொத்தமாக ‘தீண்டாதவர்களாக’ வெளியில் நிறுத்தப்படுவது குறித்து இவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். பார்ப்பனர்களின் இந்த வாதத்தை இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பும் நியாயப்படுத்தியிருக்கிறது. இதற்கு வலிமை சேர்க்க ஒரு நூற்றாண்டுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ‘கோபால மூப்பனார்” வழக்கின் தீர்ப்பை எடுத்துக்காட்டியிருக்கிறது.
“சில ‘பிராமணர்களை’க்கூட கருவறைக்குள் பூஜை செய்ய ஆகமம் மறுத்திருக்கிறது. எனவே ஆகமங்கள் ஜாதி அடிப்படையில் உருவாக்கப்பட வில்லை” என்பதே உச்சநீதிமன்றம் எடுத்தக்காட்டியுள்ள இந்தத் தீர்ப்பு.
உச்சநீதிமன்றம், ஆதித்யன் வழக்கில் வழங்கிய தீர்ப்பை இந்த வழக்கோடு ஒப்பிடுவது பொருத்தமற்றது என்று நிராகரித்துவிட்டது. 1971ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கில்ஆகமங்களை மீறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையே முதன்மையாக ஏற்றுக் கொண்டு, அந்த அடிப்படையிலேயே இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத நம்பிக்கைக்கு அடிப்படையே ஆகமம்தான். ஆகமத்துக்கு எதிராக நடத்தப்படும் சடங்குகளால் விக்ரகம் (சிலை) தீட்டாகிவிடும். ஜாதி-இன அடிப்படையிலான பாகுபாடுகளை மறுக்கும் அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்கோ, சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் 1955ஆம் ஆண்டு சட்டத்துக்கோ ஆகமம் எதிரானது அல்ல என்ற ‘சேஷம்மாள்’ வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, “தி.மு.க. ஆட்சியில் 1976ஆம் ஆண்டுக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கான சட்டத்தை அப்படியே தமிழகம் முழுமைக்கும் பொருத்திவிட முடியாது. ஒவ்வொரு கோயிலின் அர்ச்சகர் நியமனத்துக்கும் தனித்தனியே இந்தச் சட்டம் பொருந்தி வருகிறதா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போது பிரச்சினைகள் வருமானால் நீதிமன்றங்களிடமிருந்து தீர்ப்புகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தவிர்க்க முடியாதது என்றும் தீர்ப்பு கூறிவிட்டது.
(The validity of the impinged G.O. dated 23.5.2006 will have to be decided in each case of appointment of Archakas whenever and wherever the issue is raised. The necessity of seeking special judicial verdicts in the future is inevitable and unavoidable.)
இப்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற நம்முடைய இளைஞர்கள் 207 பேருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு கவலை இருக்கிறது என்றாலும் அதையும் தாண்டி கர்ப்பகிரகத்துக்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘தீண்டாமை’யும், ‘சூத்திர’ இழிவும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இறுதியான இலட்சியத்தை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்திருக்கிறது. எனவே, இந்தத் தீர்ப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வேதகாலம் தொடங்கி பார்ப்பனர்களின் ‘சமூக அதிகாரம்’ அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை பார்ப்பனரல்லாத மக்களிடம் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு கோரி நிற்கிறது.
பெரியார் முழக்கம் 17122015 இதழ்