திப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்?
கருநாடக மாநில அரசு திப்பு சுல்தானுக்கு அரசு விழா எடுத்ததை சகித்துக் கொள்ள முடியாத மதவாத சக்திகள் நடத்திய கலவரத்தில் இரண்டு பேர் பலியாகி விட்டனர். நடிகர் ரஜினிகாந்த், திப்பு சுல்தானாக ஒரு திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், பார்ப்பனர்கள் இல.கணேசனும், இராம. கோபாலனும், ரஜினிகாந்தை நடிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். திப்பு சுல்தான் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
தனது தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து, 1782இல் 29 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்து, மைசூர்ப் போரில் வீரமரணம் எய்தியவன் திப்பு சுல்தான். பிரிட்டிஷ் ஆட்சியை தனது படை வலிமையால் நடுங்க வைத்தவன். 1791இல் சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான சாரதா கோயிலை மராட்டியப் படை கொள்ளையடித்து, 17 இலட்சம் மதிப்புள்ள கடவுள் சிலை, நகைகளை வாரிச் சென்றது. அப்போது சிருங்கேரி மடத்தின் பார்ப்பன சங்கராச்சாரி சச்சிதானந்த பாரதி உயிர் தப்பி, திப்புவின் உதவி கேட்டு கடிதம் அனுப்பியபோது, மராட்டியப் படைகளை விரட்டியடித்து, சாரதா பீடத்தை மீட்டுத் தந்தது திப்பு சுல்தான் படைதான்.
மலபார் பகுதி திப்புவின் கட்டுப்பாட்டில் வந்தபோது, அங்கு பெண்கள் மேலாடை அணியாமல் இருந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவன் திப்பு. மைசூர் அரசில் தொழிற் சாலைகள் தொடங்க திட்டமிட்டு 3 கப்பல் கட்டும் தளங்களையும், கிருஷ்ணராஜ சாகர் அணைக் கட்டிற்கு அடித்தளமும் போட்ட தோடு, நிலமற்ற மக்களுக்கு நிலங் களை வழங்கத் தொடங்கினான். இங்கேதான் பிரச்சினை.
நில உரிமைகள் ஏதும் இல்லாத அக்காலத்தில் நிலங் களின் உரிமைகள் பார்ப்பனர் களின் ஏகபோகமாக இருந்தன. தொழிற்சாலைகளுக்கும் நிலமற்ற மக்களுக்கும் பார்ப்பனர் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்களை திப்பு சுல்தான் பறிமுதல் செய்தது தான் திப்பு சுல்தான் மீது பார்ப்பனர்களுக்கு அடங்காத கோபத்தை உருவாக்கி விட்டது.
அதன் காரணமாகவே பார்ப்பனியம் இன்று வரை திப்பு சுல்தானை வெறுத்து ஒதுக்குகிறது.
இஸ்லாமிய மன்னர்கள் என்றால், அவர்கள் எவ்வளவு நன்மை செய்தாலும் கெட்டவர் களாக சித்தரிப்பதும், இந்து மன்னர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் ‘உத்தமபுத்திரர்’ களாக வரலாறுகளைக் கட்ட மைப்பதும்தான் சங்பரிவாரங் களின் ‘வரலாற்றுப் பார்வை’!
பெரியார் முழக்கம் 19112015 இதழ்