மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்
1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. கருத்து மாறுபாடுகளையும் கடந்த பெருந் தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)
சிறை குற்றவாளிகளிடம் கனிவு
சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, அங்கிருந்த ஏழைக் குற்றவாளிகள் இவருடைய மீசை தாடியை பார்த்து இவர் ஒரு துறவியார் (சாமியார்) என்று நினைத்துக் கொள்வார்கள். எனவே அவ்வப்பொழுது அவர்கள் வந்து இவர் கால்களில் விழுந்து கும்பிட்டு, ஐயா! பெரியவரே! சாமி! நாங்கள் ஏதோ பெரிய தீவினை (பாவம்) பண்ணிவிட்டு, சிறையிலே வந்து சேர்ந்திருக்கிறோம்; எங்களுக்கு மன்னிப்பு உண்டா? கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்குவாரா? நீங்கள் எங்களுக்கொரு நல்ல வழி காட்ட வேண்டுமென்று கேட்பார்கள். அப்பொழுது இவர் நிரம்ப மனம் உருகி அவர்கள் மனம் கொள்ளுமாறு, சொல்லுவது போல் பேசுவார். ‘என்னப்பா, எல்லாவற்றிலும் நம்ம செயல் என்ன இருக்கிறது; நீங்களா தப்பு செய்தீர்கள்? எல்லாம் உள்ளே இருந்து கொண்டு நம்ம தீவினை (பாவம்) நல்ல வினைகளுக்கு (புண்ணியங்களுக்கு) ஏற்றபடி நம்மைக் குற்றங்களைச் செய்யச் சொல்கிறான். அவற்றையெல்லாம் குற்றமென்று சொல்ல முடியாதப்பா! அவன் தானே நம்மையெல்லாம் ஏவுகிறான்” என்பார். உடனே அந்தக் குற்றவாளி களெல்லாம், ‘சாமி! சாமி! ஆமாம்! ஆமாம்! நீங்கள் சொல்லுகிறதெல்லாம் சரி!’ என்று கண்ணீர் மல்கச் சொல்வார்கள். அதற்கு அவர் மீண்டும், ‘வருத்தப்பட வேண்டா’ம்பா; மக்களாகப் பிறந்தால் நல்வினைத் தீவினைகளை நிறுத்த முடியுமா? எல்லாம் என்ன? எல்லாம் நம்ம தலையெழுத்து. அந்த தலையெழுத்துக்கூட அந்த முருகன் தானே நம்முடைய தலையிலே போட்டிருக்கிறான். அவனை மட்டும் மறக்காதே! அவனைக் கும்பிட்டுக் கொண்டு இரு. இறுதியிலே நம்முடைய தீவினையெல்லாம் துன்பத்தை யெல்லாம் நீக்குவான்” என்று சொல்லுவார் அவர்கள் மனம் அமைதியடைந்து போவார்கள்.
ஆனால், அப்பொழுதெல்லாம் அவர் அருகில் இருக்கும் நான் சிரித்துக் கொண்டு அவரிடம் அவர்கள் முன்னர் ஒன்றும் சொல்ல மாட்டேன். அப்புறம் அவர் என்னிடம் சொல்லுவார். ‘அந்த அறிவில்லாதவர்களிடம் நாம் போய், சாமியில்லே; பூதமில்லே’ என்று சொன்னால், அவர்கள் இன்னும் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அந்த நிலைகளை இப்பொழுதெல்லாம் அவர்களிடம் விளக்க முடியுமா? ஏதோ அவர்கள் துயரங்களை வந்து நம்மிடத்திலே சொல்லு கிறார்கள். அவர்களுக்கு ஓர் ஆறுதல் சொல்லுவோம் என்ற எண்ணத்திலே, சொன்னேன்’ என்று.
இதையெல்லாம் நினைக்கையில் அவர்கள் மற்றவர்கள் மனம் மகிழ வேண்டும் என்பதற்காகச் சில சூழ்நிலைகளில் எத்தகைய பண்பாட்டோடு நடந்து கொண்டிருக் கிறார்கள் என்பதையறிந்து விளக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவரிடம் நான் கண்ட பல நலன்களுள் இன்னும் ஓரிரண்டையும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.
சிறையில் அவர்கள் இருந்தபொழுது, ஒரு நாள் அவர்கள் அறையில் ஒரு தாள் உறையில் யாரோ, அவர்களுடைய முக மயிர், கால் மயிர்களையெல்லாம் மழித்துப் போட்டுப் பொட்டலமாக மடித்து ஒருவன் வீசி எறிந்து விட்டுப் போய் விட்டான். ஆனால் அது போடப்படும் பொழுது அதை நாங்கள் பார்க்கவில்லை.
பெரியார் அதை எடுத்துக் கொண்டு வந்து, ‘சாமி! பார்த்தீர்களா; எனக்கு இங்கொரு பெரிய மதிப்பு (மரியாதை) கிடைச்சிருக்கு, என்று சொல்லி அதைப் பிரித்து, அதிலேயிருக்கும் முடியெல்லாம் காட்டிவிட்டுப் பின்வருமாறு ‘என்னவோ, போகட்டும்! என் மேலே அவர்களுக்கு வெறுப்பு; அதனாலே என்னை இப்படி அவமதிக்கிறார் களாம். இந்த வகையிலாவது அவர்கள் மகிழ்ச்சியாயிருந்து விட்டுப் போகிறார்கள்’ என்று சொன்னார்கள். அதன் பொருட்டு அவர்கள் கவலைப்பட வில்லை. வருத்தமும் படவில்லை. பெரிய தலைவர்கள் அப்படித்தானே இருக்க முடியும். அதுபோல விருப்பு வெறுப்பற்று, உண்மையை உணர்ந்து, சூழ்நிலைகளுக்கேற்ப மனப்பான்மையை அமைத்துக் கொள்ளுகின்ற அவருடைய சிறந்த தன்மை இதனால் விளங்குகிறது. அந்த மனப்பான்மையில்தான் அவர்கள் மேல் சிறிதும் வருத்தப்படாததுடன், அவர்களை ஏசவும் இல்லை; குறையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட அருமைகள் ஐயா அவர்களிடம் நிறைய உண்டு.
பார்ப்பனர்களிடம் பெருந்தன்மை
அக்காலத்தில் பத்மநாப ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். ஏதோ திருட்டுக் குற்றத்திற்காக நாங்கள் சிறையிலிருந்த காலத்தில் அவரும் சிறையிலிருந்தார். அதே சமயத்தில் இன்னொரு ஐயங்கார் ஒரு வைப்பகத்தில் பணம் கையாடல் பண்ணி, அவரும் சிறையில் இருந்தார். இவர்களுடன் இன்னொருவரும் வேறு ஒரு குற்றத்திற்காக அவர்களுடன் இருந்தார். அந்த பத்மநாப ஐயங்கார் உச்சிக் குடுமி வைத்திருந்தார். நாளும் பகவத் கீதை படிப்பார். பட்டை நாமமெல்லாம் போட்டுக் கொள்வார்; அந்த மூன்று பேரும் பட்டம் படித்தவர்கள்தாம். ஐயா (பெரியார்) தம்மோடு சிறையிலிருந்த அண்ணாத்துரை மற்றும் இருந்தவர்களிட மெல்லாம் கூப்பிட்டுப் ‘பிராமணன் கிராமணனெல்லாம் சிறைக்கு அப்பாலே, இங்கே யாருக்கும் மனம் நோக நடக்கக் கூடாது’ என்று சொல்வார். இப்படிச் சொல்லிவிட்டு ஏதாவது பேசும் பொழுதெல்லாம் அவர்கள் பக்கமாகவே பேசிவிட்டு, அவருக்கு வெளியிலிருந்து வரும் பழங்களையெல்லாம் மற்ற அன்பர்களுக்குக் கொடுக்கும் பொழுது, அவர்களுக்கும் அவர்கள் இருக்கும் அறை அறையாகக் கொண்டுபோய்க் கொடுப்பார்.
சிறையிலிருக்கும் பொழுது ஐயா அவர்களுக்கு அறுபதாவது ஆண்டு விழா நடந்தது. அக்கால் நான் அங்கிருந்த ‘குரோட்டன்’ செடிகளையெல்லாம் பறித்து, மாலை கட்டி, அவரை உட்கார வைத்து அவர் கழுத்தில் போட்டு, நான், அண்ணாத்துரை, இன்னொருவர் (பெயர் நினைவில் இல்லை) மூவரும் அவரைப் பாராட்டிப் பேசினோம். அத்துடன் இந்த ஐயங்கார்களெல்லாம்கூட பேசினாரர்கள். அவர்கள் பேசுமபொழுது, ‘நாங்கள் நூல்களில் படித்திருக்கிறோம். பெரியவர்கள் என்றால் இப்படி இப்படி இருப்பார்கள் என்பது பற்றியும், அவர்கள் அன்பு வடிவமாக இருப்பார்கள் என்றும்! அதை இங்குக் கண்ணாலே காண்கிறோம்’ என்றெல்லாம் மிக அழகாக உயர்வாகப் பேசினார்கள். அப்படி, அவர்கள் மனம் புண் படும்படி பெரியார் அவர்கள் ஒருநாள் கூட பேசினது இல்லை.
பெரியார் முழக்கம் 22102015 இதழ்