சுயராஜ்யக் கக்ஷிக்கு சாவுமணி
கவர்ன்மெண்டை முட்டுக் கட்டை போட்டு °தம்பிக்கச் செய்ய ஆரம்பித்த சுயராஜ்யக்கட்சி, கவர்ன்மெண்டுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த கட்டையும் அவிழ்த்து விட்டுவிட்டு, தனக்கே முட்டுக்கட்டை போட்டுப் பிரசாரம் கூட செய்ய முடியாமல் தன்னையே °தம்பிக்கச் செய்து கொண்டது. சுயராஜ்யக் கட்சி இந்த நிலைமைக்குத்தான் வருமென்று முன்னமேயே பலர் சொல்லிவந்தது உலகம் அறிந்ததே. ஆனாலும், ஆசை வெட்கமறியாது என்பது போல் பதவிகளும், உத்தியோகங்களும் பெற ஆசை கொண்ட வர்கள், உலகத்தார் முன்னிலையில் தங்கள் சுயமரியாதை எவ்விதம் மதிக்கப் படுகிறது என்பதையே லக்ஷியம் செய்யாமல், ஒன்றுகூடி பொய்ப் பிரசாரத் தையும், பாமர ஜனங்களின் அறியாமையையும் தங்களுக்கு ஆ°தியாக வைத்துக்கொண்டு, பதவி வேட்டையையும், உத்தியோக வேட்டையையும் அடைய ஆரம்பித்தார்கள். இதன் பலனால் தேசத்தின் ராஜீய வாழ்விலுள்ள கட்டுப்பாடும், கண்ணியமும், மதிப்பும் நீங்கி சுயநலங்கள் மலிந்து, சுயராஜ்யக் கட்சிக்குள்ளாகவே போட்டிகள் ஏற்பட்டு, ஒருவரையொருவர் வெளிப் படுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று.
சுயராஜ்யக் கட்சியார் பம்பாயில் கூடி ஒருவரையொருவர் வெளிப் படுத்தாமல் உத்தியோகம் சம்பாதித்துக்கொள்ள வழியுண்டா என்று யோசனை செய்து பார்த்து, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது தான் ராஜியென்று சொல்வது.
அதென்னவென்றால், “நான் உன் யோக்கியதையை வெளியில் சொல்வதில்லை; நீ என் யோக்கியதையை வெளியில் சொல்ல வேண்டாம்” என்பதற்கிணங்க, கொஞ்ச காலத்திற்கு இரு கட்சியாரும் தங்கள் கொள்கை களைப் பிரசாரம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டார்களாம். இதன்கருத்து என்ன? பொது ஜனங்களுக்கு, இவர்கள் யோக்கிதையைத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதுதானே.
ஒத்துழையாமைத் தத்துவத்திற்குக் கேடு வருவதற்கும், இம்மாதிரி யாக ஒரு தீர்மானம் ஆமதாபாத்தில் செய்து கொண்டதுதான் காரண மாயிருந்தது.
சுயராஜ்யக் கட்சிக்கும் அதே மாதிரி பம்பாயில் ஏற்பட்டு இருக்கிறது. பாமர ஜனங்களை ஏமாற்றித்தான் உத்தியோகம் பெற, காங்கிரசும், ராஜீயக் கட்சிகளும் இருக்கிறதே அல்லாமல், உண்மையான சுயராஜ்யம் பெறுவதற்கு அல்ல என்பதை இனியாவது பொது ஜனங்கள் உணர்வார்களாக.
குடி அரசு – கட்டுரை – 13.12.1925