காங்கிரஸ் சுயராஜ்யம் காலித்தனத்தில் முடிந்தது
காங்கிரஸ்காரர்கள் இந்திய அரசியலில் தங்கள் கொள்கைகளை யெல்லாம் கைவிட்டு விட்டார்கள், பஹிஷ்காரங்களை வாக்குறுதிகளை பிரமாணங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டார்கள். புது புது புரியாத கொள்கைகளையெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். பாமர மக்களை ஏமாற்ற விஞ்ஞான சாஸ்திர முறைப்படி எத்தனையோ தந்திரங்கள் செய்து பார்த்தார்கள். பழங்கால ராம ராஜ்யம் முதல் தற்கால நாகரீக பொது உடமை ராஜ்யம் என்பதுவரை பேசித் தீர்த்தார்கள். வருணாச்சிரமத்தை ஆதரிப்பது புனருத்தாரணம் செய்வது என்பது முதல் சகல சமூக சீர்திருத்தம் ஆச்சார சீர்திருத்தம் எல்லாம் பேசினார்கள். கதர் என்றும் அரிசன சேவை என்றும், கிராமப் புனருத்தாரணம் என்றும் எவ்வளவோ கிளை இயக்கங்கள் கண்டு அவைகள் மூலம் பணம் பறித்தார்கள். சட்டத்தை மீறுவது, அரசாங்கத்தை ஒழிப்பது, அந்நியர்களை விரட்டி அடிக்கும் சுயராஜ்யம் சம்பாதிப்பது என்று சொல்லி கும்பல் கும்பலாக ஜயிலுக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
கடசியாக சட்டம் மீறுவதில்லை, உத்திரவுகளை அலட்சியம் செய்வதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக்கொடுத்தார்கள். இவைகள் ஒன்றும் பலியாமல் போகவே ராஜவிஸ்வாச பிரமாணமும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியமும் செய்து சட்டசபைகளுக்குள்ளும் நுழைந்து பார்த்தார்கள். அவர்களால் ஆனதெல்லாம் செய்தார்கள். உலகத்தில் மற்ற நாடுகளில் நடந்த நடக்கும் முறைகளையும் கடன் வாங்கி காப்பி அடித்துப் பார்த்தார்கள். என்னசெய்தும் “எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கப் போவதில்லை” என்கின்ற பழமொழிப்படி இந்தப் பதினாறு வருஷ காலமாய் ஒரு காரியமும் செய்ய முடியாமல் ஒரு பயனும் ஏற்படாமல் போனதால் இப்போது கடைசியாக காலித்தனத்தை இறுதி ஆயுதமாகக் கையாண்டு பார்த்து விடுவது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இத்தனை பித்தலாட்டங்களை வெளிப்படுத்தி அடக்கிய சர்க்காருக்கு அதுவும் “அஹிம்சை”யையும் “சத்தியாக்கிரகத்தை”யும் அடக்கி மன்னிப்பு வாங்கிய சர்க்காருக்கு காலித்தனத்தை அடக்க முடியாது என்று யாருமே நினைக்கமாட்டார்கள். ஆனால் கலவரங்கள் ஏற்படுவதால் தங்கள் தோல்வி மறக்கப்பட்டு விடும் என்று கருதியோ அல்லது தாங்கள் சீக்கிரத்தில் முதுகு காட்டி ஓடப்போவதற்கு இப்போதே ஒரு சாக்கு தேடி வைத்துக்கொண்டால் தங்கள் மானம் தங்குவதற்கு சௌகரியம் ஏற்படும் என்று கருதியோ காங்கிரஸ்காரர்கள் பொது ஜனங்களிடை இருந்து வசூலித்த பணத்தையும் பெரிதும் காலிகளுக்கே கொடுத்து காலித்தனத்தை வளர்த்து இன்று அதையே சுயராஜ்யமாகச் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் விருதுநகரிலும், செட்டிநாட்டிலும் நடந்த காலித்தனங்கள் காங்கிரஸ் பத்திரிகைகள் மூலமே உணர்ந்திருக்கலாம். போலீஸ்காரர்கள் சாதாரண தன்மையில் நிலைமையை சமாளிக்க தங்களால் கூடுமான முயற்சியெல்லாம் செய்துபார்த்தார்கள். சில்லறை விஷமக்காரர்களையும் சில காலிகளையும் மாத்திரம் அதட்டி பார்த்தார்கள். பயனில்லாமல் போகவே சிலரை போலீஸ் காவலில் வைத்துப்பார்த்தார்கள். அதுவும் பயனில்லாமல் போயிற்று. காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொன்றுக்கு சட்டம் கேட்கவும் காலிகளுக்கு போதையேற்றி உசுப்படுத்தி விடவுமான காரியம் செய்ததால் அவர்களுக்கு பயம் விட்டு போலீசாரையே கண்டபடி பேசவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் நூற்றுக்கணக்கான பேர் நின்று கூப்பாடு போடவும் போலீசு சூப்பிரண்டு முதலிய அதிகாரிகளை நேரிலேயே அலட்சியமாய் கேலி பரிகாசமாய் பேசவுமான நிலைமையும் ஏற்படும்படி செய்து விட்டார்கள். இவ்வளவு அக்கிரமங்களையும் போலீசார் பொறுமையோடு பொறுத்து இருந்ததுடன் செட்டிநாட்டு ராஜா அவர்களும் போலீசாரையும் மற்றும் தனது வகையாரையும் கெஞ்சிக்கெஞ்சி பலாத்காரம் சிறிதும் உபயோகப்படுத்தாமலேயே நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் வந்திருக்கிறார் என்றாலும் கடசியாக ரிசர்வ் போலீசு பட்டாளம் தருவிக்காமலும் தடி அடிப் பிரயோகம் செய்து காட்டாமலும் நிலைமையை சமாளிக்க முடியாமலே காங்கிரசு தலைவர்கள் என்பவர்கள் செய்து விட்டார்கள்.
சிறு பையன்களையும் அநாதி பிள்ளைகளையும் வீடுகளில் பெற்றோர் வார்த்தைக்கு அடங்காமல் 10 ரூபாய் வாங்கி 100 ரூபாய்க்கு நோட்டு எழுதிக் கொடுத்து வாங்கிக்கொண்டு குடி கூத்தியில் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொண்டு திரிகின்றவர்கள் வரை கதர் வேஷ்டி, கதர் குல்லாய், கொடி ஆகியவைகளுடன் கூட்டம் கூட்டமாக தெருவில் நடந்துகொண்டு அதுவும் செட்டிநாட்டு ராஜா வீட்டுக்கு முன்புறம் நின்றுகொண்டு ராஜா சர் ஒழிக, பணக்காரர் ஒழிக, சர்க்கார் அடிமை ஒழிக, ஜஸ்டிஸ் கட்சி ஒழிக என்கின்ற நாமாவளியை சொல்லிக்கொண்டு கூப்பாடு போடுவதுமான காட்சி கண்கொண்டு பார்க்க முடியாததாகவே இருந்தது. மற்றும் கூட்டங்களில் பேசும்போதும் தோழர் சத்தியமூர்த்தி முதல் ஒவ்வொரு காங்கிரசுக்காரரும் காலிகளுக்கு உற்சாகம் உண்டாக்கும் விதமாகவே பேசுவதும் எதிர்க் கூட்டங்களின் பக்கத்தில் கூட்டம்போட்டு கூச்சல் போடுவதும் கூட்டத்தில் இருக்கும் ஆட்களை ஒவ்வொருவராக ஆள்விட்டு இழுத்துக்கொண்டு போவதும் கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் தூரத்தில் நின்று கொண்டு வருகிறவர்களை தடுத்து திருப்பி அனுப்புவதும் சாணி உருண்டைகளை வீசுவதும் கற்களையும் சேறுகளையும் வீசுவதுமாக துணிந்து இன்னது செய்வது என்று அறியாதவர்களாகி கண்டபடி ஆடித் தீர்த்துவிட்டார்கள்.
பள்ளத்தூர் சர்க்கிளில் அபேட்சகர்கள் இருவரும் பணக்காரர்களே ஒழிய ஒருவர் மாத்திரம் பணக்காரர் மற்றவர் ஏழை என்று சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு அதாவது ராஜா சர் மாப்பிள்ளை தோழர் சி.வி.சி.டி. வெங்கிடாசலம் செட்டியார் சொத்துக்கு பெரிதும் விட்டவர் என்று சொல்லிவிட முடியாத நிலையில் தான் எதிர் அபேக்ஷகர் தோழர் நாகப்ப செட்டியார் நிலையையும் சொல்லலாம். அவருக்கு பிரசாரகர்களாக தோழர்கள் ஜீவானந்தம், நீலாவதி அம்மையார் ராமசுப்பிரமணியம், ராய சொக்கலிங்கம் முதலிய “பணக்காரர்களின் விரோதிகள்” என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் கூட அங்கு வந்து ஆசை தீர பணக்காரர்களை வைவது என்னும் பேரால் ராஜா சர் அவர்களை வைதுவிட்டு போயிருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் தோழர் திருவண்ணாமலை அண்ணாமலை கம்பெனியார் எவ்வளவு பேசி இருப்பார்கள் என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இன்னும் சரியான விபரங்களை “மெயில்” பத்திரிகையிலும் “இந்து” “தினமணி” பத்திரிகையிலும் பார்க்கலாம்.
12ந் தேதி இரவு பள்ளத்தூர் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசிக்கொண்டிருக்கும்போது சாணி உருண்டைகள் மார்புக்கு நேராகவே வந்து விழுந்து சால்வையில் மொத்தையாய் ஒட்டிக்கொண்டன. அவற்றை யெடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும்போது தோளிலும் வயிற்றிலும் இடுப்பிலும் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கல்லுகள் விழுந்தன. ஒரு பெண்ணின் காதில் ஒரு கல் விழுந்தது. தோழர் எஸ். ரங்கநாதன் அவர்கள் தலையில் பொறிக்கு பக்கமாக ஒரு கல் விழுந்து உடனே புடைத்து விட்டது. ஒரு சிறு பையன் தலையில் ஒரு கல் விழுந்து ரத்தம் வடிந்தது, அவன் கூவென்று கத்தினான். இவ்வளவு அனுபவித்துக்கொண்டு கலங்காமல் தோழர் ஈ.வெ. ராமசாமி பேசிக்கொண்டும் மற்ற ஆள்களை சமாதானப் படுத்திக்கொண்டும் இருக்கும்போது கற்கள் மழைபோல் பொழிய ஆரம்பித்து விட்டன. உடனே கூட்டத்தை முடிக்கும்படி தோழர் ராமசாமியை ராஜா சர் ஆட்கள் கட்டாயப் படுத்தியதோடல்லாமல் இழுத்துப்போய் மோட்டார்காரில் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இதில் உள்ள ஒரு முக்கிய விசேஷம் என்னவென்றால் நான்கே போலீஸ்காரர்கள் தான் அங்கு இருந்தார்கள். அவர்கள் தங்கள் மீது கல் விழுகாமல் பார்த்துக்கொள்வதில் அதிக கவனமாய் இருந்ததுதான். பிறகு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீஸ்காரரும் டிப்டி சூப்பரண்டும் வந்து நேரில் கற்கள் விழுவதை பார்த்தபிறகே கூட்டத்தை தடிகொண்டு கலைக்க உத்திரவிட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இதையறிந்த ராஜா சர் செட்டியார் மறுநாள் கூட்டம் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். காங்கிரஸ்காரர்கள் கூட்டமும் ஊர்வலமும் வசவு பஜனையும் வழக்கம் போல் நடந்திருக்கின்றன. 13ந் தேதி தந்தி கொடுத்து மதுரையில் இருந்து ரிசர்வ் போலீசுகாரர்கள் 40, 50 பேர்கள் தருவிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜா சர் செட்டியார் வசமும் அது சமயம் சுமார் 100 பேர்கள் வரை இருந்தும் கண்டிப்பான உத்திரவின் பயனாய் அவர்களால் ஒரு பயனும் ஏற்பட முடியாமல் போய்விட்டது. 14ந் தேதி தேர்தலில் ஓட்டுகள் ஒழுங்காக பதிவு செய்ய ஏற்பாடு செய்த பிறகே ஓட்டர்கள் தாராளமாய் வெளியில் வரவும் இஷ்டப்படி ஓட்டுப் போடவும் முடிந்ததே ஒழிய மற்றபடி பந்தோபஸ்து இல்லையானால் ஓட்டிங் இடத்திலும் சில கொலைகள் நடத்திருக்கக்கூடும்.
இம்மாதிரி ஆன நிலையில் ஜனநாயகம், சுயராஜ்யம், பணக்காரர் ஒழிப்பு என்கின்ற காரியத்துக்கு ஏதாவது இடம் உண்டா என்று யோசித்து பார்க்க விரும்புகிறோம். இந்த ராமநாதபுரம் ஜில்லா தேர்தலில் இந்த சென்ற 15 நாளில் இருகட்சிக்கும் எல்லாம் சேர்ந்து (200000) இரண்டு லக்ஷ ரூபாய் செலவாகி இருக்கலாம். யாரோ வீம்பு பேசி இரண்டு செட்டியாருக்கும் மாட்டி விட்டுவிட்டார்கள். செலவுகள் தாராளமாய் செய்யப்பட்டன. காலித்தனங்கள் தாராளமாய் நடத்தப்பட்டன. கடசியாக ஏதோ ஒரு கட்சி ஜெயித்தது. அவ்வளவுதானே ஒழிய, இதில் காந்தியோ காங்கிரசோ கொள்கையோ ஜெயித்தது என்றோ, இனியும் எப்போதாவது ஜெயிக்க முடியும் என்றோ சொல்ல முடியுமா என்பதை யோசித்துப்பார்க்கும்படி வேண்டுகிறோம்.
வைது கூப்பாடு போட்டவர்களில் 100 க்கு 70 பேர் ராஜா சர் மாப்பிள்ளை ஜெயித்தார் என்ற உடன் அவர் வீட்டிற்கு உடனே வந்து வெற்றிலை பாக்கு சந்தனம் வாங்கிக்கொண்டு க்ஷேம சமாச்சாரம் விசாரித்து “காங்கிரசு என்றால் என்ன காலித்தனம் தானே” என்று சொல்லுபவர்களும் நாமினேஷன் சிபார்சுக்கு பல்லைக் கெஞ்சினவர்களுமாகத்தான் இருந்தார்களே ஒழிய மானத்தையோ கொள்கையையோ கவனித்தவர்கள் ஒருவரைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆகவே இந்த முறையை இனியும் விட்டுக் கொண்டே இருந்தோமானால் நாட்டுக்கோ, பட்டினி கஷ்டம் ஒழியவோ, பணக்காரன் ஒழியவோ, சுயராஜ்யம் பெறவோ பொது உடமை ஏற்படவோ முடியுமா என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 20.12.1936