சிதம்பரம் சிதைவு

தோழர் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையே யாகும்.

மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்மந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ, ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும், பின் தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஆக்ஷி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி ஆக்ஷியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும் துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும் அவராலேயே அனேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.

தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பர நாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும் படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை அதுவும் சைவப் பிள்ளையானாலும் “சூத்திரப் பிள்ளை” ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பன ரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால் ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப்பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில், பார்ப்பனரல்லாத தேசபக்தர்களை பார்ப்பனர் ஒரு அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத்தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஒரு உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக.

குடி அரசு துணைத் தலையங்கம் 22.11.1936

 

You may also like...