பட்டேல் வருகிறாராம் எதற்கு?

தோழர் பட்டேல் அவர்கள் தமிழ்நாட்டுக்கு பணம் வசூலுக்கு ஆக அடுத்தவாரம் வரப்போகிறார் என்றும், அவருக்கு தாராளமாய் பணம் உதவ வேண்டும் என்றும் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கோடு கட்டிய அறிக்கை வெளியிட்டு வருகிறார். சென்ற வாரம் தலைவரான தோழர் முத்துரங்க முதலியாரும் அறிக்கை வெளியிட்டு விட்டார்.

பட்டேல் அவர்களுக்கு பணம் எதற்காக வேண்டும்? வசூலித்த பணத்தை அவர் என்ன செய்யப்போகிறார்? இதுவரை தமிழ்நாட்டில் தோழர்கள் காந்தியார் முதல் பல பேர் வந்து பல தடவைகளில் பொது ஜனங்களிடமிருந்து வசூலித்த பணங்கள் என்ன ஆயிற்று? மற்றும் 1920ம் வருஷம் தமிழ்நாட்டில் திலகர் சுயராஜ்ய நிதி என்னும் பேரால் வசூலிக்கப்பட்ட ஒரு கோடி என்னும் பெரு நிதி என்ன ஆயிற்று? என்பன போன்ற விஷயங்கள் ஒன்றையும் யோசிக்காமல் காங்கிரஸ்காரர்கள் கேட்கும்போதெல்லாம் பணம் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பது என்றால் நமது மக்களுக்கு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றது என்று யாராவது சொல்லமுடியுமா? திலகர் சுயராஜ்ய நிதியைப்பற்றி பெரியதொரு ஆவலாதி வட நாட்டுப் பத்திரிகைகளில் எழுந்து அவற்றிற்கு சரியான பரிகாரம் சொல்ல காங்கிரசுக்காரர்களுக்கு யோக்கியதை இல்லாமல் போய் கடசியாக “கணக்கு கேட்கின்றவர்கள் மீது கேசு போடவேண்டும்” என்று காங்கிரஸ் தலைவரும் “திலகர் சுயராஜ்ய நிதிக்கு பணம் கொடுக்காதவர்கள் அதைப்பற்றிய கணக்கு கேட்க யோக்கியதை கிடையாது” என்று காங்கிரசிடம் கூலி பெற்ற பத்திரிக்கைகாரர்களும் எழுதிவிட்டார்கள். அது சம்மந்தமான விவகாரம் இன்னமும் திலகருடைய மருமகப்பிள்ளைக்கும் காங்கிரசுக்கும் நடந்து கொண்டே இருக்கின்றன.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை திலகர் சுயராஜ்யநிதி எப்படி கையாளப்பட்டது, அதில் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கொள்ளை கிடைத்தது என்பது பற்றி “குடி அரசி”ல் புள்ளி விவரங்களோடு சில குறிப்புகள் அப்போதே வெளியிடப்பட்டிருக்கின்றன.

அவற்றில் முக்கியமான அய்ட்டங்கள் பத்திராதிபர்களுக்கு ஆயிரம் பதினாயிரமாக அதாவது “சுயராஜ்யா”வுக்கு 10000மும் “தேச பந்து”க்கு 2000மும் “ஜெயபாரதி”க்கு பல ஆயிரமும் என்று கொடுக்கப்பட்ட பணங்களைப்பற்றியும் கதர் வேலைக்கு ஆக என்று பல பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட பணங்கள் வசூல் செய்யாமல் செலவு எழுதி தள்ளிவிட்ட விபரமும் முன்னமேயே வெளிப்படுத்தப்பட்டாய் விட்டன.

மற்றபடி கதர் நிதி என்று தோழர் காந்தியாரே நேரில் வந்து வசூல் செய்து இங்குள்ள பார்ப்பனர்களிடம் ஒப்படைத்துவிட்டுப்போன பல லக்ஷக்கணக்கான ரூபாய்களும் ஹரிஜன இலாக்கா என்று ஒன்று ஆரம்பித்து அதற்கு பார்ப்பனர்களையே முக்கிய நிர்வாகஸ்தர்களாக ஆக்கி வேலை இல்லாத பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுத்து அதன் மூலமே அப்பணம் பெரிதும் செலவழிக்கப்பட்டதோடு அந்த ஆசாமிகள் தேர்தல் பிரசாரம் செய்யவும் அந்த ஆசாமிகள் தேர்தலுக்கு நிற்கவுமான காரியத்துக்கு பயன்படுத்தவுமான வேலைக்கு செலவாக்கப்பட்டதும் தோழர் காந்தியாரே சென்ற மாதத்தில் “ஹரிஜன்” பத்திரிக்கையில் ஹரிஜன இலாக்கா சிப்பந்திகள் யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை என்று கண்டித்தும் இனிமேல் அதற்கு ஆக பொது ஜனங்களை தான் கேட்கப் போவதில்லை என்றும் எழுதியதும் அதை பல காங்கிரஸ் பத்திரிக்கைகள் வெளியிட்டதும் யாரும் அறியாததல்ல.

அதுபோலவே கதர்நிதியும் கதர் இலாக்கா நிர்வாகத்தில் பார்ப்பனர் களுக்கு வேலையும் ஆளுக்கு 100, 200 என்பதாக சம்பளமும் கொடுத்து வந்ததின் மூலமும் அப்பணங்கள் பெரிதும் செலவழிக்கப்பட்டதோடு கதர் அபிவிருத்தி என்பது நாளுக்கு நாள் கதர் செலவாவது குறைவாகவும் விலை அதிகமாகவும் ஆக நேர்ந்ததும் அதனால் வேறு யாரும் கதர் உற்பத்தி செய்யக்கூடாதபடி நிபந்தனை போட்டு ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதும் அதன் முக்கிய சிப்பந்திகளாய் இருந்தவர்கள் அந்த செல்வாக்கில் சட்ட சபைக்கும் முனிசிபாலிட்டிக்கும் ஜில்லா போர்டுகளுக்கும் மெம்பர்களாக முயற்சித்து வெற்றி பெறுவதும் அல்லாமல் வேறு கண்ட பயன் என்ன என்பது எவரும் அறியாததல்ல. இப்படி ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் என்றும், ஏழைகளுக்கு உணவு என்றும் தீண்டாமை ஒழிப்பதற்கு என்றும் வசூலித்த பணங்கள் பார்ப்பனர்கள் பிழைக்கவும் அவர்கள் பதவி பெறவுமான காரியங்களுக்கு பயன்பட்டன என்பதல்லாமல் வேறு பயன் ஏற்படவில்லை என்பது நாம் சொல்லாமலே யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் காங்கிரசின் பேரால் தாசிகளைக் கொண்டும், விவசாரிகளைக் கொண்டும் சதிர்க் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாடகம், கண்காட்சி என்பன போன்ற பல வேடிக்கைகள் வைத்து அவை மூலமும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பொது ஜனங்களிடம் வசூலித்து அவைகளையும் பார்ப்பனர்களுக்கே போய்ச் சேரும்படியாக பாழாக்கி அனேக விஷயங்களில் வரவு செலவு கணக்கு கூட வெளியில் காட்டாமல் தங்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் கலகம் செய்து கொண்டு சந்தி சிரிக்கும்படி நடந்துகொண்டதும் யாரும் அறியாத தல்ல.

இந்தப்படியும் பல தடவை பலவழிகளில் பல லட்சக்கணக்கான பணம் வசூலித்ததோடு காங்கிரஸ் கான்பரன்ஸ் முதலிய மகாநாடுகள் நடத்தியதன் மூலமும் ஏராளமான பணம் மீதியானதையும் ஒரு சமூகத்தாரே தின்று ஏப்பம் விட்டு விட்டு பல விஷயங்களில் திருப்தி அற்ற தப்பு கணக்கும் வெளியிட்டு விட்டு இனியும் பணம் வசூல் பண்ணப்போகிறோம், எல்லோரும் பணத்தை கொடுங்கள் என்றால் இது எவ்வளவு தைரியமான பகல் கொள்ளைக் காரியம் என்று கேட்கின்றோம்.

இந்த விஷயங்கள் எப்படியோ போகட்டும். இப்போது பட்டேலின் பேரால் வசூல் செய்யப்படும் பணம் எதற்கு ஆக என்று யோசித்து பாருங்கள். தேர்தல் செலவுக்காம். யாருடைய தேர்தல் செலவு என்று சொல்லுகிறார்கள் என்றால் தேச பக்தர்கள் தேர்தல் செலவுக்காம். தேசபக்தர்கள் என்பவர்கள் யார் என்பதை இதுவரை காங்கிரசுக்காரர்கள் தேர்தலுக்கு நிறுத்திய தேச பக்தர்கள் என்பவர்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய 100க்கு 90 பேர் பார்ப்பனர்களையே நிறுத்தி இருக்கிறார்கள். சென்னை கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர் நிறுத்திய பார்ப்பனரல்லாத தேச பக்தர்கள் என்பவர்கள் தங்கள் கைப்பணத்தில் இருந்து செலவுக்கு போட்டுக் கொண்டார்கள். பார்ப்பன தேச பக்தர்களுக்கு ஏறக்குறைய ஒருவர் இருவர் தவிர மற்ற எல்லா பார்ப்பன தேசபக்தர்களுக்கும் பொதுப்பணமே செலவழிக்கப் பட்டிருக்கின்றன. இதிலும் பல பார்ப்பன அபேக்ஷகர் மீதம் செய்து கொண்டார்கள். இதுபோலவே தான் இனியும் தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்படும் பணங்கள் பார்ப்பனர்களின் எலக்ஷன் செலவுக்கு ஆகவே செலவழிக்கப்படப் போகின்றன.

அதை வெளிப்படையாகவே தோழர் சத்தியமூர்த்தியார் சொல்லியே தான் இப்போது பணம் கேட்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக இல்லாவிட்டாலும் செகரட்டரி என்கின்ற முறையிலும் பார்லிமெண்டரி போர்ட் தலைவர் என்ற முறையிலும் அவரே அப்பணத்திற்கு எஜமானராய் இருக்கப்போகிறார். எப்படி எனில் பட்டேல் அவர்கள் வசூலித்த பணத்தை இங்கேயே கொடுத்துவிட்டுப் போகப் போகிறாரே ஒழிய ஒரு காசு கூட கொண்டு போகப்போவதில்லை.

ஆகையால் நமது கையைக்கொண்டே நமது கண்ணைக் குத்திக் கொள்வதுபோல் முட்டாள்தனமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு பிறகு அது நமக்கு இந்தக் கெடுதி செய்தது, அந்தக் கெடுதி செய்தது என்று வருத்தப்படுவது பெரிதும் முட்டாள் தனமே யாகும். அப்படித்தான் ஆகட்டும், தேர்தலுக்கு ஏதாவது லட்சியமுண்டா என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம். தேர்தல் லட்சியமெல்லாம் மூர்த்தியின் ஆனைமலைப் பேச்சில் இருக்கிறது. மற்றும் ஜஸ்டிஸ் கட்சியை 500 கெஜ ஆழத்தில் புதைக்க வேண்டும் என்பது.

ஆகவே சுத்த ரத்த ஓட்டமுள்ள பார்ப்பனரல்லாதார் இதற்கு ஒரு காசாவது கொடுக்கலாமா?

குடி அரசு கட்டுரை 13.12.1936

You may also like...