அரசாங்கமும் மந்திரியும் கவனிப்பார்களா?
முனிசிபல் நிர்வாகம்
முனிசிபல் நிர்வாகங்களில் இருந்துவந்த சகிக்க முடியாத ஊழல் களையும், மோசடிகளையும் நன்றாய் அறிந்த பிறகே முனிசிபாலிட்டிக்கு கமிஷனர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். கமிஷனர்கள் ஏற்பட்டும் அனேக முனிசிபாலிட்டிகளின் பணங்கள் கொள்ளை போகின்றன பாழாகின்றன. பல முனிசிபாலிட்டிகளின் கமிஷனர்கள் சேர்மென் எச்சை துப்புவதற்கு எச்சைக் கிண்ணம் ஏந்தி நிற்பதை நேரில் பார்க்கிறோம்.
இன்னும் மற்ற விஷயங்கள் வெளியிட பரிதாபகரமாய் இருக்கிறது. இதைப் போல ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் ஒரு மோச நாடகம் வேறு இல்லை. ஆதலால் முனிசிபல் நிர்வாகத்தை உத்தேசித்தும் முனிசிபல் வரி கொடுப்போர் பணம் நல்ல வழியில் பயன்பட உத்தேசித்தும் கமிஷனர்கள் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என்பதைக் கருதியும் முனிசிபல் சட்டத்தில் தக்கதொரு சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 05.01.1936