பட்டேல் சுற்றுப்பிரயாணமும் பணம் வசூலும்
தோழர் பட்டேல் பணம் வசூலித்துப் பார்ப்பனர்களின் தேர்தல் சிலவுக்காக ஒப்படைத்து விட்டுப் போகவே தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அதனாலேயே அவருக்குப் பணம் கொடுக்கக்கூடாது என்றும், மக்கள் உஷாராய் இருக்க வேண்டும் என்றும் எழுதினோம். ஆனால் அவரை பகிஷ்கரிக்க வேண்டுமென்று நாம் வற்புறுத்தவில்லை. அப்படியிருந்தும் பல இடங்களில் பகிஷ்கரித்ததாகவும், கருப்புக்கொடி பிடித்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டிக்கொண்டதாகவும் தோழர் பட்டேல் அவர்களே பேசியிருப்பதாகப் பார்ப்பனப் பத்திரிகைகளில் பார்த்தோம்.
என்றாலும் அதைப்பற்றி நாம் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட மாதிரியையும், பேசிய மாதிரியையும் கவனித்தால் தோழர் பட்டேல் பகிஷ்காரம் செய்யப்பட்டிருக்க வேண்டியவரேயாவார் என்பது நன்றாய் விளங்கும்.
அது ஒருபுறமிருக்க தென்னாட்டு மக்கள் பணம் கொடுக்கும் விஷயத்தில் இந்தத்தடவை மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்திருக்கிறார்கள். சென்னையில் மாத்திரம் சுமார் ரூ.5000 போல் வசூலாகி இருப்பதாகவும், மற்ற எல்லா இடங்களிலும் 6, 7 ஆயிரத்துக்குள்ளாகவேதான் வசூலாகி இருப்பதாகவும் பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமே தெரிய வருகின்றது.
அதுவும் சென்னையில் குஜராத்திக்காரர்களும், பார்ப்பனர்களும்தான் மொத்தமாய் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
மற்ற ஊர்களிலும் நாம் கொடுக்கவேண்டாம் என்று சொன்னதற்காக நம்மிடம் பொறாமை உள்ளவர்கள் நமது பேச்சு வெற்றி ஆகிவிட்டால் நமக்கு யோக்கியதை வந்து விடுமே என்கின்ற “அபிமான”த்தின் மீது ஏதோ காலும், அரையும், ஒன்றுமாகச் சேர்த்து 10, 18, 20, 40 என்கிற முறையிலேயே பெரிதும் பண முடிப்பு வழங்கி இருக்கிறார்கள்.
மற்றபடி இந்தத் தடவை அவர்களுக்குப் பொதுமக்கள் நல்ல புத்தி கற்பித்ததற்கு மகிழ்ச்சியோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தப் பணங்கள் எதற்காக செலவழிக்கப் போகின்றன என்பதைப் பற்றி நாம் எழுத வேண்டியதில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்காகப் பார்ப்பன அபேக்ஷகர்களுக்குத்தான் பெரிதும் செலவிடப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே மோட்சத்துக்காக என்று நம்மிடம் பார்ப்பனர்கள் வசூலிப்பது போலவே சுயராஜ்யத்துக்காக என்றும், பணம் பறிப்பதில் தீரர்கள் ஆகிவிட்டார்கள். நம்முடைய முட்டாள்தனம்தான் இன்னமும் மாறாமல் இருந்து வருகிறது.
இனியாவது பார்ப்பனரல்லாத மக்கள் அறிவு பெற்றுப் பார்ப்பன சூழ்ச்சி வெற்றிபெறாமல் போகிறபடி செய்வார்களாக.
குடி அரசு கட்டுரை 27.12.1936