தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும்

தளவாய் குமாரசாமி முதலியார் கவர்னருக்கு உபசாரப்பத்திரம் வாசித்துக் கொடுத்ததற்கு ஆக அவரை காங்கிரஸ்காரர்கள் விலக்கப் போகிறார்களாம், தேசத்துரோகி என்று கூப்பிடுகிறார்களாம், அவரை ராஜினாமா கொடு என்கிறாராம் சத்தியமூர்த்தியார். கவர்னர் இந்த மாகாணத்துக்கு ராஜப்பிரதிநிதி. அவர் ஆதிக்கத்தில் ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவருடைய ஆட்சிக்கு அரசருக்கு அரசர் சட்டத்திற்கு உட்பட்டதே ஸ்தல ஸ்தாபனங்களாகும். இந்த நிலையில் கவர்னர் பிரபு ஒரு ஸ்தலத்துக்கு வந்தால் அவருக்கு மரியாதை செய்யக் கூடாது என்பது போக்கிரித்தனமே ஒழிய வேறில்லை. ஸ்தல ஸ்தாபனம் அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் கால் வைக்கும் போதே பிரம்ம முடியைப் பிடித்துக் கொண்டு ராஜாவுக்கும், சட்டத்துக்கும், ராஜா பரம்பரைக்கும் பக்தியாய் விஸ்வாசமாய் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று பிரமாணம் செய்துவிட்டுத்தான் உள்ளே போகிறார்கள். இந்த நிலையில் ஒரு ராஜப் பிரதிநிதிக்கு மரியாதை செய்வதில்லை என்றால் எப்படி நியாயமாகும்?

அப்படியாவது காங்கிரஸ் கொள்கையில் இது ஒரு திட்டமாக இருக்கிறதா? அநாவசியமாய் திருச்சி, மதுரை முதலிய முனிசிபாலிட்டிகளை கவிழ்த்ததுபோல் வீண் தொல்லைகளை விளைவித்துக் கொள்ளவே இந்த மாதிரி குறும்பு செய்கிறார்கள். இவர்களது குறும்பே இன்று முனிசிப்பாலிட்டி களுக்கு கமிஷனர்களை கொண்டு வந்தது, நாளைக்கு ஜில்லா போர்டுக்கும் வரச் செய்யப் போகிறது.

தினம் “மேன்மைபொருந்திய கவர்னர் பிரபு அவர்கள் ஆலோசனை சபை மெம்பர்களுக்கு” என்று கடிதப்போக்குவரத்திலும் அவர்களது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதிலும், அவர்களுக்கு விண்ணப்பம் போடுவதிலும் குறைவில்லை.

இந்நிலையில் பகிஷ்கரிப்பது என்றால் எதை என்று கேட்கின்றோம்.

யோக்கியம், நாணயம், மரியாதை ஆகியவைகளை பகிஷ்கரிப்ப தல்லாமல் இதில் வேறு என்ன பகிஷ்காரம் இருக்கிறது என்று கேட்கின்றோம்.

எப்படியாவது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத மக்களில் தகுதியும் யோக்கியதையும் உள்ள மக்களை மூலையில் உட்கார வைக்க கட்டுப்பாடாய் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறில்லை. ஆதலால் தளவாய் குமாரசாமி முதலியார் இப்பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாறாமல் தப்பிக்கொண்டதற்குப் பாராட்டுகிறோம்.

குடி அரசு கட்டுரை 22.11.1936

 

You may also like...