கதர்த் தத்துவம்

நம் நாட்டு விடுதலை ஸ்தாபனம் என்று சொல்லப்படும் காங்கிரசானது 1920ல் ஒரு புதிய மாறுதலை அடைந்தது.

அதாவது காங்கிரஸ் ஆரம்பம் முதல் 1920 வருஷம் வரை பிரிட்டிஷாரிடம் ராஜபக்தி ராஜ விசுவாசம் ஆகியவை காண்பித்து வெளி வியாபாரம், யந்திரத் தொழில் முறை முதலியவைகள் மூலமே பொருளாதாரமும், தொழில் விருத்தியும் தனது கொள்கையாய் கொண்டிருந்ததோடு அரசியல் முன்னேற்றம், சுதந்திரம் என்பவைகளுக்கு சர்க்கார் உத்தியோகங்கள் பெறுவதும் சர்க்கார் நியமனங்களை விரிவாக்கச் செய்வதும் ஆகிய இரண்டையே முக்கிய வேண்டுகோளாகவும் விண்ணப்பமாகவும் கொண்டிருந்தது.

முஸ்லீம்கள் இயக்கமும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும் தோன்றி காங்கிரஸ் பலனில் பங்குகேட்க ஆரம்பித்த பிறகே அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஆதாரங்களுக்கும் பொருத்தமற்ற சில கொள்கைகளை வைத்து அறிவுள்ள மக்களும் அனுபவ சாத்தியத்திற்கு உட்பட்டும் மற்ற இடங்களில் நடக்கும் நடப்புகளை கவனித்தும் செய்கையில் இறங்கும் மக்களும் காங்கிரசின் கிட்ட நெருங்குவதற்கு இல்லாத மாதிரியாகவும் உண்மையான பொதுநல கவலையுள்ள மக்களை விரட்டி அடிப்பதற்கு ஆகவுமான முறையில் கொள்கைகளை வகுத்து அவற்றையே தீவிர கொள்கையென்றும் அதி தீவிர கொள்கையென்றும் பெயர் சொல்லி பார்ப்பனர்கள் காரியத்தில் இறங்கினார்கள்.

இவற்றிற்கு காந்தியாரும் அவருடைய மந்த புத்தியும் காரணம் என்று ஒரு அளவு சொல்லப்பட்டாலும் நம் நாட்டுப் பார்ப்பனர்களே பெரிதும் அவற்றிற்கு ஆதார பூதமாய் இருந்து அந்த சூதுகளும் அவர்களது சுய நலங்களும் மக்களுக்கு விளங்காமல் இருக்கும்படி செய்தார்கள். இதனால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன என்று கேட்கலாம்.

பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பயன் எல்லாம் முன் கூறப்பட்ட முஸ்லீம் இயக்கமும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஒரு நல்ல சாதனமாக ஏற்பட்டதேயாகும்.

எப்படியெனில் மேலே குறிப்பிட்ட அதாவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன் பின் நடப்புக்கும் சரிப்படாததான கொள்கைகளையோ திட்டங்களையோ காங்கிரசின் திட்டமாய் கொண்டதால் மேல்படி இரு சமூகத்தில் இருந்தும் தங்கள் சமூத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் யோக்கியமும் உண்மை உழைப்பும் உள்ள மக்கள் காங்கிரசில் சேர முடியாமல் போய்விட்டதுடன் அந்தக் காரணத்தால் அவ்விரு ஸ்தாபனத்தையும் ஸ்தாபனத் தலைவர்களையும் அவர்களது கொள்கைகளையும் குறை கூறி அழிக்கவோ தடுக்கவோ விஷமப் பிரசாரம் செய்யவோ பார்ப்பனருக்கு அனுகூலம் ஏற்பட்டது.

~subhead

கதர்

~shend

ஆகவே அப்படிப்பட்ட கொள்கைகளில் திட்டங்களில் ஒன்றாகத்தான் இன்று கதர் இருந்து வருகிறது. “கதர்சுயராஜ்யத்திற்கு வழி, தேச பக்தர்களுக்கு அறிகுறி, ஏழைகளுக்கு ஆதரவளிப்பது, இந்திய பொருளா தாரத்துக்கு ஆஸ்பதமானது, குடிசைத் தொழிலில் சிறந்தது, இந்தியர்களுக்கு வரப்பிரசாதமான பொக்கிஷம்” என்பது முதலிய பல காரணங்கள் கதருக்கு சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

இவை தவிர அதில் ஆத்மீக சம்மந்தமான பல கருத்துக்கள் இருப்பதாகவும் காந்தியாரால் சொல்லப்பட்டும் வந்திருக்கிறது. என்னவெனில் “மன சாந்திக்கும் ஆத்மா மோக்ஷமடையவும் சத்தியத்தில் நம்பிக்கை ஏற்படவும்” என்பவை போல் அனேக தத்துவார்த்தங்களும் கதருக்கும் ராட்டினத்துக்கும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

1920ம் முதல் 1936ம் வருஷம் வரை இந்த 16 வருஷ காலமாக கதருக்கு செய்யப்பட்ட பிரசாரமும் அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணமும் நிர்ப்பந்தமாக மக்களுக்குள் கதரை புகுத்துவதற்கு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டதிட்டங்களும் எவ்வளவு என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

காங்கிரஸ்காரருக்கு கதர் முக்கிய சின்னமென்றும் கதர் கட்டாதவர்கள் ஏழைகளின் நண்பர்கள் அல்லவென்றும், கதர் கட்டினவர்கள்தான் தேச பக்தர்கள் என்றும் மற்றவர்கள் தேசத்துரோகி என்றும் சொன்னது மட்டும் போதாமல் காங்கிரஸ் தேர்தலுக்கு நிற்கவும் காங்கிரஸ் தேர்தலுக்கு ஓட்டுக் கொடுக்கவும் கதர் கட்டினால்தான் அருகதை உண்டு என்றெல்லாம் கூட நிபந்தனைகளும் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வளவும் நடந்தும் இன்று கதரின் நிலை என்ன என்பதுதான் இப்போது யோசிக்கத்தக்கதாகும்.

1920 முதல் 1936ம்ஆண்டுவரை இந்த 16 வருஷ காலத்தில் மேல் கண்ட இவ்வளவு முயற்சிகள் செய்த பின்பும் இன்று கதரின் தத்துவத்தில் காங்கிரசுக்காரர்களுக்குள் ஒரே அபிப்பிராயம் இருப்பதாகச் சொல்லு வதற்கில்லை. காங்கிரசுக்காரர்களுக்குள் ஒரே அபிப்பிராயம் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தலைவர் என்பவர்களுக்குள்ளாகவே ஒருமனப்பட்ட அபிப்பிராயம் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்குள் இல்லாவிட்டாலும் ஒரு உயிர் மூன்று சரீரமாய் விளங்குவதாகக் கருதப்படும் தோழர்கள் காந்தியார், ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய மூன்று பேருக்குமே கதரைப் பற்றியும் கதரின் முக்கிய தத்துவத்தைப்பற்றியும் ஒரு மனப்பட்ட அபிப்பிராயம் இல்லை என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

காந்தியார் அபிப்பிராயத்துக்கும் பண்டிதர் ஜவஹர்லால் அபிப்பி ராயத்துக்கும் கதரைப் பற்றி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கருத்துக்கள் இருந்து வருகின்றன. பண்டிதர் “கதர் பொருளாதார பிரச்சினையை தீர்த்துவிடாது, ஏழ்மையை ஒழித்து விடாது” என்று சொல்லுவதோடு யந்திரங்களை பஹிஷ்கரிக்க முடியாது என்று ஸ்பஷ்டமாக சொல்லி வருகிறார். ஆனால் தற்காலம் ஏழைகளுக்கு பயன்படலாம் என்று சந்தேக பாஷையில் ஒரு வார்த்தை சொல்லி காந்திக்கு நல்ல பிள்ளை ஆகிறார். ஆச்சாரியார் அவர்களோ காந்தியாருக்கும் ஜவஹர்லாலுக்கும் நடுவில் நிற்கிறார். அதாவது கதரே ஏழைகள் கஷ்டத்தை போக்கவோ பொருளாதாரத்துறை கஷ்டத்தை நீக்கவோ முடியாது என்கிறார். அதோடு மாத்திரமல்லாமல் புதுப்பாளையம் ஆச்சிரம கதர் தொண்டுக்கு வேறு ஆள் வைத்து கைநழுவ விட்டு விட்டு சென்னைக்கு போய்விட்டார்.

இவர்கள் மூவர் நிலையோ மற்ற காங்கிரஸ் தலைவர்கள் நிலையோ, மற்றும் காங்கிரஸ்காரர்கள் நிலையோ எப்படியோ இருக்கட்டும். அந்தக் காரணத்தைக் கொண்டே நாம் கதரை மறுக்கவில்லை. பொதுப்பட பொருளாதாரத்தையும் தேசத்தையும் உத்தேசித்தே கதரின் யோக்கியதை என்ன என்பதைப்பற்றி சற்று விவரிப்போம்.

இந்தப் பத்து பதினாறு வருஷத்துக்கு முன் இருந்ததைவிட இன்று விலையிலோ துணியின் நயத்திலோ அல்லது அதன் வாளிப்பிலோ எதிலாவது கதர் முன்னேற்றமடைந்திருக்கிறதா? அல்லது அதை ஆதரிக்கிற மக்களோ பாவிக்கிற மக்களோ அதிகமானார்களா? அதன் உற்பத்தியாவது செலவாவது அதிகரித்ததா? என்று பார்ப்போமானால் ஒவ்வொரு துறையிலும் முன்னேறவில்லை என்பதோடு அது முன் இருந்த நிலையில் கூட இல்லாமல் பின்னடைந்து விட்டது பின்னடைந்து வருகிறது என்று கூட சொல்லலாம். அப்படி இருக்க இப்போது இவ்வளவு அனுபவத்துக்குப் பின்னும் இந்தப் பொருளாதார நெருக்கடியான காலத்தில் இவ்வளவு முன்னேற்றமான விஞ்ஞான வேகத்தில் இன்றும் மக்களை கதர் வாங்கி கட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்வதின் கருத்து என்ன என்று கேட்கின்றோம்.

தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் “கொஞ்சமாவது கதர் வாங்கி நாட்டு ஏழை மக்களுக்கு அன்னமளியுங்கள்”.

“மகாத்மாஜி தேசத்துக்கு அளித்த நிகரற்ற பொக்கிஷம் கதர்.”

“கதர் தான் காங்கிரஸ் ஒற்றுமைக்கு அறிகுறி.”

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“கொஞ்சமாவது கதர் வாங்குங்கள்” என்று சொல்லுவதிலிருந்து கதர் வாங்குவது இப்போது எவ்வளவு தூரம் நிறுத்தப்பட்டுப் போயிற்று என்பது ஒரு அளவுக்கு விளங்கும்.

மற்றப்படி “கதர் தேசத்துக்கு நிகரற்ற பொக்கிஷம்” என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பது விளங்கவில்லை.

அர்த்தசாஸ்திரப்படி பொருளாதாரப்படி கணக்கு பார்த்தால் கதரால் எவ்வளவு பொருள் நஷ்டம் என்பது விளங்கும்.

முதலாவது பஞ்சு விஷயத்தில் பார்ப்போமானால் கதர்த்துணி எத்தனை கெஜம் உற்பத்தி ஆகிறதோ அத்தனை கெஜ எடைக்கும் சரிபகுதி பஞ்சு வீணாகிறது என்பதை காங்கிரஸ் பக்தர்களோ காங்கிரஸ் பொருளாதார நிபுணர்களோ சிறிதும் கவனிப்பதில்லை.

சர்க்காருக்காவது யோக்கியப் பொறுப்பு இருக்கும் பட்சம் கதர் உற்பத்திக்கு 144 போட்டோ அல்லது கிரிமினல் கோடில் ஒரு விதி விதித்தோ கதர் உற்பத்தியை அடக்கி மூலப்பொருள் நாசமாவதை நிறுத்தி இருப்பார்கள்.

நமது சர்க்காரார் நீதியைக் கொண்டு ஆட்சி புரிவதைவிட மக்களின் முட்டாள்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் அனுமதித்துக் கொண்டு நடத்துவதே சுலபம் என்று கருதுவதாக இருப்பதால் இம்மாதிரி நாட்டு மூலப்பொருள் பாழாவதை அனுமதித்து வருகிறார்கள். பருத்திச்செடி பிடுங்குவதற்கு சிறிது நாள் தாமதப்பட்டு விட்டால் அதற்கு தண்டனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஏனெனில் பருத்தியில் பூச்சி விழுந்து மற்ற பயிர்களைக் கெடுத்து பஞ்சின் உயர்வைக் கெடுத்து விடுகிறது என்கின்ற காரணம் சொல்லுகிறார்கள்.

ஆனால் கதர்க்காரர்கள் கதர் உற்பத்திசெய்வதால் சாதாரண காடாத் துணிக்கு 10 கஜத்துக்கு முக்கால் ராத்தல் அல்லது ஒரு ராத்தல் பஞ்சு பிடிப்பதாய் இருந்தால் கதர்த்துணிக்கு 10 கஜெத்துக்கு மூன்று ராத்தல் முதல் 4 ராத்தல் பஞ்சு பிடிக்கின்றது. இதனால் ஒன்றுக்கு இரண்டு பங்கான பஞ்சு கதருக்கு தேவை இருப்பதால் இப்போது காங்கிரசுக்காரரால் உற்பத்தி செய்யப்படும் கதரின் மூலம் எவ்வளவு ராத்தல் பஞ்சு நாசமாகின்றது என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஒரு 5 முழ நீளமும் மூன்று முழ அகலமும் உள்ள கதர்வேஷ்டி 1 ராத்தல் இடை இருக்குமானால் காடா வேஷ்டியானால் லீ ராத்தலுக்கு உள்ளாகவே இடை இருக்கும். ஆதலால் ஒவ்வொரு வேஷ்டிக்கும் லீ ராத்தல் பஞ்சு நாசமாவதன் மூலம் பஞ்சு நாசமல்லாமல் வாங்குபவருக்கு விலை ஒரு கெஜத்துக்கு 4 அணாவுக்கு மேலாகவே நஷ்டமாகிறது.

துணியின் யோக்கியதையோ காடா 6 மாதத்துக்கு வந்தால் கதர் 3 மாதத்துக்குத்தான் வரமுடிகிறது.

விலையின் தன்மையோ காடா கெஜம் 3 அணா. ஆனால் கதர் கெஜம் 8 அணா 9 அணா ஆகிறது.

வேலையின் சுளுவோ மில் நூல் கெஜம் 006 பைசாவுக்கு நெய்யப்பட்டால் கதர் நெய்ய கெஜத்துக்கு 2 அணாவுக்கு மேல் கொடுக்க வேண்டி வருகிறது. அப்படிக் கொடுத்தாலும் நெய்பவனுக்கு வேலை கஷ்டம் கூலி குறைவுதான் ஏற்படுகிறது.

இத்தியாதி கஷ்ட நஷ்டங்களுடன் கதர் நெய்வதிலும் வாங்கிக் கட்டுவதிலும் பயன் என்ன என்பதை யாராவது விளக்கி இருக்கிறார்களா?

கிராமத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு தினம் முக்காலணா கூலி கிடைக்கிறதாம். கிராமத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு தினம் 9 பைசா கூலி கிடைக்க எத்தனை டன் பஞ்சை நாசமாக்குவது என்பதையும் 3 அணா துணிக்கு 9 அணா விலை கொடுத்து வாங்குவதன் மூலம் வாங்குபவர்கள் எத்தனை லக்ஷ ரூபாய் நஷ்டப்படுவது என்பதையும் சிறிதாவது யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

கதர் வரப்பிரசாத பொக்கிஷம் என்றால் என்ன அர்த்தம்? யாருக்கு பொக்கிஷம்? என்று யோசித்தால் சில ஆசாமிகள் அதாவது தேச பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சோம்பேறி வகுப்பாருக்கு கதரின் பேரால் ஆளுக்கு 20, 30, 40, 50, 100 என்பதாக மாதச் சம்பளமும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க அடிமைச் சிப்பந்திகளும் தாராளமாய் கிடைக்கும்படியான பொக்கிஷமே அல்லாமல் மற்றபடி பொது மக்களுக்கோ வாங்குபவருக்கோ, நெய்பவருக்கோ, தேசத்துக்கோ, பொருளாதாரத்துக்கோ, மூலப் பொருளுக்கோ என்ன பொக்கிஷம் என்று கேட்கின்றோம்.

இதுவரை கதருக்கு செலவழித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு 5, 5 லக்ஷ ரூபாய் சுமாரில் 20 மில்கள் கட்டி இருக்கலாம். அவைகளில் இன்று கதர் நூற்பவருக்கு தினம் 009 ஒன்பது பை கொடுக்கும் 10000 ஆட்களுக்கோ அல்லது 20000 ஆட்களுக்கோ நூற்கும் வேலை கொடுப்பதை விட தினம் 4 அணா முதல் 12 அணா வரை கூலி கொடுக்கும் படியான சுமார் 20 ஆயிரம் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் குடும்பத்துக்கு 5 ஜீவன் வீதம் ஒரு லக்ஷம் பேருக்கு வேலையும் தினம் முக்காலணா ஒரு அணா வீதம் கூலி கிடைக்கும்படியும் கொடுத்து ஒரு கோடி ரூபாய்க்கு சராசரி 100க்கு 7லீ வீதம் வருஷம் (750000) ஏழு லக்ஷத்து ஐம்பதினாயிரம் ரூபாய் லாபமும் சம்பாதித்து வருஷம் ஒரு புதிய மில் வைத்து வருஷம் 1500 குடும்பம் வீதம் பிழைக்கும் மாதிரியான நிலையை உயர்த்திக் கொண்டே போகலாம்.

இதனால் அதாவது இயந்திரத்தினால் ஒரு சமயம் கை நெசவுக்காரர் களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்று கருதினால் கை நெசவாளிகள் அதிகமாய் இருக்கிற இடங்களிலேயே இந்த மில்லுகளை வைத்து அவர்களுக்கே இந்த வேலைகளைக் கொடுத்து ஒரு ஆள் தினம் 10 மணி நேரம் வேலை செய்வதற்கு பதிலாக ஒரு ஆள் தினம் 3 மணி நேரமே (காங்கிரஸ் மில்லுகளில்) வேலை செய்யவேண்டும் என்று திட்டம் ஏற்படுத்தி லாபத்தைக் குறைத்து கூலியை உயர்த்தி அதை மூன்றாகப் பிரித்து 3 பேருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தால் நூற்பவர்களுக்கு இன்று கிடைக்கும் முக்காலணாவுக்கு பதிலாக 2 அணா கிடைக்கக் கூடும் என்றும் நெய்பவருக்கு அடியோடு வேலை இல்லாமல் பட்டினி கிடப்பதற்கு பதிலாக தினம் 4 அணா கிடைக்கக்கூடும் என்றும் சொல்லலாம்.

~subhead

ஊரா? பாழா?

~shend

இந்த மாதிரியான பொருளாதார கணக்கை கவனியாமலும், கவனித்து இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமலும் தடபுடலாக ஜால வித்தைக்காரன் போல் “இதோ இந்த கீரிப்பிள்ளை தோலுக்கும் பாம்பின் தோலுக்கும் உயிர் கொடுத்து இரண்டையும் சண்டை செய்யச் சொல்லுகிறேன்” என்றும் “இதோ இந்த மாங்கொட்டையை முளைக்க வைத்து இப்போதே மரமாக்கி பழம் தருகிறேன்” என்றும் “இதோ இந்த கல்லை ரூபாயாக்குகிறேன்” என்றும் சொல்லுவதுபோல் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து இந்தப்படி இந்த பதினாறு வருஷமாய் பாழாக்கி விட்டு இன்றும் கதர் வரப்பிரசாத பொக்கிஷம் என்றால் இதென்ன ஊரா, பாழா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறதுடன் இந்த அக்கிரமத்துக்கும் அயோக்கியத் தனத்துக்கும் கேள்வி கேப்பாடு இல்லையா என்றும் தான் கேட்க வேண்டி இருக்கிறது. மற்றபடி கதரில் என்ன ஒற்றுமை இருக்கிறது? கதர் கட்டி தேர்தலுக்கு நின்ற யோக்கியர்கள் நடந்துகொண்ட மாதிரியைப் பார்த்தாலே ஒற்றுமை யோக்கியதை விளங்கிவிடும்.

ஆகவே இனியாவது பொது ஜனங்கள் இந்த ஏமாற்றத்துக்கு கட்டுப்படாமல் விழித்து எழுந்து உங்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். காங்கிரஸ் வேஷதாரிகளுக்குத்தான் கதர் வேண்டி இருக்கிறது. அதுவும் இன்று எல்லா வேஷதாரிகளும் 100க்கு 99 பேர் ஓட்டுக்கு ஆகவும் தங்களுக்கு ஆகாதவர்களை வைவதற்காகவும் ஓட்டு பிரசாரத்தின் மூலம் வயிறு வளர்ப்பதற்கு ஆகவும் அல்லாமல் வேறு எதற்கு ஆவது கதர் கட்டி இருக்கிறார்களா என்று யோசித்துப்பாருங்கள். அப்படி அல்ல என்று யாராவது சொல்ல வருவார்களானால் அப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் கதர் வாலாக்களுடைய மனைவி, மக்கள், சகோதரர், பெற்றோர்கள் முதலிய இவர்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்களுக்கும் இவர்கள் ஆதிக்கத்தில் காப்பில் இருப்பவர்களுக்கும் கதர் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்களா அல்லது அவர்களாவது கட்டி இருக்கிறார்களா என்று பாருங்கள்.

ஆகவே அடியோடு முட்டாள்தனமானதும் சூழ்ச்சியானதுமான கதர் விஷயத்தில் இந்த வருஷமாவது எல்லோரும் விழிப்பாய் இருங்கள்.

செம்மறி ஆடு போல் தலைகுனிந்து பார்ப்பன சூழ்ச்சிக்கு ஆளாகாதீர்கள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

குடி அரசு தலையங்கம் 08.11.1936

 

You may also like...