பெரியார் சிறைவாசம்
டிசம்பர் 6-ந்தேதி தென்னாட்டு சரிதத்தில் ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான் சுயமரியாதை இயக்கத் தலைவரும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஆகப் போகிறவரும், தமிழர்களைத் தட்டி எழுப்பி சுயமரியாதையுடன் வாழக் கற்பித்தவரும், தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி தமிழர் விடுதலைக்காகச் சிறை புகுந்தார். தமிழர் சரிதம் எழுதப்படும் போது அந்நன்னாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதற்கு ஐயமே இல்லை. ஒரு பெரியார் சிறை புகுந்தநாளை நன்னாள் எனக் கூறியது பலருக்கு வியப்பாக இருக்கலாம். சிறை புகுவது துன்பம் தரக்கூடியதாகையால் சிறைபுகும் ஒரு நாளை நன்னாள் எனக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காதிருக்கலாம். நாம் வேண்டுமென்றே அந்நாளை நன்னாள் என்றோம். அந்நாள் பெரியாருக்கு துன்பகரமான நாளாயிருந்தாலும் தமிழர்களுக்கு நலந்தரக்கூடிய நாளாகும். பெரியார் சிறை புகுந்தது மூலம் தமிழுலகம் புத்துயிர் பெறப்போகிறது; தமிழர்கள் அடிமை வாழ்வு நீங்கி சுயமரியாதை வாழ்வு – சுகவாழ்வு வாழப் போகிறார். நமது சந்ததிகள் ஆரியப் பீடையிலிருந்து விடுபட்டு தனித்தமிழ் வாழ்வு – திராவிடப் பொது வாழ்வு – நல்வாழ்வு வாழப் போகின்றன. எனவே டிசம்பர் – 6 ந்தேதி நன்னாள் எனக்கூறுவது குற்றமாகுமா? ஆகவே ஆகாது. பெரியார் சிறை புகுந்த அந்நாள் தமிழர்களுக்கு நன்னாளே – பொன்னாளே ஆகும். பிறப்பால் கன்னடரான பெரியார், தாம் குடிப்புகுந்த நாட்டுப் பெருங்குடி மக்களின் விடுதலைக்காக தம்மையும் தம் குடும்பத்தையும் தம் செல்வத்தையும் தயக்கமின்றி சந்தோஷமாக – அர்ப்பணம் செய்துவிட்டார்.
~subhead
சிறை புகுந்ததேன்?
~shend
சிறை வாழ்வே சுகவாழ்வெனத் துணிந்துவிட்டார். ராஜபோகம் அனுபவிக்கும் வசதிகள் இருந்தும் அவற்றையெல்லாம் சுயமாகவே வெறுத்துச் சிறை புகுந்து கூழும் கஞ்சியும் உண்டு கல் அடித்தும் மண் சுமந்தும் உடலை வருத்தி தமிழர்களை ஈடேற்றத் தவம் செய்யச் சென்றுவிட்டார். அவர் சிறை வாழ்வைப் பெருவாழ்வாகக் கொள்ளும் நோக்கம் என்ன? ்தமிழ்நாடு தமிழருக்கே சொந்தமாக வேண்டும், முழு உரிமையுடையதாக வேண்டும், வட ஆரியருக்கு உரிமையாகக் கூடாது, தமிழன் எந்நாளும் தமிழனாகவே வாழ வேண்டும்” என்பதற்காகவே அவர் சிறை புகுந்தார். அவர் எத்தகைய கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. சட்டமறுப்புச் செய்யவோ பலாத்காரச் செயலில் ஈடுபடவோ அவர் எவரையும் தூண்டவில்லை. பலாத்காரம் அல்லது ஹிம்ஸை அவருக்கு உடன்பாடானால் காங்கரஸ் பத்திரிகையான ்இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுவதுபோல், அதை பகிரங்கமாகக் கூறப் பயப்படும் கோழையல்ல நமது பெரியார். தமது மனதில் தோன்றியதை எவருடைய விருப்பையும் வெறுப்பையும் லôயம் செய்யாமல் பகிரங்கமாகக் கூறும் ஆண்மை நமது பெரியாருக்குண்டு. அவரது பெருந்தன்மைக் குணங்களைப் பற்றி காங்கரஸ் பத்திரிகையான ்நவசக்தி” கூறுவதைப் பாருங்கள்.
~subhead
பெரியார் மாட்சி
~shend
“சிறைப் பறவையாகிய இராமசாமி நாய்க்கர் வரலாற்றை விரித்துக் கூற வேண்டுவதில்லை. அவர் தம் வரலாற்றில் அறியக் கிடக்கும் நுட்பங்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்யமின்மை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும் திறன், காவு, சூழ்ச்சியின்மை முதலியன.”
~subhead
உத்தமரைச் சிறைப்படுத்தும் ஆட்சி நீதியுடைய ஆட்சியா?
~shend
்நவசக்தி” சமயப்பற்றும் காங்கரஸ் பற்றும் உடைய பத்திரிகை பெரியாரோ சமய வெறுப்பும் காங்கரஸ் வெறுப்பும் உடையவர்; ஆகவே பெரியாருக்கு ்நவசக்தி” எதிரியென்றே கூறவேண்டும். பெரியார் கொள்கைகளைத் தாக்கி ்நவசக்தி” எத்தனையோ முறை எழுதியுள்ளதை தமிழுலகம் நன்கறியும். அத்தகைய ்நவசக்தி” யுங்கூட பெரியார் குண விசேஷங்களைப் புகழ்ந்தெழுத வேண்டுமானால் பெரியார் ஒரு உத்தம புருஷராக இருக்க வேண்டும் என்பது மிகையாகுமா? தமது எதிரிகளிட மிருந்தும் இத்தகைய நற்சாட்சிப் பத்திரம் பெறும் மாட்சியுடையவர்கள் தமிழ்நாட்டில் – ஏன்? இந்தியாவில் – எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள்? இத்தகைய ஒரு உத்தமனை தண்டித்துச் சிறையிலடைக்கும் ஒரு சர்க்கார் நீதியுடைய சர்க்காராகுமா? ஜனநாயக சர்க்காராகுமா? அவரைச் சிறைப்படுத்திய காங்கரஸ் சர்க்கார் அவர்மீது சுமத்தும் குற்றமென்ன? 1938 மார்ச்சு 21-ந்தேதி 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கியிருப்பதாக காங்கரஸ் சர்க்கார் பிறப்பித்த உத்தரவை பலாத்கார முறைகளால் ஒழிக்கத் தோன்றிய இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்குக் காரணஸ்தர் நமது பெரியாரென்றும் மறியல் செய்ய மக்களைத் தூண்டினாரென்றும் ஆச்சாரியார் சர்க்கார் பெரியார் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது எவ்வளவு தப்பான குற்றச்சாட்டென ருசுப்படுத்த அவ்வளவு பிரயாசைப்படத் தேவையில்லை. வாஸ்தவத்தில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியது இன்று நேற்றல்ல.
~subhead
இந்தி எதிர்ப்புத் தோன்றியது எப்போது?
~shend
1930-ல் அதாவது கனம் ஆச்சாரியார் கட்டாய இந்தி உத்திரவு பிறப்பித்த 23.4.38 -க்கு எட்டு வருஷங்களுக்கு முன் நன்னிலத்தில் கூடிய சுயமரியாதை மகாநாட்டில் இன்று விளம்பர மந்திரியாக இருக்கும் கனம் எஸ். ராமநாதனே இந்தியைக் கண்டித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். கனம் ஆச்சாரியார் மந்திரியாக வருவாரென்றும் கட்டாய இந்தியை 125 பள்ளிக்கூடங்களில் புகுத்துவாரென்றும் அக்காலத்து யாராவது எண்ணிருந்தார்கள்! மற்றும் 1937-வது வருஷத்திலேயே மறைமலை அடிகள் ்இந்தி பொது மொழியா?” என்ற கண்டனச் சிறு நூலும் வெளியிட்டிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் தோழர் சோமசுந்தர பாரதியாரும் கட்டாய இந்தியைக் கண்டித்து கனம் ஆச்சாரியாருக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். 1937 டிசம்பரில் திருச்சியில் கூடிய தமிழர் மகா நாட்டார் இந்தியைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதுடன் கவர்னர் பிரபுவிடம் தூது செல்ல வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். மற்றும் 1938 பிப்ரவரியில், காலஞ்சென்ற திவான் பகதூர் ஸர்.கிருஷ்ணன் நாயரவர்களால் திறக்கப்பட்டு ஸர்.கெ.வி. ரெட்டிநாயுடு அவர்கள் தலைமையில் கூடிய காஞ்சீவரம் மகாநாட்டிலும் இந்தியைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 1938 ஏப்ரல் 21 ந் தேதி கட்டாய இந்தி உத்திரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே சில சுயநலக்காரரால் இந்தி எதிர்ப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட தென்றும் அதற்குப் பெரியார் ஈ.வெ.ராவே காரணமென்றும் கூறுவது எவ்வளவு உண்மைக்கு மாறானதென்று நாம் கூறவும் வேண்டுமா?
~subhead
இந்தி எதிர்ப்பு தமிழர்களுக்கெல்லாம் பொது
~shend
மற்றும் இந்தி எதிர்ப்பு சில சுயநலக்காரராலோ காங்கரஸ் எதிரியான பெரியார் ராமசாமியாலோ தோற்றுவிக்கப்பட்டதல்ல. இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழர்களுக்கெல்லாம் பொதுவான இயக்கம். தமிழர்களான இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்சி வாரியாக பார்த்தால் காங்கரஸ் கட்சி, ஜஸ்டிஸ் – சுயமரியாதைக் கட்சி, முஸ்லீம்லீக் கட்சி மெம்பர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மத வாரியாகப் பார்த்தால் சைவர், வைஷ்ணவர், நாஸ்திகர், சந்தேகிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் முதலியவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் ஈ.வெ.ராமசாமியே இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கர்த்தா, அவராலேயே இந்தி மறியல் நடக்கின்றது எனக் கூறுவது எவ்வளவு அபாண்டப் பழி! வெறுக்கத்தக்கப் பொய்! படுமோசப் பிதற்றல்! பெரியார் ஈ.வெ.ராமசாமியைச் சிறைப்படுத்துவதற்கு சர்க்கார் கூறும் பகிரங்கக் காரணங்கள் கண்துடைப்புக் காரணங்களே; ஊற்றுக்கு நிற்காத காரணங்களே. அவரைச் சிறைப்படுத்தியதற்கு அந்தரங்க காரணங்கள் சில வுண்டு. அது விஷயமறிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்தவைதான். தென்னாட்டு அரசியல், சமூக நிலைமையை அறிந்தவர்கள் எல்லாம் உணர்ந்தவைதான். எனினும் பொதுமக்கள் அறிந்தவர்கள் எல்லாம் உணர்ந்தவைதான். எனினும் பொதுமக்கள் அறிந்திருக்கும் பொருட்டுச் சுருக்கமாக்கி கீழே விளக்குகிறோம்.
~subhead
அந்தரங்க காரணம்
~shend
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றங் கருதித் தோன்றிய ்ஜஸ்டிஸ்” கட்சியார் உழைப்பின் பயனாய் அரசியல் உலகத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒருவாறு ஒழியவே, பார்ப்பனர்கள் காங்கரஸ் பேரால் ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கிப் பொய்ப்பிரசாரம் செய்து அதன் செல்வாக்கை ஓரளவு குறைத்தனர். அத்தருணத்திலே நமது பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து பார்ப்பனர் செல்வாக்குக்கும் மதிப்புக்கும் காரணமாயிருக்கும் பார்ப்பன மதத்தைத் தாக்கிப் பிரசாரம் செய்யவும் எழுதவும் தொடங்கினார். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சுகவாசிகள்; அறைக்குள் இருந்துகொண்டு கட்சிப் பிரசாரம் செய்வார்கள்; பெரியார் அப்படிப்பட்டவரல்ல. ஊரூராய்க் கிராமம் கிராமமாய்ச் சென்று பிரசாரம் செய்பவர். ஆகவே தென்னாடு முழுதும் சுற்றுப்பிரயாணம் சென்று பிரசாரம் செய்து தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார். ஆகவே பார்ப்பன மதச் சூழ்ச்சிகளையும் புரோகிதக் கொடுமைகளையும் கொள்கைகளையும், பாமர மக்கள் நன்குணர்ந்து கொண்டு விட்டனர். மதத்தின் பேரால் மோக்ஷ நரகத்தின் பேரால் பாமர மக்களைப் பார்ப்பனர் ஏமாற்றி வந்த காலம் மலையேறிவிட்டது. “பார்ப்பனரை அய்யரென்ற காலமும் போச்சே” என பாரதியார் பாடியது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதான் மெய்யாயிற்று. தென்னாட்டு சமூக வாழ்விலே பார்ப்பனருக்கு இருந்து வந்த மதிப்பு 100 க்கு 75 குறைந்துவிட்டதென்று தைரியமாகச் சொல்லலாம். இவ்வண்ணம் சுயமரியாதை இயக்கம் காரணமாக பார்ப்பன மதமும் பார்ப்பன செல்வாக்கும் ஒடுங்கி வருவது கண்ட காங்கரஸ் பார்ப்பனர் சமஸ்கிருதத்தின் கிளையான இந்தியைத் தென்னாட்டில் புகுத்தி பார்ப்பனீயத்துக்கும் ஆரிய மதத்துக்கும் நாகரிகத்துக்கும் புத்துயிரளிக்கலாமென எண்ணினர்.
~subhead
1923-ல் எச்சரிக்கை
~shend
இச்சூழ்ச்சியை முதன்முதலில் கண்டறிந்தவர் நமது பெரியாரே. பார்ப்பனர் ஜீவனத்துக்கு வழி விடுவதை மனதில் வைத்துக்கொண்டு காங்கரஸ் பார்ப்பனர் தென்னாட்டில் இந்திப் பிரசார சபை ஏற்படுத்தி பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பணம் வசூல் செய்து இந்திப் பிரசாரத்துக்கு உதவி செய்து வரும் சூழ்ச்சியை உணர்ந்த பெரியார் 1926 மார்ச்சு 14 ந்தேதியிலேயே இந்திப் பிரசாரச் சூழ்ச்சியைக் கண்டித்து எழுதினார். அப்பால் காங்ரஸ்காரர் சென்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, காங்கரஸ்காரர் பதவியேற்றால் இந்தியைக் கட்டாய பாடமாக்க முயற்சி செய்யக்கூடும் என அவர்கள் பதவி ஏற்கு முன்னமேயே ஒரு வதந்தி இந்தியா முழுதும் பரவிற்று. அதை உணர்ந்த திருச்சி கான் பகதூர் கலீபுல்லா சாகிப் அவர்கள் இடைக்கால மந்திரியாக இருந்தபோது ராஜிகிரி பிரசங்கத்தில் இந்திப் புரட்டை வன்மையாகக் கண்டித்துப் பேசினார். இந்தியை தேசியப் பொதுப் பாஷையாக்கச் செய்யப்படும் முயற்சி மாகாண மொழிகளுக்கு உலை வைப்பதுடன் இஸ்லாம் நாகரீகத்தையும், கலைகளையும் ஒழிக்கும் சூழ்ச்சி எனவும் அவர் வற்புறுத்தினார். அப்பால் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற கல்வி மான்களும் இந்திப் புரட்டின் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கினர்.
~subhead
பார்ப்பனத் தலைவர்கள் எதிர்ப்பு
~shend
தோழர்கள் டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார், சாரநாத அய்யங்கார் போன்ற பார்ப்பன அறிவாளிகள் எதிர்ப்பும் இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு உரமளித்தது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். காங்கரஸ்காரர் எதிர்பாராதபடி இந்தி எதிர்ப்பு வலுப்பெற்றுவிட்டதினால் அதை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற துணிச்சல் காங்கரஸ் மந்திரிகளுக்குண்டாயிற்று. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கு நமது பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதாய் முன்னாடியே வெளிவந்த செய்தி காங்கரஸ் மந்திரிகளுக்கு அதிக பீதியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். பெரியார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவரானால் 6-மாத காலத்துக்குள் ஜஸ்டிஸ் கட்சி பழைய சக்தியைப் பெற்றுவிடுமென்றும், பெற்றால் அது காங்கரசுக்கு பெரிய எதிரியாகத் தீருமென்றும் காங்கரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே பெரியார் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுத் தலைவராகு முன்னமேயே சிறைக்கனுப்பப்பட்டிருக்கிறார் எனப் பலர் ஊகிப்பது அவ்வளவு தப்பான ஊகம் என்று கூறுவதற்கில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒரு திருடனாக உவமைப்படுத்தி அந்தத் திருடனைக் கையில் கிடைத்த ஆயுதத்தால் தாக்குவது குற்றமில்லையென கனம் ஆச்சாரியாரே பகிரங்கமாகக் கூறியிருப்பதினால் மேலே எடுத்துக்காட்டியபடி ஊகிப்போரை யாரும் கண்டிக்க முடியாது.
~subhead
எதிரிகள் நோக்கம் பலிக்குமா!
~shend
எந்த நோக்கத்துடன் பெரியார் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி இந்தி எதிர்ப்பு இயக்கம் அடங்காதென்பதும் ஆரிய மதமும், நாகரிகமும் தமிழ்நாட்டில் பழைய செல்வாக்கைப் பெறாது என்பதும் உறுதி. சென்ற 16 வருஷ காலமாக பெரியார் செய்த பிரசாரம் வீண் போகவே செய்யாது. புராணப் புரட்டுகளையும் ஆரிய மத ஆபாசங்களையும் மக்கள் நன்குணர்ந்து விட்டனர். அவர் நாட்டிலே விதைத்த சீர்திருத்தக் கருத்துகள் முளைத்து பூத்து காய்த்துப் பழுத்துப் பலன்தரத் தொடங்கிவிட்டன.
பாமர மக்கள்கூட பகுத்தறிவுணர்ச்சியுடையவர்களாகிவிட்டனர். இனி எதையும் குருட்டுத்தனமாய் நம்ப மாட்டார்கள். பெரிய பெரிய சீர்திருத்தக்காரர்கள் பன்னூற்றாண்டு உழைத்துச் சாதியாத காரியங்களை நமது பெரியார் சுமார் 15 வருஷ உழைப்பினால் சாதித்துவிட்டார். சாதிக்கோட்டை தகர்த்தெறியப்பட்டுவிட்டது. கலப்பு மணங்கள் – புரட்சிகரமான கலப்பு மணங்கள் – தாராளமாக நடைபெறத் தொடங்கிவிட்டன. வாயில்லாப்பூச்சிகளாய் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும்கூட – சுதந்தர உணர்ச்சியும் ஆண்மையும் பெற்றுவிட்டனர். அடுப்பூதும் பாவைகளாயிருந்து வந்த பெண்களும் சுதந்தர உணர்ச்சி பெற்றுவிட்டனர். ஆகவே பெரியார் சிறைப்பட்டதினால், அவரைச் சிறைபடுத்தியவர்கள் நோக்கம் எதுவா யிருப்பினும் சரி அது நிறைவேறாதென்று தைரியமாகச் சொல்லி விடலாம்.
~subhead
“குடி அரசு” அபிமானிகளுக்கு வேண்டுகோள்
~shend
கடைசியாக ்குடி அரசு” அபிமானிகளுக்கு ஒரு வார்த்தை. சென்ற 15 வருஷகாலமாக ்குடி அரசை” வளர்த்து வந்த பெரியார் சிறைக்குச் சென்றுவிட்டார். ஆகவே ்குடி அரசை” பேணும் பொறுப்பு முழுதும் அதன் அபிமானிகளையே இப்பொழுது சார்ந்திருக்கிறது. அவர் வெளிவரும் வரை அவரது இறகுப் பிறப்பான அருமையான வியாசங்களை ்குடி அரசு” வாசகர்கள் காண முடியாது. எனினும் அவரது லôயங்களையும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் உணர்ந்த அறிவாளிகள் வியாசங்கள் குடி அரசில் வெளிவந்து கொண்டிருக்கும். சிறை புகுந்த பெரியாருக்கு தம்மைப் பற்றியோ, தமது குடும்பத்தைப் பற்றியோ ஒரு சிறிதும் கவலையில்லை. அவர் தோற்றுவித்து வளர்க்கும் பத்திரிகைகளான ்விடுதலை” ்குடி அரசு” “பகுத்தறிவு” முதலியவைகளைப் பற்றியே கவலை. ஆகவே அப்பத்திரிகைகளை வியாசங்கள் மூலமும் பணவுதவி மூலமும் ஆதரிக்க வேண்டியது பெரியார் மீது உண்மைப் பற்றுடையோரின் நீங்காக்கடன். அவரது பத்திரிகைகள் முட்டின்றி நடப்பது சிறையிலிருக்கும் அவருக்குப் பெருமகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்குமாகையினால் பத்திரிகைகளுக்கு தேவையான உதவிகளை எல்லாரும் மனமுவந்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 11.12.1938