தமிழ்க்கொலை

தற்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பாடப் புத்தகங்களிலுள்ள குற்றங் குறைகளை எழுத வேண்டுமானால் அதற்கே ஒரு தனிப் புத்தகம் எழுதலாம். அந்த வேலை மணற்சோற்றில் கல் ஆராய்வது போன்றது.

315 கோடி!

  1. சென்னை ராஜதானிக் கல்லூரியில் ஆசிரியராயிருக்கும் ஒரு வித்வான் எழுதிய தமிழக வாசகம் நான்காம் புத்தகத்தில் இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 315 கோடியென்று முட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது.
  2. “செஞ்சி நகரக் கோட்டைச் சிறப்பு” என்பது ஒரு பாடத்தின் பெயர்.
  3. “தஞ்சையில் விஜயராகவரிடம் வேலை பார்த்து வந்த இராயசம் வெங்கண்ணா என்ற ஒரு கணக்குப்பிள்ளை ஒருவர் இருந்தார்” என்பது ஓர் அழகான வாக்கியம்.
  4. அநுமானும் சீதையும் என்ற ஒரு பாடத்தில் அநுமான் அசோகவனத்தில் சீதையைக் கண்டு.

“தாயே….. தங்களை இராமரிடம் எடுத்துப் போக நான் விரும்புகிறேன். ஓர் இமைப்பொழுதில் நான் அவரிருக்கும் இடம் செல்வேன். தங்கட்குச் சிறு துயரம் நேராது” என்று சொல்வதாகக் கூறப்பட்டிருக்கிறது.

சிறு துயரம் நேராது என்பது சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழாசிரியராயிருக்கும் ஒரு வித்வானின் எழுத்து!

  1. மீன்கள் என்ற பாடத்தில் “ஒரு வகை மீன் கப்பல்களின் ஓரங்களிலும் திமிங்கிலம் முதலிய கடற் பிராணிகளின் உடல்களிலும் ஒட்டிக்கொண்டு அவற்றுடன் வெகுதூரம் போகக்கூடிய உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. அவற்றிற்கு உரிஞ்சு மீன்கள் என்று பெயர்” என்று சொல்லுகிறார். இதுவும் வித்வான் வாக்கு.
  2. இதிலுள்ள அச்சுப் பிழைகளுக்கும், வல்லின மெல்லினத் தவறுகளுக்கும், விட்டுப்போன ஒற்றெழுத்துக்களுக்கும் வேண்டாத ஒற்றுகளுக்கும் கணக்கில்லை.

“சென்னை நகர பூகோள சாஸ்திரமும் பிற நாட்டு மக்கள் வாழ்க்கையும்” என்பது மற்றொரு புத்தகம். இது பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்ற, ஆணோ, பெண்ணோ என்று ஐயுறக் கூடியவாறு தமது பெயரை அமைத்துக்கொண்டிருக்கிற ஓர் அறிஞரால் எழுதப்பட்டிருக்கிறது. இதில் வடிக்கட்டும் என்பது போல வேண்டாத ஒற்றுகள் சில இடங்களில் போடப்பட்டிருக்கின்றன. அச்சுப் பிழைகளுக்குக் கணக்கில்லை. ப், க், த் முதலிய ஒற்றெழுத்துக்கள் வர வேண்டிய இடங்களிலெல்லாம் ஒரே அடியாக விட்டுவிட்டார். சிக்கனம் போலும்!

தற்காலத்தில் பொது நலத்தையும் கல்வி நலத்தையும் கருதாமல் சுயநலம் கருதி வைக்கப்படும் பள்ளிக்கூடப் புத்தகங்களையெல்லாம் ஆராய்ந்தால், அது ஒரு பரிதாபமான ஆராய்ச்சியாயிருக்கும். இத்தகைய புத்தகங்களை எழுதுகிற ஆசிரியர்களுக்கும், வித்வான்களுக்கும், அவற்றை வெளியிடுகிற புத்தக வியாபாரிகளுக்கும் அவர்கள் உடம்புகளில் தகுதியான இடங்களில் நல்ல புளியம் விளாரால் முறையே ஒரு டசன், அரை டசன் அடிகள் தக்கவர்களைக் கொண்டு கொடுக்க வேண்டுமென்பது நமது தாழ்மையான அபிப்பிராயம். இத்தகைய புத்தகங்களை அங்கீகாரம் செய்யும் டெக்ஸ்ட்புக் கமிட்டியார் என்பவர்களுக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டும் என்பதைப் பொது மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

குடி அரசு – கட்டுரை – 13.11.1938

You may also like...