இரண்டு மாநாடுகள்

 

வேலூரில் 27-12-1938 ல் நடைபெறப்போகும் 4-வது சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் டிசம்பர் 28-ம் 29-ம் 30-ந் தேதிகளில் நடைபெறப்போகும் தென்னிந்திய நல உரிமைச் சங்க 14 வது மாநாடும் தென்னாட்டுச் சரித்திரத்திலே மிகவும் முக்கியமான மாநாடுகள் ஆகும். வேலூர் மாநாடு தமிழர்களுக்கெல்லாம் பொதுவான மாநாடு. ஜாதி மத வித்தியாசமின்றி – அரசியல் கொள்கை வித்தியாசமின்றி, தமிழராகப் பிறந்தோரெல்லாம் அம்மாநாட்டில் பங்கு கொள்ளப் போகிறார்கள். ஆதியிலே தமிழர்களாக இருந்து ஆரிய மதக் கொடுமை காரணமாகப் பிற மதம் புகுந்து பிறந்தவர்களும் அரசியல் அபிப்பிராயங் காரணமாகப் பிரிந்தவர்களும் தம் தாய்மொழிக்கு இடுக்கண் நேர்ந்திருப்பது கண்டு சர்வ வித்தியாசங்களையும் மறந்து ஐக்கியப்பட்டு வேலூரில் கூடப் போகிறார்கள். வேலூர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் ஸர்.எ.டி. பன்னீர் செல்வம் அம்மாநாட்டுக்கு தலைமை வகிக்க எல்லாவற்றாலும் தகுதியுடையப் பெரியார்.

~subhead

பன்னீர் செல்வம் மாட்சி

~shend

தமிழர் முன்னேற்ற இயக்கமான இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் அவர் எவ்வளவு தீவிரமாக ஈடுபட்டுழைக்கிறார் என்பதை தமிழ் மக்கள் நன்கறிவார்கள். இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை வகித்து நடத்தத் தகுதியுடைய அறிவும் ஆற்றலும் செல்வாக்கும் உடைய பல பெரியார்கள் ஆச்சாரியார் ஆட்சிக்கு பயந்தோ வேறு எக்காரணத்தினாலோ இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் முற்றிலும் கலக்காமலும் கலப்பதுபோல் பாவனை காட்டித் தொட்டும் தொடாமலும் இருந்து வருகையில் அவர்களது விருப்புக்கும் வெறுப்புக்கும் அஞ்சாமல் தமிழர் நலம் ஒன்றையே பெரிதாகக் கருதி மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் சட்டசபையிலும் ஆச்சாரியார் அட்டூழியங்களைக் கண்டித்தும் கட்டாய இந்தியால் விளையும் தீமைகளை விளக்கியும் அறப்போர் தொடுக்கும் நமது தலைவர் ஸர்.எ.டி. பன்னீர்செல்வத்தின் தைரியத்தையும் தமிழ்ப்பற்றையும் எவ்வளவு தான் வியந்து கூறினும் மிகையே ஆகாது.

~subhead

நெருக்கடியான காலம்

~shend

வேலூர் மாநாடு மிகவும் நெருக்கடியான சமயத்தில் கூடுகிறது. அந்தப் போரில் ஈடுபட்டு இதுவரை 525 ஆண்களும் 26 பெண்களும் 10 குழந்தைகளும் மொத்தம் 561 பேர் சிறை புகுந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாபெருந் தலைவரான ஈ.வெ.ராமசாமி பெரியாரும் சிறை புகுந்துவிட்டார். மற்றும் பல தலைவர்கள் சிறைக்கு இழுக்கப்படும் நிலைமையில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் ஒரே தினசரியான ்விடுதலை”யும் கனம் ஆச்சாரியார் கோபாக்கினிக்கு இரையாகும் நிலைமையில் இருந்து வருகிறது. பேச்சு, எழுத்து சுதந்தரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இதைவிட நெருக்கடியான காலம் – ஆபத்தான காலம் – அஞ்சத்தக்கக் காலம் தமிழர்களுக்கு வேறுண்டா?

~subhead

தாருல் இஸ்லாம் அபிப்பிராயம்

~shend

இப்பொழுது அரசியல் நடத்துவோர் காங்கரஸ் பத்திரிகையான ்தாருல் இஸ்லாம்” அபிப்பிராயப்படி ்வட நாட்டுக்கு உட்பட்ட மக்கள் சுயேச்சையாக இருப்பவர்கள் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் காந்தியாருக்கு அடிமைப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் தமிழர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை. காந்தியாரின் விருப்பப்படி செயல் நடத்துகின்றனரே தவிர தமிழர்கள் விருப்பப்படி செயல்கள் நடத்துவதாகக் காணோம்.”

~subhead

ஆச்சாரியார் பத்திரிகை கருத்து

~shend

கட்டாய இந்தியை காங்கரஸ் சர்க்கார் தமிழ்நாட்டில் புகுத்துவது தமிழர்களை வடநாட்டாருக்கு அடிமைப்படுத்துவதற்கேயாயினும், ஆச்சாரியார் பத்திரிகை இன்று கூறுவதென்ன? கனம் ஆச்சாரியார் பிடிவாதக்காரரே அல்லவாம்; கடன் ஒத்திவைப்பு மசோதா, பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனம், தணிகாசலம் செட்டியார் ரோடு பெயர் மாற்றம், விசுவப் பிராமணர் பெயர் மாற்றம் முதலிய பிரச்சினைகளுக்கு உண்டான எதிர்ப்புக்கு பொதுஜன ஆதரவு ஏராளமாக இருந்ததினால் கனம் ஆச்சாரியார் விட்டுக்கொடுத்தாராம். ஆனால் கட்டாய இந்தி எதிர்ப்பு விஷயத்தில் பொது ஜன ஆதரவில்லையாம். ஒரு சிலரே கட்டாய இந்தியை எதிர்க்கிறார்களாம். ஆகவே இவ்விஷயத்தில் விட்டுக் கொடுத்தால் மைனாரிட்டிகள் மிரட்டலுக்கு மெஜாரிட்டி விட்டுக்கொடுத்ததாக ஏற்பட்டுவிடுமாம். அதனாலேயே கட்டாய இந்தி விஷயமாகத் தாம் செய்த முடிவை மாற்றவே முடியாதென்று கனம் ஆச்சாரியார் கண்டிப்பாகக் கூறுகிறாராம். இவ்வாறாக ஆச்சாரியார் பத்திரிகையான ்ஆனந்தவிகடன்” ஒரு போலிச் சமாதானம் கூறுகிறது.

~subhead

போலிச் சமாதானத்தின் பொருள்

~shend

இந்தப் போலிச் சமாதானத்தினால் விளங்குவது என்ன? இதுவரைத் தமிழ்நாட்டில் கூட்டப்பட்ட இந்தி எதிர்ப்பு மகாநாடுகளினாலும் கண்டனக் கூட்டங்களினாலும் ஊர்வலங்களினாலும் கட்டாய இந்தி எதிர்ப்புக்கு இருந்து வரும் பேராதரவை கனம் ஆச்சாரியார் உணரவில்லையென்றும் பல தமிழர் பெரும்படைகள் செய்த பிரசாரங்கள் மூலம் இந்தியை எதிர்ப்போர் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை கனம் ஆச்சாரியார் கண்டு கொள்ளவில்லையென்றும் சென்னை மாநகரத்திலே திருவல்லிக்கேணி கடற்கரையிலே நடைபெற்ற மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்களும் கனம் ஆச்சாரியார் கண்ணைத் திறக்க வில்லையென்றும் சென்னை நகரத்திலே வாரந் தவறாமல் நடந்து வரும் ஊர்வலங்களும் தவறாமல் நடைபெற்றுவரும் கண்டனக் கூட்டங்களும் போடும் கூச்சல் கனம் ஆச்சாரியார் கேட்கும் செவியில் புகவில்லையென்றும் நன்கு விளங்குகிறது.

~subhead

தமிழர் கடமை

~shend

ஆகவே இந்தி எதிர்ப்புக்குத் தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு தருகிறார்கள் என கனம் ஆச்சாரியாரை உணர்த்தும் புது மார்க்கங்களைத் தமிழர்கள் இனிக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த மார்க்கங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும். இந்தப் பொறுப்பு வேலூர் மாநாட்டாரை சார்ந்திருக்கிறது. அறிவு, ஆற்றல், அனுபவம் மிக்க ஸர்.எ.டி. பன்னீர்செல்வம் தலைமையில் கூடும் வேலூர் மாநாடு கனம் ஆச்சாரியாரை அறிவுறுத்தும் புது மார்க்கங்களைக் கண்டுபிடிக்குமென நம்புகிறோம்.

~subhead

சென்னை மாநாடு

~shend

அப்பால் சென்னை மாநாட்டைப் பற்றி கவனிப்போம். சென்னை மாநாடு திராவிடப் பெருங்குடி மக்களுக்கெல்லாம் பொதுவானது. சென்னை மாநாட்டுக்கும் ஜாதியில்லை; மதமில்லை; திராவிட மரபில் தோன்றியவர்கள் எல்லாம் அம்மாநாட்டில் பங்கு கொள்ளலாம். ஆனால் அரசியல் விஷயங்களில் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையை ஆதரிப்பவர்களுக்கே அங்கு இடமுண்டு. வேலூர் மாநாட்டைப் போல் அரசியல் அபிப்பிராய வித்தியாசங்களுடையவர்களுக்கு அங்கு இடமில்லை.

~subhead

மாநாட்டின் நோக்கம்

~shend

சுமார் 16 வருஷ காலம் தென்னாட்டு நிர்வாகம் நடத்திய ஜஸ்டிஸ் கட்சி பதவியிழந்த பிறகு இப்பொழுதுதான் முதலாக அம்மாநாடு கூடுகிறது. வலுவிழந்து நிற்கும் கட்சியை உறுதிப்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவிகளைக் கைப்பற்றும் மார்க்கங்களை ஆராய்வதே அம்மாநாட்டின் நோக்கமாக இருக்கக்கூடும்; அல்லது இருக்க வேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிக்கு அதிகார பதவியே முக்கிய லôயம். அதிகார பதவி வகிப்பவர்களுக்கே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்ய முடியுமாகையினால் மந்திரி பதவியை ஒரு லôயமாகக் கொள்வது தவறுமல்ல, இழிவுமல்ல. வரவேற்புக் கழகத்தார் அம்மாநாட்டுக்குத் தலைமையை பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கு அளித்தார்கள்.

~subhead

பெருங்குடி மக்கள் நஷ்டம்

~shend

ஆனால் அவர் கனம் ஆச்சாரியாரின் விருந்தினராகச் சென்று விட்டதினால் அவரது தலைமையில் மாநாடு நடத்தும் பாக்கியத்தை தென்னாட்டுத் திராவிட பெருங்குடி மக்கள் இழந்து நிற்கிறார்கள். ஆயினும் பெரியார் எழுதிய தலைமைப் பேருரையையே ஸர்.எ.டி.பன்னீர்செல்வம் மாநாட்டில் வாசிப்பாரெனத் தெரிகிறது. திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற்றம் ஒன்றையே தமது ஜீவித லôயமாகக் கொண்டு பாடுபட்டு வரும் பெரியார் ஜஸ்டிஸ் கட்சி முன்னேற்றத்துக்கான மார்க்கங்களை அவரது தலைமைப் பிரசங்கத்தில் நன்கு விளக்கிக் காட்டியிருப்பார் என்பது நிச்சயம்.

~subhead

ஜஸ்டிஸ் கட்சியார் போக்கு

~shend

மாநாடு கூடுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு புதியவை அல்லவாயினும் நிறைவேறிய தீர்மானங்களை அமலுக்குக் கொண்டு வருவது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புதுமையாகவே இருக்கும். மாநாட்டுத் தீர்மானங்களை அமலில் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு இல்லையென்று மிக்க வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாகவே இருக்கிறது. தாய்ச் சங்கத்தார் போக்கே இவ்வாறானால் கிளைச் சங்கத்தார் போக்கைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

~subhead

மற்றும் ஓர் குறை

~shend

மற்றும் ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை பாமர மக்களை லôயம் செய்யவே இல்லை. ஒரு கட்சிக்கு வலிமையும் பெருமையும் அளிப்பது கிராமவாசிகள் என்ற உண்மையையும் ஜஸ்டிஸ் கட்சியார் அறியவில்லை. அதனாலேயே இதுவரைக் கூட்டிய மாநாடுகள் எல்லாம் சென்னையிலும் ஏனைய வெளி நகரங்களிலும் கூடி இருக்கின்றன. காங்கரசுக்குப் பாமர மக்கள் ஆதரவு பெருகுவதற்கு அகில இந்திய காங்கரஸ் மாநாடும் மாகாண மாநாடுகளும் கிராமங்களில் கூடி வருவதே முக்கிய காரணம். மாநாடு நடவடிக்கைகளை நேருக்கு நேர் காணும் போது தான் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களையும் அது இதுவரை செய்துள்ள வேலைகளையும் கிராமவாசிகள் சரிவர உணர முடியும். காங்கரஸ் பிரசாரகர்கள் கிராமங்கள் தோறும் சென்று காங்கரஸ் பிரதாபங்களை பிரசாரம் செய்வதுடன் ஜஸ்டிஸ் கட்சியைப் பழித்தும் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கு பதிலளித்து உண்மை நிலையை கிராமவாசிகள் சரியாய் அறியத் தேவையான ஏற்பாடுகளும் செய்யவேண்டும். மாகாண மாநாடுகள் மட்டுமின்றி ஜில்லாத் தாலூகா மாநாடுகளும் வருஷந்தோறும் கூட்ட வேண்டும். ஜில்லாத் தாலூகா சங்கங்கள் செவ்வையாக அமைக்கப் பட்டால்தான் இந்த வேலைகள் சரிவர நடைபெறும்.

~subhead

மாநாடு செய்ய வேண்டுவன

~shend

பெரியார் சுதந்தரராயிருந்தால் இந்த வேலைகளிலேயே அவரது முழு கவனத்தையும் செலுத்துவார் என்பது நிச்சயம். ஜஸ்டிஸ் கட்சி ஜமீன்தார் கட்சி, பணக்காரர் கட்சி என்ற பழி நீங்க வேண்டுமானால் கிராமவாசிகளும் ஜஸ்டிஸ் கட்சி எங்கள் கட்சி எனக்கூறும் நிலைமையை உண்டுபண்ண வேண்டும். மாநாடு கூடும் தேதிவரை மாகாணம் முழுதும் சேர்ந்துள்ள மெம்பர்கள் தொகையை வெளியிடுவதுடன் ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் இவ்வளவு மெம்பர்கள் சேர்க்க வேண்டுமென வரையறுத்து அந்தந்த ஜில்லாக் கமிட்டியார் அப்பொறுப்பை ஏற்குமாறும் தூண்ட வேண்டும். ஓய்வு நேர அரசியல்வாதிகளுக்கு இனி அரசியலில் இடமில்லை என்ற உண்மையையும் மாநாட்டார் எல்லாருக்கும் உணர்த்த வேண்டும். பூரா நேரத்தையும் கட்சித் தொண்டில் செலவிடும் வசதியும் ஆற்றலும் உடையவர்களே ஜஸ்டிஸ் கட்சியில் இனிப் பொறுப்பான பதவிகள் வகிக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும். சென்னை நகர முனிசிபல் டிவிஷன்கள் தோறும் கிளைச்சங்கங்கள் ஸ்தாபிக்கும் விஷயத்தில் நகர சங்கத்தார் கவனம் செலுத்துமாறும் தூண்ட வேண்டும். ஜில்லாக் கிளைச் சங்கங்களுக்கு வழிகாட்ட வேண்டிய நகர கிளைச்சங்கம் இவ்விஷயத்தில் அலôயமாக இருந்து வருவது பெரிதும் வருந்தத் தக்கதாகும். மற்றும் கட்சி அதிகார பதவி வகிக்கவில்லையானால் கட்சிக்கே வேலையில்லை யென்ற மனப்பான்மை நமது தலைவர்களிடமிருந்து ஒழிய வேண்டும். எதிர்க்கட்சியிலிருக்கும் போதுதான் நமக்கு அதிக வேலையென்ற உண்மையை கட்சிப் பிரமுகர்கள் உணர வேண்டும்.

~subhead

ஜஸ்டிஸ் எதிரிகள் செய்ததென்ன?

~shend

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி வகித்தபோது எதிரிகளான காங்கரஸ்காரர் மந்திரிமாரின் ஒவ்வொரு செயலையும் கண்டித்து வாரந்தோறும் கூட்டங் கூட்டிப் பேசியதை நமது கட்சிப் பிரமுகர்கள் மறந்துவிட்டார்களா? காங்கரஸ் மந்திரிசபை ஏற்பட்டு சுமார் 18-மாதங்கள் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் கூட்டம் கூட்டி காங்கரஸ் மந்திரிகளின் ஆட்சேபகரமான செயல்களை இதுவரை யாராவது கண்டித்ததுண்டா? கட்சிப் பிரமுகர்கள் இவ்வண்ணம் பேசா மடந்தைகளாய் இருந்து வருவதினாற்றானே சத்தியமூர்த்தி கம்பெனியார் ஜஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விட்டது, 500 அடி ஆழத்தில் புதைத்தாய்விட்டது என ஓயாமல் கூச்சல் போடுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சி பேரால் சட்டசபையில் பிரதிநிதிகளாயிருந்தவர்கள், மெம்பர் பதவி போனதோடு தம் வாழ்நாளே போய்விட்டதென்றும் கட்சிக்குச் செய்யவேண்டிய கடமைகள் இனி இல்லையென்றும் எண்ணிவிட்டார்களா? ஒரு தேர்தலில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றியடைவதற்கான மார்க்கங்களைத் தேடுவதே புத்திசாலித்தனமும், ஆண்மையுமாகும்.

~subhead

அனுதாபம் மட்டும் போதாது

~shend

கட்சி நல்ல நிலைமையில் இருக்கையில் பதவிகள் வகிக்கப் போட்டி போட்டு, கட்சி தளர்ச்சியடைந்தவுடன் கட்சிப் பேரைச் சொல்ல கூச்சப்படுவோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இனிவரும் தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சி பெயரால் போட்டி போடாதவர்களை கட்சியில் ஒரு பொழுதும் சேர்க்கக்கூடாது. மற்றும் ஜஸ்டிஸ் கட்சியார் இந்தி எதிர்ப்புக்கு அனுதாபம் காட்டினால் மட்டும் போதாது; போரிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். தலைவர் ராமசாமிப் பெரியார் வெளியிலிருந்தால் கட்சிக்கு நேர்வழிகாட்டி உதவி புரிந்திருப்பார். அந்தப் பாக்கியத்தை நாம் இழந்து நிற்கையில் கட்சிக்கு நேர் வழிகாட்டி வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏனைய தலைவர்களுக்கே. ஆகவே அப்பொறுப்பை நன்குணர்ந்து அடுத்த தேர்தலில் நாம் வெற்றிக்கொடி நாட்டுவதற்கான வேலைகளை, மாநாடு முடிந்த நாள் முதற்கொண்டே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறோம். தென்னாட்டுப் பெருங்குடி மக்களும் மாநாட்டுக்கு ஏராளமாகச் சென்று மாநாடு வெற்றியடையுமாறு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 18.12.1938

You may also like...