ஒரு யோசனை
எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களது கொடுமையானது சகிக்கமுடியாத அளவில் பெருகிக் கொண்டு வருகிறது என்ற செய்தி நமக்கு எட்டிக்கொண்டே வருகின்றது.
இதற்குக் காரணம் அனேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் எல்லாம் பார்ப்பனர்களே அதிகாரியாயும் பரீட்சை அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாயிருப்பதாலும் அவர்களுடைய சலுகைக்கு பாத்திரர்களாக பார்ப்பன ஆசிரியர்கள் இருப்பதாலும் என்பதே.
இந்நிலை ஒழிய வேண்டுமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்றுதான் ஒரு கண்ணியமுள்ள ஒருவன் சொல்வான். ஏனெனில், முதலாவதாக இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பானும் தான் பிறப்பினாலே உயர்ந்த ஜாதியானென்றும், தானே அறிவாளியென்றும், வருணாச்சிரமப்படி தாம் ்பிராமண”ரென்றும், மற்றவர்கள் ்சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
எந்தக் கொள்கைப்படி தங்களை ிபிராமணனென்றும் மற்றவர்களை ்சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே கொள்கைப்படி பிராமணர் சூத்திரரை படிக்க வைக்கக்கூடாது என்றும் சூத்திரர் படித்தால் வருணாச்சிரம தர்மம் கெட்டுவிடுமென்றும் பார்ப்பனரல்லாதார் படித்தால் பார்ப்பனருக்கு ஆபத்தாய் எமனாய் விடுவார்கள் என்றும், 100-க்கு 3 பேர்கள் 97 பேர்களின் உழைப்பில் வாழும் சோம்பேறி வாழ்வு அழிவுற்றுவிடும் என்றும் கருதி வருகிறார்கள்.
இத்தகைய கொள்கையை உடையவர்கள் பார்ப்பனரல்லாதார் படித்து அறிவுபெற்று சமத்துவமாக வாழ விரும்புவார்களா? அதற்கு இடந்தான் கொடுப்பார்களா?
பார்ப்பன ஆசிரியர்கள் பெரும்பாலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை பள்ளிக்கூடப் பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள். பிறகு உனக்கு படிப்பு வராது, வீணாக ஏன் பணத்தை பாழ்படுத்துகிறாய், வேறு வேலை பார்த்துக்கொள். இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஏதாவது பிழைப்புப் பார்த்துக்கொள், பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே என்று பேசி பிள்ளையின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றார்கள். இதுதான் இன்றைய பார்ப்பனரல்லாதார் கல்வியின் நிலை.
ஏதோ சில பார்ப்பனரல்லாத ஆசிரியர்களின் தன் மதிப்போடு விளங்கும் ஆசிரியர்களின் – பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியின் காரணமாய் சில பார்ப்பனரல்லாத பிள்ளைகள் கல்வி கற்று முன்னுக்கு வர மார்க்கம் இருந்து வருகிறது. இதை ஒழிக்கத்தான் இன்று ்மகாத்மா” பட்டத்தை வேண்டாம் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பன தாசறாகிய தோழர் காந்தியார் வினோத திட்டமாகிய வார்தா திட்டத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.
வார்தா திட்டம் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியின்மையை நிலைக்கச் செய்யவே அவனவன் தன்தன் குலத்தொழிலை செய்து பார்ப்பனர்களுக்கு உழைத்துப் போடவேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் பார்ப்பனரல்லாதார் உழைப்பில் கொழுக்க வேண்டும் என்று செய்யப்படும் சூழ்ச்சிதான் யென்று நாம் பன்முறை விளக்கியிருக்கிறோம்.
மேலும் நமக்கு வேண்டுவது உயர்தரக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, தொழிற் கல்வி, வர்த்தகக் கல்வி முதலியவைகளேயாகும்.
ஆனால் வர்த்தகக் கல்வியினால் குழந்தைகள் ஏதேனும் ஒரு கைத்தொழில் கற்பிக்கப்பட வேண்டுமென்பதே வார்தாக் கல்வித் திட்டத்தின் தத்துவம்.
இந்த உண்மையை பார்ப்பனரல்லாதார் அறிந்து கொண்டால் எங்கு ஒருகால் மெஜாரிட்டியாக அவர்கள் சேர்ந்து சூழ்ச்சியை அறிந்து அதை விளக்கிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தாலோ அல்லது பார்ப்பனர்கள் இத்திட்டத்தைக் குறித்து அறிந்துகொண்டால்தான் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை என்றென்றும் தலையெடுக்க முடியாமல் தன்மதிப்போடு வாழவிடாமல் செய்யலாம் என்ற கருத்தின் மீதோ இன்று காங்கரஸ் ஆதிக்கம் வார்தா கல்வி முறையை பயின்றுவர இவ்வளவு பெரிய எதிர்ப்பினிடையிலும் 3 பார்ப்பன ஆசிரியர்களையே பொறுக்கியெடுத்து சர்க்கார் செலவில் பயிற்சி பெற்றுவர வார்தாவுக்கு அனுப்பியிருக்கின்றது. அந்தச் செய்தி வேறொரு இடத்தில் வருகிறது.
இந்த மாதிரி பார்ப்பனர்கள் பார்ப்பனீயத்தை நிலைநாட்ட வடநாட்டு ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் என்றென்றும் இருந்துவர பட்ட பகல் கொள்ளைபோல் துணிகரமாக – தைரியமாக ஆரிய வர்க்கத்தார் சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்றால் தன் மதிப்புடைய – சுத்த இரத்தம் ஓடும் – மானத்தோடு வாழும் பார்ப்பனரல்லாத தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று பார்ப்பன கும்பலின் மனதில் கடுகத்தனையாவது எண்ணமிருக்கிறதா என்று கேட்க வேண்டியிருக்கிறது.
இதிலிருந்தாவது பார்ப்பனர்களால் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் பார்ப்பனரல்லாத தமிழனை தனது பாதத்தின் கீழே அழுத்தி வைக்க செய்யப்படும் காரியம் ஆகும் என்று உணர்ந்து வீரத்தோடு ரோஷத்தோடு எழுந்து பார்ப்பனீயத்தை இப்பொழுதே – முளையிலே கிள்ளி யெறீய முற்படுகிறார்களா அல்லது ராவணன் ஆண்டால் என்ன?……… ஆண்டால் என்ன? என்று மெளடீகத்தில் இருக்க விரும்புகிறார்களா? என்று கேட்கிறோம்.
பார்ப்பனரல்லாதார் மானத்தோடு வாழ வேண்டுமானால் அதற்கு வேண்டியன செய்து கொள்வதற்கு இதைவிட சந்தர்ப்பம் கிடைக்காது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் எல்லாம் ஒன்று கூடித் தங்களுக்குள்ளிருக்கும் வேற்றுமைகளையும் அபிப்பிராய பேதங்களையும் போக்கி பார்ப்பனீயத்தை வெட்டி வீழ்ந்த வீறு கொண்டெழவேண்டும் என்று யோசனை சொல்ல ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 30.10.1938