இன்றைய பிரச்சினை
“குடி அரசு” பத்திராதிபரும் பிரசுரகர்த்தாவும் “விடுதலை” பிரசுரகர்த்தாவுமான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமியும், “விடுதலை” ஆசிரியர் பண்டித எஸ். முத்துசாமி பிள்ளையும் 124 எ. ராஜ நிந்தனைச் சட்டப்படியும் 153 (எ) வகுப்புத்துவேஷச் சட்டப்படியும் அக்டோபர் 7-ந்தேதி சென்னை சர்க்காரால் கைது செய்யப்பட்டு ஈரோடு சப்ஜெயிலில் காவலில் வைத்திருக்கின்ற சேதியை தினசரி வாயிலாக அறிவீர்கள். இதிலிருந்து சொந்த மனசாட்சிப்படி எவரும் பொதுநல சேவையில் ஈடுபட முடியாதென்றும், சுய மதிப்போடும், தன் மனசாட்சிப்படியும் ஒருவர் நடக்க வேண்டுமானால் அவர் எத்தகைய கஷ்ட நஷ்டத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டுமென்பது நன்கு புலனாகும். இத்தகைய துன்பங்கள் ஏகாதிபத்தியத்தையே எதிர்க்கிறோம் – உடைக்கிறோம் – தகர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆட்சியில் ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கிற தென்பதைக் குறித்துதான் நாம் வருந்த வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை நோக்கும்போது கனம் ராஜகோபாலாச்சாரியார் ஹிட்லரைப்போல தனக்கு விரோதமான அபிப்பிராயமுடைய நோக்கமுடைய கட்சியோ இயக்கமோ நாட்டிலேயிருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவருக்கு எதிராக இருக்கிற இயக்கத்தை அழிக்க புறப்பட்டுவிட்டார் என்பதற்குச் சந்தேகமேயில்லை. என்ற போதிலும் உண்மை உழைப்பாளர்கள் என்பவர் எந்தவித கஷ்டத்திற்கும் அஞ்சார். தமது லôயம் உயர்வான தாயிருக்கையில் எதைக்கண்டும் அஞ்சவேண்டியதில்லை. தாம் செய்வது பொதுநல விருத்திக்கு தேவையானது என்று மனப்பூர்வமாய் நம்பியிருக்கும் வரை எத்தகைய இடுக்கண்களுக்கும் அஞ்சாது பாடுபட்டுக் கொண்டே வருவார்கள். தமிழர்கள் என்றென்றும் தலையெடுக்காமல் அடிமை வாழ்விலிருந்து மீளாமலிருக்க என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அவைகளை ஒன்றன் பின்னொன்றாக கனம் ஆச்சாரியார் செய்து வருகிறார். எனவே இந்த ஆட்சியில் மானமுள்ள – ரோஷமுள்ள தமிழ் மகன் சுயமரியாதையோடு வாழமுடியாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம். பார்ப்பனீய கொடுமையை பாமரமக்களுக்கு எடுத்துரைப்பது வகுப்புத் துவேஷம் என்று சொல்லப்படுமானால் பார்ப்பனீய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வழி எடுத்துரைக்க உரிமையில்லையானால் பார்ப்பனீயத்துக்கு அடிமையாயிருந்து உயிர் வாழ்வதைவிட சுத்த வீரனாக – வீரப் புருஷனாக – ஒரு நாளாவது விளங்கி விட்டு மறைவது தான் மேல் என்று சொல்லுவோம். ஆகவே இன்றய அடக்கு முறையிலிருந்து – தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமா அல்லது தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கிக் கொள்வதா என்பது தான் நமதியக்கத்தவர்கள், நமதியக்கத்தில் அபிமானமும் அனுதாபமும் கொண்டவர்கள் முன் தற்போது இருக்கிற முக்கிய பிரச்சினையாகும்.
– எம்.வி.
குடி அரசு – தலையங்கம் – 9.10.1938