இந்தி செத்தது! இனி ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன?

 

நம் சரணாகதி மந்திரிகள் தமிழ் மக்களுக்குள் ஆரியக்கலை ஆரிய நாகரிகம் ஆகியவைகளைப் புகுத்தி வருணாச்சிரம தர்மத்தை புதுப்பித்து நிலைநிறுத்தச் செய்யும் சூழ்ச்சியான இந்தி கட்டாயமாய் கற்பிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்கள் போர்புரிந்து வருவதும் அதற்காக இதுவரை சுமார் 360 பேர்கள் பார்ப்பன ஆட்சிக் கொடுமைக்கும் வண்நெஞ்ச அடக்குமுறைக்கும் ஆளாகி பலர் வருஷக் கணக்கான கடின காவல் தண்டனை அடைந்து சிறையில் வதிந்து வருவதும் வாசகர்கள் அறிந்ததாகும்.

நம் சரணாகதி மந்திரிகள் ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்து தன்மானமற்று பெற்ற பதவியை நாட்டு நலனுக்கோ மனித வர்க்க உயர்வுக்கோ கால நாகரிகத்துக்கோ பயன்படுத்தாமல் வஞ்சம் தீர்க்கவும் தம் வகுப்புக்கு நிலையான ஆதிக்கமும் அதிகாரமும் ஏற்படுத்தச் செய்யவும் மற்ற வகுப்பார் என்றென்றும் தலையெடுக்க வகையில்லாமல் அழுத்தி வைக்கவும் முறட்டுத்தனமாய் பயன்படுத்தி வருவதும் “உள்ளங்கை நெல்லிக்கனி” என்பது போல் யாவருக்கும் விளங்கக் கூடிய காரியமேயாகும். சரணாகதி மந்திரிகள் பதவியேற்ற 15 மாத காலத்துக்குள் பார்ப்பனரல்லாதார் பவிசையும் உரிமையையும் பாதிக்கும்படி பல கெடுதிகள் செய்து வந்திருப்பதோடு பார்ப்பனரல்லாத பெரும் பெரும் உத்தியோகஸ்தர்கள் பலரையும் வெகு இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தி அவர்களில் பலரைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தியும் தாழ்த்தியும் நீக்கியும் தண்டித்தும் செய்துவரும் இம்சைகள் தினமு ம் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பரக்கக் காண்கின்றோம்.

காங்கரஸ் மந்திரிகள் சூழ்ச்சி முறை

மற்றும் இம்மந்திரிகள் பதவியேற்றதும் சர்க்கார் உத்தியோக நியமன வினியோக முறையில் கண் வைத்து அவை சிறுகச் சிறுக மாற்றப்பட்டும் கைவிடப்பட்டும் வருவதோடு பார்ப்பனரல்லாதார்களில் உத்தியோகங்களுக்கு கொஞ்ச நாளைக்குள் ஆள்களே கிடைக்க முடியாதபடியான சூழ்ச்சிமுறைகளும் கையாளப்பட்டு வருவதோடு அதற்கேற்றபடி கல்வி முறையே திருத்தப்பட்டும் குறைக்கப்பட்டும் பல பள்ளிக்கூடங்கள் கலாசாலைகள் எடுக்கப்பட்டும் வருவதும் வெள்ளையாக அறிந்து வருகிறோம். இன்னும் பல கேடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இவைகளின் பரிகாரத்திற்காக என்று பார்ப்பனரல்லாதார் என்ன முயற்சிகளை கையாண்டபோதிலும் சரணாகதி மந்திரிகளுக்கு அடிமைகள் ஏராளமாய் இருப்பதாலும் மந்திரி ஜாதியைச் சேர்ந்த பத்திரிகைகளும் அடிமைப் பத்திரிகைகளும் ஏராளமாய் இருப்பதாலும் இவைகளைக் கொண்டு வெகு இழிவான முறையில் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு கெட்ட பெயர்கள் கொடுத்து அழிக்கவும் அடக்கவுமான காரியம் கையாளப்பட்டு வருகின்றது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்தது?

எனவே இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது இந்த விஷயங்களையெல்லாம் பாமர மக்களுக்கு ஒரு சிறு அளவாவது விளக்கவும் சற்றாவது கண் திறக்கச் செய்யவும் ஒரு சாதனமாய் இருந்து வருவதால் அது சம்மந்தமான காரியங்களில் நாமும் ஒரு அளவு தகவல் வைத்துக்கொண்டு நாமறிந்தவரை சரியானமுறையில் அவ்விஷயங்களை பொது மக்களுக்கு எடுத்துக்காட்டும் தொண்டாற்றி வருகிறோம்.

இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி சேதி இந்தியா பூராவும் பரவியாய்விட்ட விஷயமாகும். அக்கிளர்ச்சியை அடக்க காங்கரஸ் பேராலும், காந்தீயத்தின் பேராலும், சுயராஜ்யத்தின் பேராலும் சரணாகதி மந்திரிகள் செய்துவரும் அடக்குமுறை கொடுமைகள் இந்தியா பூராவும் வெறுத்துக் கண்டித்து இகழ்ந்து உமிழ்ந்துவரும் காரியமாகும். இந்நிலையில் இதை சமாளித்த சரணாகதி மந்திரிகளுக்கு தங்களது பலவித சூழ்ச்சிகளும் பலிக்காமல் போனதால் இனி புதிய வழியில் அதாவது கட்டுப்பாடாக அயோக்கியப் பிரசாரம் செய்து அழித்துவிடத் துணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதுவரை செய்து வந்த நேர்மையற்ற காரியங்கள் என்னவெனில்

நேர்மையற்ற காரியங்கள்

இந்தி எதிர்ப்பானது,

  1. ஈ.வெ. ராமசாமியின் தொல்லை.
  2. தோற்றவர்கள் பிரசாரம்.
  3. ஜஸ்டிஸ் கட்சிப் பிரசாரம்.
  4. மந்திரிகளை கவிழ்க்க சூழ்ச்சி.
  5. பார்ப்பன துவேஷ பிரசாரம்.
  6. பணம் சம்பாதிக்க வழி.

என்பன போன்ற பல பெயர்களைச் சொல்லி அடக்கிவிடப் பார்த்தார்கள்.

பிறகு இந்தி எதிர்ப்புக் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறவர்களை விலைக்கு வாங்கப் பார்த்தார்கள்.

இந்தி எதிர்ப்பு காரியங்களுக்கு உதவி செய்கிறவர்களை மிரட்டி அடக்கப் பார்த்தார்கள்.

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்கு ஆக சிறை சென்றவர்களைப் பணம் கொடுத்தும் ஆசை வார்த்தை காட்டியும் மன்னிப்புக்கொள்ள முயற்சித்தார்கள்.

இந்தி எதிர்ப்பு வேலையில் ஈடுபட்ட ஆள்களுக்குப் பணம் காசு கொடுத்து இயக்கத்தையும் இயக்கப் பெரியார்களையும் நிந்தித்தும் பழித்தும் எழுதி கையெழுத்து வாங்கிப் பிரசுரிக்க முயற்சித்தார்கள்.

பட்டினி விரதமிருப்பதாகச் சொல்லிக் கொண்டவர்களை விலைக்கு வாங்கி அவைகள் நிறுத்தப்பட்டதாகச் செய்தி விடுவதின் மூலம் இயக்கத்தின் வேகம் குன்றிவிடச் செய்ய முயற்சித்தார்கள்.

கடைசியாக இயக்கத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கு அசிங்கம் ஏற்படச் செய்து விடலாம் என்று கருதி “தொண்டர்கள் மந்திரிகள் வீட்டு பெண்டு பிள்ளைகளைப் பற்றி ஆபாசமாக அசிங்கமான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள்” என்று பெரிய மனிதர்கள் என்பவர்கள் வீடுதோறும் சென்று முதல் மந்திரி விஷமப் பிரசாரம் செய்து வந்தார்கள்.

கடைசி முயற்சி

இப்போது கடைசியாக “இயக்கம் செத்து விட்டது, மறியல் நின்று விட்டது, பொது மக்கள் கைவிட்டு விட்டார்கள், செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள், மறியலுக்கு ஆள் கிடைக்கவில்லை – அடக்கு முறை பயன்பட்டுவிட்டது, ஆச்சாரியார் ஜெயித்து விட்டார்” என்றெல்லாம் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

அதிலும் முதல் மந்திரி வீட்டின் முன் நிற்பது இம்மாதிரி விஷமப் பிரசாரத்திற்கு இடமாகின்றதென்று கருதி தொண்டர்களே முதல் மந்திரி வீட்டுக்குப் பக்கத்திற்கு போகாமல் இருந்தால் நலம் என்று தோழர் ஈ.வெ. ராமசாமி முதலியவர்கள் கேட்டுக் கொண்டதற்கு தொண்டர்கள் இணங்கியதாக காட்டிக்கொண்டதாலேயே முதல் மந்திரியார் உட்பட சிலர் இயக்கம் செத்துப்போய் விட்டது என்றும் அதனாலேயே தன் வீட்டின் பக்கத்திற்கு வந்தவர்கள் இப்போது வருவதில்லை என்றும் அடக்குமுறை பலித்துவிட்டது என்றும் பெறுமை பேசிக் கொள்கிறார்கள். பொது ஜனங்கள் இடமும் சொல்லுகிறார்கள் என்றும் தெரிகிறது.

இவர்கள் இவ்வளவு செய்தும் இயக்கமானது அடிக்கும் பந்து கிளம்புவது போல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதே ஒழிய எங்கும் இளைக்கவில்லை. மற்றும் எதிரிகளின் விஷமச் செயல்கள் எல்லாம் வெளியாகிக் கொண்டும் வருகிறது. தோழர்கள் ஸ்டாலின், சைமன் ராமசாமி இவர்கள் பேரால் கூலிகொடுத்து வெளியாக்கப்பட்ட பார்ப்பனப் பத்திரிகை ஸ்டேட்மெண்டுகள் பார்ப்பனர்கள் யோக்கியதையையும் மந்திரிகள் யோக்கியதையையும் பார்ப்பனப் பத்திரிகைகள் யோக்கியதையையும் வெளியாகும்படி அத்தோழர்களாலேயே மறுப்பு ஸ்டேட்மெண்டுகள் வழங்கப்பட்டு எதிரிகளை அவமானப்படும்படி செய்து விட்டது. எல்லாவற்றையும் விடக் குறிப்பிடத்தக்க சேதி என்னவென்றால் ஸ்டாலின் ஜகதீசன் பட்டினி விரதமென்பது பொய் – வேஷ விரதம் என்பதாக மக்கள் உண்மையிலேயே கருதிய பிறகும் இந்தி எதிர்ப்பு இயக்கம் சிறிதும் தளராமல் அதற்குமுன் வளர்ந்துவந்த வேகத்தைவிட 2 பங்கு 3 பங்கு வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருக்கிறது என்பதாகும்.

சென்னையில் ஆதரவு

உதாரணமாகத் தோழர் ஸ்டாலின் ஜெகதீசன் பட்டினியோடு இருந்த காலத்தில் தானும் ஆஜராகி இருந்த இந்தி எதிர்ப்பு பீச்சு மீட்டிங்கில் 50000 பேர் கூட்டமென்றால் இரவு 11மணி வரை அக்கூட்டம் நடந்தது என்றால் அவ்விரதம் வேஷ விரதம் என்று விளங்கிய பின்பு போடப்பட்ட பீச்சு கூட்டங்களுக்கு 70000 மக்களும் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஜனங்களும் வந்து கூடுவதும் நடு ஜாமம் 1 மணிவரை கூட்டங்கள் நடப்பதும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து கடைசிவரை காத்திருப்பதும் இந்தியையும், அடக்குமுறையையும், நீதிபதிகள் யோக்கியமற்ற நடவடிக்கைகளையும் கண்டிக்கும் தீர்மானங்கள் ஒரு ஆள் எதிர்ப்புக் கூட இல்லாமல் ஏகோபித்த ஓட்டுகளால் நிறைவேறுவதுமாய் இருப்பதே போதுமான உதாரணமாகும்.

மற்றும் இந்தி எதிர்ப்பு இயக்கம் “செத்துப்போய்விட்டது” என்று எவ்வளவோ அயோக்கிய முறையில் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் அடிமைகளும் விஷமப்பிரசாரம் செய்து வந்தும் வெளி இடங்களில் கூட ஸ்தல ஸ்தாபன – யூனியன் – தேர்தல்களில் காங்கரசுக்கு நிறுத்த ஆள் இல்லாமலும் நிறுத்திய இடங்களில் படுதோல்விகளும் கிடைத்து வரும் சேதி பார்ப்பன – காங்கரசு பத்திரிகைகளிலேயே தெரியும்போது இவ்விஷமப் பிரசாரம் சிறிதும் பயன்படவில்லை என்பதற்கு இனி வேறு என்ன உதாரணம் வேண்டும்?

முக்கியமான விஷயம்

இவைகளையெல்லாம் விட கவனிக்கத் தக்க ஒரு முக்கிய விஷயமென்னவென்றால் கனம் ஆச்சாரியார் செய்த இந்தி கட்டாய முறையையும் அதற்கு ஆக ஏற்பட்ட அடக்கு முறையையும் பிறகு இந்தியல்ல இந்துஸ்தானி என்று மாற்றிக்கொண்ட பித்தலாட்ட முறையையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அரங்கேத்திக் கொண்டுவர சென்னை மந்திரிகளுடன் ஆச்சாரியார் டில்லிக்குச் சென்று பலமான படுபாதாள தோல்வி அடைந்து வந்த ஒரு காரியமட்டுமே இந்தி எதிர்ப்பு செத்துவிட்டதா அல்லது எங்கும் பரவி இந்தியைக் கொன்றுவிட்டதா என்பதை விளக்கும் காரியமாகும்.

அ.இ.கா. கமிட்டித் தீர்ப்பு

அ.இ.கா. கமிட்டியில் இந்தி குழிதோண்டி புதைக்கப்பட்டாய்விட்டது.

அதாவது “இந்தி வகுப்புக் கலவரத்தை உண்டாக்குவதாலும் கஷ்டமான வார்த்தைகள் கொண்டதாலும் பொது ஜனங்கள் எதிர்ப்பதாலும் இந்தி கற்பிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட வேண்டும்” என்று தோழர் அஷரப் கொண்டுவந்து பேசி அது காரியக்கமிட்டியிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. அந்தப்படியே இந்தியை கைவிட்டதற்கு அறிகுறியாக இனிமேல் இந்துஸ்தானியில் காரியம் நடக்க வேண்டுமென்று ஒரு “பழைய தீர்மானத்தை” பொது ஜனங்கள் நினைவுக்கு கொண்டுவந்தும் விட்டது.

ஆச்சாரியாருக்கு மற்றும் ஒரு பெரிய தோல்வி என்னவென்றால் “காங்கரஸ்காரர்கள் (மந்திரிகள் அல்ல) இந்துஸ்தானி பாஷை பரவச்செய்ய வேண்டியது” என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் அ.இ.கா. கமிட்டியில் அடியோடு தள்ளப்பட்டு தோற்றுப்போய்விட்டது.

இதற்காக காரியக்கமிட்டி வருந்துவதாகக்கூட ஒரு தீர்மானம் நிறைவேற்றி அழுது இருக்கிறது.

இந்த சேதி 27-9-38 “இந்து” “மெயில்” பத்திரிகைகளில் இருக்கிறது. ஆகவே இனி ஆச்சாரியார் எந்த முகத்தைக் கொண்டு இந்தியோ இந்துஸ்தானியோ கட்டாய பாடமாகக் கற்பிக்கிறார் என்பது விளங்கவில்லை.

எது செத்து விட்டது?

இதிலிருந்து பொது ஜனங்கள் இந்தியும் – இந்துஸ்தானியும் செத்து விட்டதா இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டதா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். “இந்தி கூடாதெ”ன்றும் “இந்திப் பிரசாரத்தில் இருந்து காங்கரஸ்காரர்கள் விலகிக் கொள்ள வேண்டும்” என்றும் அ.இ.கா. கமிட்டித் தீர்மானித்த பிறகு இந்திப் பிரசார சபாவுக்கும் அதன் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனருக்கும் இந்தி புத்தகம் அச்சுப் போட்டுப் பிழைக்கும் பார்ப்பனருக்கும் இனிப் பொதுப் பணம் அழுவது யோக்கியமா நாணயமா என்று கேட்கின்றோம்.

எனவே இந்தியை எதிர்ப்பதோ இந்தி ஒழிக என்று சொல்லுவதோ இனி எந்த விதத்திலும் காங்கரஸ் துரோகமே ஆகாது என்பதை இனியாவது காங்கரஸ் பக்தர்கள் உணர்வார்களாக. இந்தி வகுப்பு வாதத்துக்கு ஆதாரமாயிருக்கிறது என்றும் கஷ்டமான வார்த்தைகள் கொண்ட பாஷை என்றும் அதை விட்டுவிட வேண்டும் என்றும் கா. கமிட்டி தீர்மானித்த பிறகாகவாவது காங்கரஸ் பக்தர்கள் இனி “இந்தி வாழ்க” என்று கத்தமாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

பொது ஜனங்கள் ஒரு விஷயம் நினவில் இறுத்த வேண்டிக்கொண்டு இதை முடிக்கின்றோம். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் இந்தி கட்டாய நுழைவால் என்ன என்ன கெடுதி ஏற்படும் என்று சொல்லி வந்தார்களோ அவையும் இந்தி கட்டாயம் எடுபட்டால் மாத்திரம் போராது இந்தி பிரசாரமே ஒழிய வேண்டுமென்று எதிர்ப்பாளர் பலர் சொல்லி வந்ததும் இன்று அ.இ.கா. கமிட்டி மூலமே மெய்யாக ஆகி விட்டது என்பதோடு இந்தி நுழைக்கும் மனப்பான்மையும் வெளியாகிவிட்டது என்பதாகும்.

ஆகவே இனி கனம் ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன என்பதை கவனிப்போம்.

கடைசியாக ஒரு மகிழ்ச்சியான சேதி என்னவென்றால் இந்தியை எதிர்த்து சிறை சென்று 4 மாத தண்டனை காலம் கழிந்து விடுதலையான தோழர் ராமச்சந்திரன் இன்று மறுபடியும் இந்தியை எதிர்த்து சிறை சென்று 4 மாத கடின காவல் தண்டனையை தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்னும் கோஷத்துடன் மகிழ்ச்சியோடு ஏற்று சிறைசென்று இருக்கிறார் என்பதாகும்.

(04.10.1938 “விடுதலை” தலையங்கம்)

குடி அரசு – கட்டுரை – 09.10.1938

You may also like...