கண்ட்ராக்ட்டு ராஜ்யம்

 

காங்கரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களிலே, நுழைந்த காலத்திலே, அங்கு கண்டிராக்ட் ராஜ்யம் நடப்பதாகவும் பொதுமக்களின் பணம் கொள்ளை போவதாகவும், நகரசபை, ஜில்லா போர்டுகளிலிருந்து கொண்டு உற்றார் உறவினருக்கு கண்டிராக்ட் வாங்கித்தருவதாகவும், லஞ்ச லாவணம் தாண்டவமாடி நிர்வாகமே சீர்குலைந்து நாறுவதாகவும், இடிமுழக்கம் செய்தார்கள். நமது மக்களும் ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து கொண்டு, காங்கரசாரின் பேச்சைக் கேட்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர் சிருஷ்டித்த சதியாலோசனையில் பங்கெடுத்துக் கொண்டனர். காங்கரஸ்வாதிகள் தாங்கள் முனிசிபாலிட்டி, ஜில்லாபோர்டு முதலிய இடங்களைக் கைப்பற்றினால் கண்டிராக்ட்டு ராஜ்யத்தை ஒழித்து அவைகளைப் பரிசுத்தப்படுத்தப் போவதாகவும் சொன்னார்கள். நமது மக்களும் அதனை நம்பி காங்கரஸ்காரர்களிடம் ஸ்தல ஸ்தாபனங்களை ஒப்படைத்தனர்.

பிறகு நடந்ததென்ன? யார் கண்டிராக்ட்டு ராஜ்யமென்ற வீண்கூச்சலைக் கிளப்பினார்களோ அவர்களே கண்டிராக்ட்டு ராஜ்யத்தின் கர்த்தாக்களானார்கள்! யார் ஊழலை ஒழிப்போம் என்ற பித்தலாட்டப் பேச்சுப் பேசி ஓட்டுகளைப் பறித்தார்களோ அவர்களே ஒருவர் சிண்டை மற்றொருவர் பற்றிக் கொண்டு “நீ அயோக்கியன், நீதான் அயோக்கியன்” என்று சந்தி சிரிக்க வெளியே வந்துவிட்டார்கள். இந்த அவ லட்சண ஆட்சியைப்பற்றி நாம் பலமுறை எழுதினோமென்றாலும், பொது மக்களும் காங்கரஸ் ஆட்சியின் கோளாறுகளை படிப்படியாக உணர்ந்து வருகிறார்களென்ற போதிலும், காங்கரஸ்காரர்கள் தங்கள் அக்கிரமப் போக்கின் அளவையோ, வேகத்தையோ கொஞ்சமேனும் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

பொது மக்களின் வயிறு எரிய எரிய ஸ்தல ஸ்தாபன முறைக்கே பெரிய அவமானம் வரும்படியாக, சமீபத்திலே சேலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. சென்னை மாகாணம் மட்டுமேயன்றி, எல்லா மாகாணமுமே இந்த சேலம் சேதியைக் கேட்டால் திடுக்கிட்டுப் போவதுடன், இது ஒன்றையே அளவுகோலாக வைத்துக்கொண்டு ஆச்சாரியார் ஆட்சியின் யோக்கியதையை அளந்துபார்க்கும் அவ்வளவு அக்கிரமமான சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தை வெகுவாகக் கிளப்பிவிட்ட சம்பவம். சேலம் நகரசபைத் தலைவரை தமது பதவியை ராஜிநாமாச் செய்யும்படி தூண்டிவிட்ட சம்பவம். ஐந்து இலட்ச ரூபாய் அநியாயமாகக் கொள்ளை போகும் அக்கிரமமான சம்பவம்.

சேலம், வரட்சிமிக்க ஜில்லா சரியான ஜல வசதியின்றி அந்த ஜில்லாவாசிகள் படும்பாடு யாவருமறிந்ததே. அக்குறை நீங்கினால்தான் அவர்கள் சுகம் பெற முடியும். இந்நிலையில் சேலம் நகர சபையார், ஒரு “தண்ணீர் சப்ளைத் திட்டம்” தயாரித்தனர். நகரசபைத் தலைமைப் பதவியைத் தீவிரமாக, சுயமரியாதை உணர்ச்சி காரணமாக ராஜிநாமாச் செய்த தோழர் டாக்டர் ராஜரத்தினம் அவர்கள் கூறியுள்ளபடி இதுவரையில் நகரசபையார் தீர்த்து வைத்ததற்குள் இதுவே பெரிய திட்டம். இத்திட்டத்தில் இலட்சக் கணக்கான பொதுமக்களின் பணமும், சுகமும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றி, நகரசபை அங்கத்தினர்களின் வெற்றி, ஸ்தல ஸ்தாபன முறையின் வெற்றி என்றுங் கூறலாம். அப்படிப்பட்டத் திட்டத்தை, நகரசபையார் தயாரித்தனர். டெண்டர்களை வரவழைத்துப் பரிசீலனை செய்தனர். சர்க்கார் நிபுணர்களைக் கலந்து அவர்கள் ஆலோசனையை ஏற்றனர். அதன் படியே பம்பாய் ஹ்யூம் (ஏதட்ஞு) கம்பெனியாரின் டெண்டரை ஒப்புக்கொள்வது என்று நகரசபை தீர்மானித்து ஹ்யூம் கம்பெனியாரின் ஸ்டீல் குழாய்கள் சிலாக்கியமானவை என்றும், அவைகளையே உபயோகிக்கலாமெனவும் சென்னை சர்க்கார் நிபுணர்கள் 7.7.37ல் கூறினார்கள். அதன்படியே 1580-ம் நம்பர் சர்க்கார் உத்திரவும் அன்றே பிறந்தது.

சுதேசி கம்பெனியாகிய ஹ்யூம் கம்பெனி சரக்கு நல்லதென அத்தாட்சியும் நிபுணர்கள் அங்கீகாரமும் பெற்றதுடன் அந்தக் கம்பெனியார் வேலையை பத்து மாதங்களுக்குள் தீர்த்துக்கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டனர். இவ்வளவு செளகரியத்துடன், இந்தக் கம்பெனியாரே மற்ற கம்பெனிகளைவிடக் குறைந்த அளவு பணத்திற்கு, மேற்படி திட்டத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதாக டெண்டர் சமர்ப்பித்தனர். ஆகவே, பொது மக்களின் க்ஷேமத்தில் அக்கரையும் பொது ஜன வரிப்பணத்தைச் செலவிடும் பொறுப்பில் நாணயமும் நீதியும் காட்ட வேண்டி நகரசபை மேற்படி ஹ்யூம் கம்பெனியின் டெண்டரை ஒப்புக்கொண்டு இதை அங்கீகரிக்கும்படி சென்னை சர்க்காருக்கு எழுதிக் கேட்டது.

பெருந்தொகை செலவிடப்படவேண்டிய திட்டமாதலால், இதனைப் பைசல் செய்யும் உரிமை சென்னை சர்க்காருக்கே உண்டு. அதனை நகரசபைத் தலைவரோ, மற்றும் யாரோ ஆக்ஷேபிக்கவில்லை. நியாயமான, சிக்கனமான திட்டத்தை சர்க்கார் ஒப்புக்கொள்வதில் தகராறும் வரக் காரணமில்லை. ஆயினும் நடந்தது என்ன? சென்னை சர்க்கார் சேலம் நகரசபை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதுடன் மைசூர் பத்ராவதி கம்பெனியின் டெண்டரை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தலாயிற்று. இந்தக் கம்பெனியின் டெண்டரை ஒப்புக்கொண்டால் ஹ்யூம் கம்பெனியார் டெண்டரின்படி தர வேண்டியதைவிட அதிகமான பணத்தை சேலம் தரவேண்டும். மேலும் மைசூர் பத்ராவதி டெண்டர் பூர்த்தி பெறாதது. ஆச்சாரி சர்க்கார் கட்டாயத்தின் மீது பத்ராவதி கம்பெனியின் டெண்டரை சேலம் நகரசபை ஒப்புக்கொள்வதானால், சுமார் ஐந்து இலட்ச ரூபாய், சேலம் நகரவாசிகளுக்கு நஷ்டமாகும். ஐந்து லட்ச ரூபாய் கொள்ளை போவதை யார்தான் சகிப்பார்கள்? ஆச்சாரியார் ஆட்சியிடம் மோகங் கொண்டவர்களும், அவர் பாசத்தால் கட்டப்பட்டவர்களானாலுங் கூட, வீணாக, மனதறிந்து, ஐந்து இலட்ச ரூபாயைப் பாழாக்க யாருக்குத்தான் மனம் வரும்? பொது மக்களின் வரிப்பணத்தில் ஐந்து இலக்ஷ ரூபாயை ஆச்சாரியாரின் ஆணவ ஆட்சிக்கென்றே அர்ப்பணம் செய்யவேண்டுமா? எங்கு நடக்கும் இவ்வளவு பெரிய அக்கிரமம்? நகரசபை நீதியின் வழி நின்றது. தலைவரும், அங்கத்தினர்களும் சர்க்கார் கூறிய யோசனையை ஏற்க மறுத்து, பழையபடி ஹ்யூம் கம்பெனிக்கே கண்டிராக்டை தரவேண்டுமெனவும் அதற்கான காரணங்களைக் காட்டியும், மைசூர் கம்பெனியின் டெண்டரை ஒப்புக்கொள்வதால் பெரும் நஷ்டம் வருமென்பதை விளக்கியும், சென்னை சர்க்காருக்கு மனுச்செய்து கொண்டார்கள். ஆச்சாரியார் ஆட்சியிலே வேண்டுகோள், நுழைய இடமேது? சேலம் பொதுமக்கள் இந்த அக்கிரமத்தைக் கண்டித்துப் பல கூட்டங்கள் போட்டனர். சேலம் கொதித்தது. ஆச்சாரி சர்க்கார் ஏன் இந்த அநியாயத் தீர்ப்பு கொடுத்தனர் என பொது மக்கள் வினவினர். ஆச்சாரி சர்க்காருக்கு மைசூர் பத்ராவதி கம்பெனி மீது இப்படி திடீர்க் காதல் ஏற்படக் காரணமென்ன? என்று கேட்டனர். ஐந்து லக்ஷ ரூபாயை நஷ்டமாக்கிக் கொண்டாவது, இந்த பத்ராவதி கம்பெனிக்கே கண்டிராக்ட்டைத் தரவேண்டிய காரணந்தான் என்ன? ஆச்சாரியார் ஆட்சி முறையில் இவ்வளவு கோணலா இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனங்கொதித்துக் கேட்டனர். பத்ராவதி கம்பெனியிடம் வேலையை ஒப்புவிக்க ஒருவிதமான காரணமும் காட்டப்படவில்லை. பத்ராவதி கம்பெனிக்கு யோகம் பிறக்கும்படியான அவ்வளவு சிலாக்கியம் அதன் சரக்கினிடம் உண்டா, டெண்டரில் உண்டா என்று பார்த்தால் “இல்லை” “இல்லை” என்றே பதில் கிடைக்கிறது. அப்படியிருக்க பத்திராவதி கம்பெனிக்கு சலுகை காட்டி, ஐந்து லக்ஷம் ரூபாய் நஷ்டம் வருவதானாலும், அந்தக் கம்பெனிக்குத் தான் கண்டிராக்ட்டு தரப்படவேண்டுமென ஆச்சாரி வர்க்கம் வற்புறுத்துவது ஏன்? “பொது மக்கள் க்ஷேமமே என் உயிர்; அவர்கள் பணத்தை கண்டிராக்டு ராஜ்யம் கொள்ளை கொண்டு போகிறது. அதை நான் ஒழிக்கப் போகிறேன்” என்று கூறிவந்த ஆச்சாரியார், சேலம் வாசிகள், வயிறு பற்றி எரியும்படி, ஐந்து லக்ஷ ரூபாயை அதிகமாகக் கொட்டி அழச் சொல்லக் காரணம் என்ன? ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தொகையுள்ள டெண்டர்களை இறுதியாக அனுமதிக்கும் உரிமை சர்க்காருக்கு உண்டு என்றாலும், அதனை இப்படி அநியாயமாகப் பிரயோகித்து, சேலம் வாசிகளுக்குத் துரோகம் செய்யலாமா? என்று கேட்கிறோம். பத்ராவதி கம்பெனி ஒரு பார்ப்பனக் கம்பெனி! அதைத்தவிர, அதனிடம் வேறு ஒரு விசேஷமுமில்லை. சாமான்களிலோ, வேலை பூர்த்தி செய்து தரும் கால அளவிலோ, டெண்டர் தொகையிலோ, டெண்டர் அனுப்பிய 16 கம்பெனிகளில், பத்ராவதி கம்பெனியார் தங்கள் விசேஷத்தைக் காட்டவில்லை. மாறாக, நகரசபையின் அபிப்பிராயத்தின்படி, இந்தக் கம்பெனியின் டெண்டர் சுமார் ஐந்து இலக்ஷம் ரூபாயைப் பாழாக்குகிறது. எனினும் இந்தப் பார்ப்பனக் கம்பெனிக்கே சேலம் நகரசபை இணங்க வேண்டுமென ஆச்சாரியார் சர்க்கார் வற்புறுத்துகின்றனர். இதைவிடக் கொடுமை வேறெதுவுமிராதே. இதைக் காட்டிலும் அநியாயம் வேறெங்கு காட்டமுடியும்? “ஆச்சாரியார் மைசூர் விஜயஞ் செய்தாரல்லவா; அவருக்குத் தெரியாதா பத்ராவதி கம்பெனியின் பெருமை?” என்றும், இன்ன மந்திரியின் பந்து அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறார், ஆகவேதான் இந்த சலுகை என்றும், “ஊர் வதந்தி உலவுகிறது. பொதுக் கூட்டங்களிலே, சர்க்கார் போக்கு கண்டிக்கப்பட்டு, நகரசபையிலே விவாதிக்கப்பட்டு, விஷயம் பூராவும் வெளிக்கு வந்த பிறகு, பொதுமக்கள் கண் விழித்துக் கொண்டிருக்கையிலேயே, ஆச்சாரியாரின் தண்டம், நகரசபை மீது வீசப்பட்டும் விட்டது. இடையே, சேலம் விஜயம் செய்த, கனம் டாக்டர் ராஜன் இது விஷயமாக 6.2.38ல் நகரசபைக் கவுன்சிலர்களை, நகரசபைக் கட்டிடத்தில் தனி அறையில் அழைத்து வைத்துப் பேசி, என்ன பேசினார் என்பதை வெளியே சொல்லக் கூடாதென்று வாக்குறுதியும் பெற்றுப் போனாராம்! டாக்டர் ராஜன் அவர்கள் இதில் ஏன் பிரவேசிக்க வேண்டும்? பகிரங்கமாக சர்க்கார் போக்கை விளக்கி, பொது மக்களின் சந்தேகத்தைப் போக்காமல், திரைமறைவில் “திவ்வியப்பிரபந்தம்” படிப்பானேன்? மூடு மந்திரமா? உபதேசமா? என்ன நடந்தது அன்றைய இரகசியக் கூட்டத்திலே? சேலம் நகரவாசிகளைப் பொறுத்த விஷயமல்லவா? பல இலக்ஷக்கணக்கான ரூபாய் சம்மந்தப்பட்ட பொதுக்காரியமல்லவா? இதிலே ரகசியம் ஏன்? டாக்டர் ராஜன், இந்த “நாடகத்தில்” நுழைந்த காரணம் என்ன? என்று கேட்கலாம். ஆனால், டாக்டர் ராஜன் மந்திரி சபையில் நுழைந்த விந்தையைக் கண்டு, சகித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள், சேலம் சம்பவத்தில் அவர் நுழைந்ததைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற துணிபு அவருக்கு இருக்குமென எண்ணுகிறோம்.

டாக்டர் ராஜன் விஜயம், சேலம் சிக்கலைத் தீர்த்துவிடவில்லை. 9.2.38ந் தேதி நடந்த நகரசபை விசேஷக்கூட்டத்தில், நகரசபையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டனர். சர்க்காரின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதென நகரசபை தீர்மானித்து புனராலோசனை செய்யும்படி சர்க்காரை வேண்டிக்கொண்டது. பார்ப்பன “பிளேக்” பரவுவதாகக் கூறி “ஈரோடு இனாகுலேஷன்” பெற்ற வீரரின் தந்தையாரும், மற்றொரு காங்கரஸ் மேல்சபை மெம்பரும், அன்றைய நகரசபைக் கூட்டத்திற்கு வரவில்லையாம். அவர்களுக்கு வேறு தொல்லை இருந்திருக்கலாம். ஆனால் வந்தவரில் பெரும்பாலோர், சர்க்கார் யோசனையை ஏற்க மறுத்தனர். நியாயபுத்தி படைத்த, நீதி செலுத்துவதில் நோக்கங்கொண்ட, நிதான சுபாவமுடைய, பாரபட்சமற்ற சர்க்காராயிருந்தால் நகரசபையின் வேண்டுகோளின் படியன்றோ நடந்திருக்கும். ஆனால் ஆச்சாரியார் ஆட்சியிலே நடந்ததென்ன? 2.3.38ல், சென்னை சர்க்கார், தமது அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள முடியாதென இறுதியாகத் தெரிவித்தாகிவிட்டது. சேலம் வாசிகள் தலையில் இடி விழுந்தேவிட்டது. ஐந்து இலக்ஷ ரூபாய் அனியாயமாகப் பாழாக்கப்படப்போகிறது. ஆச்சாரி சர்க்காரின் ஆதரவைப் பெற்ற பத்ராவதி கம்பெனி, சேலம் நகர வாசிகளைக் கேலிசெய்து கைகொட்டி நகைக்கப் போகிறது. ஆம்! நகரசபை இருக்கலாம். அதிலே மெம்பர்கள் பலர் இருக்கலாம். தலைவர் இருக்கலாம். பொதுக்கூட்டங்கள் போடலாம். கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றலாம். ஆனால் ஆச்சாரியாரின் அதிகாரம் இவைகளைச் சட்டை செய்யக் கூடியதல்ல! அவர் ஒரு ஹிட்லர்! அவரிடம் சிக்கிய பிறகு, அவர் வார்த்தையே சட்டம்! அவர் பார்வையே யோகம்! அந்த நிலைக்குத்தான், தமிழ்நாடு வந்துவிட்டது. இல்லையேல் இவ்வளவு பகிரங்கமான “பாதகம்” இழைக்கப்படுமா? பத்ராவதி கம்பெனியாரின் டெண்டரைத் திருத்தி அமைக்க சலுகை காட்டப்பட்டது. ஆனால் அதே சலுகை மற்ற கம்பெனிகளுக்கு இல்லை, ஏன்? ஆச்சாரியாரின் ஆட்சியிலே, ஏன்? என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. நான்கு மாதங்களுக்கு முன்னால், ஹியூம் கம்பெனி குழாய்களை சிலாக்கித்த சர்க்கார் நிபுணர்கள் இப்போது அதைக் கண்டிக்கிறார்கள்! இது என்ன விசித்திரம்? நிபுணர்கள் நான்கு மாதத்திலே ஏன் இப்படி தமது அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டனர்? என்று கேட்கலாம். சனாதன சர்க்காரிலே இது சகஜம் என்பதைத் தவிர வேறு பதில் இதற்கும் கிடைக்காது.

நகரசபையின் உரிமையில் காரணமின்றி கைவைத்து, ஆச்சாரி சர்க்கார், ஸ்தலஸ்தாபன நிர்வாகப் போக்கிற்கே உலை வைத்து விட்டது. நீதி, நியாயம், நேர்மை, பாரபட்சமற்ற தன்மை, சிக்கனம், யாவும் ஆச்சாரியார் ஆட்சி முன்னம் ஓடிப் பறக்கின்றன. பொதுஜன அபிப்பிராயம், புகலிடமின்றித் தவிக்கிறது. மக்களின் சுயமரியாதை சிதைக்கப்படுகிறது. இதுகண்ட நகரசபைத் தலைவர் டாக்டர் ராஜரத்தினம், இந்த “பாதகத்தில்” பங்கெடுத்துக்கொள்ளாது, ஆச்சாரியார் அடி பணியாது, பொது ஜனக்ஷேமத்தை மதித்து தமது பதவியை ராஜிநாமாச் செய்தார். அந்த சுயமரியாதை வீரரை நாம் வாழ்த்துகிறோம். அதைப்போலவே 11 கவுன்சிலர்களும் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்து விட்டனர். அதற்காக அவர்களையும் நாம் பாராட்டுகிறோம். ஆனால் அத்துடன் அவர்கள் பொறுப்பு நின்று விடவில்லை. சர்க்காரின் இந்த சனியன் பிடித்த போக்கை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவேண்டும். பொது மக்களிடம் விஷயத்தை விளக்க வேண்டும். ஆச்சாரியார் ஆட்சியின் அலங்கோலத்தை நாடறியச் செய்யவேண்டும். நகரசபைக்குத் தலைவராக இருந்தவரின் கடமை அது. கவுன்சிலராக இருந்தவர்களும் இக்கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அதை அவர்கள் செய்வார்களாக. கண்டிராக்டு ராஜ்யத்தைத் தொலைக்கவே காங்கரசை ஆதரித்தோம் என்று கூறிய மக்கள், எங்கு கண்டிராக்டு ராஜ்யம் தாண்டவமாடுகிறது என்பதை இனியேனும் உணர்வார்களாக. வெளிவந்த நகரசபை அங்கத்தினர்கள், நாடு முழுவதும், இந்த நாற்றமடிக்கும் ஆட்சியினை விளக்க வேண்டும். அக்கிரகார அடிமைகளுக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த ஆட்சியிலே பங்கு இல்லை, நீதியில்லை நியாயம் கிடைக்காது என்பதை வருத்தத்துடனே மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு – கட்டுரை – 13.03.1938

You may also like...