ஈ.வெ.ரா. அறிக்கை பரீøை பார்க்க தொண்டர்களுக்கு வேண்டுகோள்

 

இதுவரை எந்த பத்திரிகைகளுக்கும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சம்பந்தமாக நான் ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை.

ஆனால், இப்பொழுது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை குறித்து எனது அபிப்பிராயத்தை வெளியிட வேண்டும் என நான் கருதுகிறேன். அதோடு கனம் பிரதம மந்திரி தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் இந்தி எதிர்ப்பாளர்களை குண்டர்கள் என்றும் குண்டர்கள் கிளர்ச்சி என்றும் கூறியிருப்பதற்கும் இச் சமயத்தில் பதில் எழுத வேண்டுமென்று கருதுகின்றேன்.

சென்றவாரம் பொப்பிலிராஜா சாஹிப் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அது மிக்க பெருந்தன்மையாகவும் அவரது பரம்பரைக்கு ஏற்றதாகவும் இருந்தது என்பதுடன் அதில் நிலைமையை நன்கு ஆராய்ந்து விளக்கப்பட்டுமிருந்தது. மேலும் அதில் இந்தி பிரச்சினையை குறித்து பொதுஜன வாக்கு எடுக்க வேண்டும் என்றும் இரு கட்சியினரும் இதற்கு கட்டுப்பட வேண்டுமென்றும் காட்டப்பட்டிருந்தது.

அது ஒரு நேர்மையான யோசனைதான். அதை எவரும் மறுக்கவு மாட்டார்கள். காங்கரசுக்காரர்களும் காந்தியாரும் இந்த பொதுஜன வாக்கை மதித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இது சமயம் மாத்திரம் கனம் ராஜகோபாலாச்சாரியார் இந்த யோசனையைக் கண்டு ஆத்திரங் கொண்டு விட்டார். வேறு பதில் சொல்ல வகையில்லாததால் இந்த இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர்களை வாயில் வந்தபடி கன்னா பின்னா என்று வசைமாரி பொழிய ஆரம்பித்துவிட்டார். இதன்மூலம் ஆச்சாரியாரின் உண்மை நிறம் விளங்கிட்டதுடன் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தை பிரயோகிப்பது காங்கரஸ் மந்திரிகளுக்கு எவ்வளவு முரணான காரியம் என்பதையும் ராஜா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தி எதிர்ப்பாளர் மீது காங்கரஸ் மந்திரிகள் ்கொடிய” கிரிமினல் திருத்தச் சட்டத்தை பிரயோகிப்பதை ராஜா சாஹிப் மட்டுமல்ல, தோழர் ஆச்சாரியாரின் அந்தரங்க நண்பர்களும் கண்டித்திருக்கிறார்கள்.

தோழர் ஆச்சாரியார் கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிப்பதை அவரது நண்பர்கள் மட்டுமல்ல வடநாட்டு காங்கரஸ் பத்திரிகைகள் எல்லாமும் கண்டித்திருக்கின்றன.

அப்படியிருந்தும் ்ராஜாவுடன் ராஜீய விஷயங்களைக் குறித்தோ நிர்வாக விஷயங்களைக் குறித்தோ வாதஞ்செய்ய விரும்பவில்லை” என தோழர் ஆச்சாரியார் கூறுகிறார். வாதத்துக்கு ஆதாரமிருந்தால் ஆச்சாரியார் அப்படிச் சொல்லி மறைந்து கொண்டிருப்பாரா?

தோழர் ஆச்சாரியாருடன் ராஜீய விஷயங்களைக் குறித்தோ நிர்வாக விஷயங்களை குறித்தோ வாதஞ் செய்ய ராஜா சாஹிப் ஆவல் கொண்டிருக்கிறார் என நான் கருதவில்லை.

அன்று எந்தச் சட்டத்தை தோழர் ஆச்சாரியாரும் அவரது சகாக்களும் கண்டித்தார்களோ இன்னும் அவரது சகாக்கள் கண்டித்து வருகிறார்களோ அதே சட்டத்தை தோழர் ஆச்சாரியார் உபயோகித்து வரும் மதியீனத்தைத் தான் ராஜாசாஹிப் விளக்கியிருக்கிறார்.

கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிப்பதற்குத் தகுந்த காரணங்கள் நாளதுவரை தோழர் ஆச்சாரியார் விளக்காமல் பொருத்தமற்ற கதைகளையும் பழமொழிகளையும் உதாரணங்களையும் சொல்லிக் கொண்டு தமது தப்பிதத்தை மறைத்துக் கொண்டு ராஜா சாஹிப்பின் நண்பர்களையும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களையும் குறைகூறிக் கொண்டு அவர்கள் மீது பழி சுமத்தி வருகிறார்.

இதுவரை அவர் தமது செய்கைக்கு சமாதானமாக கூறுவது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள் வாயில் வந்தபடி ஆபாசமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்றும் அதை தடுப்பதற்காகத்தான் இந்தச் சட்டத்தை உபயோகிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதைத்தான் அவர் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார். வடநாட்டுத் தலைவர்களும் இதை நம்பியிருப்பதாகவும் தெரிய வருகிறது.

தோழர் காந்தியார்கூட இந்தி எதிர்ப்பாளர் ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து வருவதாக கருதுகிறாராம். இதற்குக் காரணம் தோழர் ஆச்சாரியார் விடாமல் அதையே சொல்லிக் கொண்டு வருவது என்பதேயாகும்.

எனது நண்பர் தோழர் ஆச்சாரியார் சொல்வது உண்மையாயிருந்தால் தூஷணையான வார்த்தைகளை உபயோகிப்பவர்கள் மீது ஏன் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்கிறேன்.

இதுவரை கிரிமினல் திருத்தச் சட்டப்படி சுமார் 300 பேர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் எவரும் ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்தனர் என்று குற்றம் சாட்டப்படவில்லையே.

இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் தோழர் ஆச்சாரியார் வீட்டுமுன் கூச்சல் போடும் போது போலீஸ்காரர்கள் பிரசன்னமாயிருக்கிறார்கள். அவர்கள் இம்மாதிரி ஆபாச வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் அப் போலீஸ்காரர்களை சாட்சியாக கொண்டு வந்திருக்கலாம். ஏன் தோழர் ஆச்சாரியார் இந்த அற்ப விஷயத்தை செய்யவில்லை? இதைச் செய்யமாட்டாத இவர் இந்தி எதிர்ப்பாளர்கள் காலித்தனமாக நடந்து கொள்ளுகிறார்கள், அதை அடக்க கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக்கிறேன் என்று சொல்லுவது உண்மையாகுமா?

இக்காரியத்தை நோக்கும்போது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ஆங்கிலத்தில் ்எடிதிஞு tடஞு ஞீணிஞ் ச் ஞச்ஞீ ணச்ட்ஞு ச்ணஞீ டச்ணஞ் டிt” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது நாயைக் கொல்ல வேண்டுமானால் அதற்கு முதலில் கெட்ட பெயரை உண்டு பண்ணி அப்புறம் அதைக் கொன்றுவிடு என்பதாகும். அதுபோலவே ஒரு இயக்கத்தையோ, ஒரு முயற்சியையோ அழிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு கெட்ட பெயரையோ அல்லது அதன்மீது ஒரு பொய் பழியையோ உண்டு பண்ணி பிரசாரம் செய்து அழித்துவிடுவது என்பதாகும்.

்நடு இரவில் வீட்டில் திருடன் புகுந்துவிட்டால் கைக்குக் கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு தானே திருடனைத் தாக்க வேண்டு”மென திருவல்லிக்கேணி கடற்கரையில் தோழர் ஆச்சாரியார் பேசுகையில் தனது அடக்குமுறைக்கு சமாதானம் கூறியிருக்கிறார்.

இந்த ஒரு கூற்றே தோழர் ஆச்சாரியார் மனக் கருத்தை பளிங்கு போல் விளக்கி விட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வலுவடைந்து வருவதைக் கண்டு தோழர் ஆச்சாரியார் உடல் தளதளர்த்து – விடவிடத்து விட்டார் என்பதில் சந்தேகமில்லை.

இந்தி எதிர்ப்புக்கு நாட்டில் எவ்வளவு செல்வாக்கிருக்கிறது என்பதை திருவல்லிக்கேணி கடற்கரை கூட்டங்கள் நன்கு விளக்கி விட்டன.

ஆதலால் தோழர் ஆச்சாரியார், இந்தி எதிர்ப்பாளர் ஆபாச வார்த்தைகளைச் சொல்லி வருகிறார்கள் என்று சாக்கு சொல்லிவரும் வாதத்தை ஒழிப்பதற்காக, இனிமேல் இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள், பொது ஜனங்களுக்கு உண்மையை அறியச் செய்ய வேண்டியது அவசியமாகும். எப்படி என்றால் மறியல் என்றால் அது எப்படி நடக்கிறது, அங்கு என்னென்ன நடக்கிறது, தொண்டர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்பன போன்ற விஷயங்கள் பொது ஜனங்கள் அறியமுடியாதபடி ஒரு மூலையில் குடி இருக்கும் தோழர் ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்தில் தொண்டர்கள் நிற்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ள சவுகரியமாகிவிடுகிறது. ஆதலால் அதை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

்தமிழ் வாழ்க” ்இந்தி வீழ்க” என்ற கோஷங்களைத் தவிர வேறு கோஷங்களை இந்தி எதிர்ப்பு வாலிபத் தொண்டர்கள் செய்யமாட்டார்கள் என்பதும் செய்யவில்லை என்பதும் எனக்கு நன்கு தெரியும். சமாதானமாகவும், ஒழுங்காகவும் நடந்துகொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் இது எல்லோரும் அறியும்படி இப்போது நடந்து வருவதை போலவே இனிமேலும் பள்ளிக்கூடத்தின் முன் மட்டும் நடத்திப் பார்ப்பது நலமாகும். இதன் பேரிலாவது தோழர் ஆச்சாரியார் இந்த பழிகூறாமலும் கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு அடக்கப் பார்க்காமலுமிருக்கிறாரா என்று பார்ப்போம்.

தோழர் காந்தியார் கூட அந்த சட்டத்தின் கொடுமையான பகுதிகள் தாமதமன்னியில் ஒழிக்கப்பட வேண்டுமென தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்பொழுது இங்கு தோன்றியுள்ள பிரச்சினை இக்கிரிமினல் திருத்தச் சட்டம் இந்தி எதிர்ப்பாளர் மீது மட்டுந்தான் பிரயோகிக்கப்படுமா, மற்ற விஷயங்களிலும் பிரயோகிக்கப்படுமா என்பதாகும். ஏனெனில் ஜான்சிபார் கிராம்பை பகிஷ்கரித்து கடைக்காரர்கள் முன் மறியல் செய்த காங்கரஸ்காரர்கள் மீதும் அதற்கு ஆதரவளித்து கட்டளை இட்ட தலைவர்கள் மீதும் ஏன் இந்தச் சட்டம் பிரயோகிக்கப் படவில்லை.

ஒரு வேளை தோழர் ஆச்சாரியாருக்கு ஆளுக்கொரு நீதி காட்டும் குணம் இருக்கிறது போலும்.

ஆகவே தோழர் ஆச்சாரியார் வீட்டு முன் மறியல் செய்வதை நிறுத்தி வைத்து பார்க்க வேண்டுமென்று இந்தி எதிர்ப்புத் தொண்டர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தொடர்பாக சுயமரியாதை இயக்கத் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. செப்டம்பர் 16 இல் செய்தித்தாள்களுக்கு அளித்த அறிக்கை.

குடி அரசு – அறிக்கை – 18.09.1938

You may also like...