சாஸ்திரியார் – ஆச்சாரியார் சம்பாஷணை
சாஸ்திரியார்: ஓய், ஓய், ஆச்சாரியாரே! உம்ம காந்தியும் நீரும் ஒழிந்து போக மாட்டீர்களா?
ஆச்சாரியார்: என்ன, என்ன இப்படி கோபிக்கிறீள் சாஸ்திரிவாளே?
சா: கோபமா, மண்ணாங்கட்டியா? உம்ம தலையிலே நெருப்பை வாரிக் கொட்ட!
ஆ: சும்மா சொல்லுங்கள் சாஸ்திரிகளே. கோபப்படாதீர்கள், சங்கதி என்ன?
சா: சங்கதியா வேணான்றா! இங்காராவது சூத்திரப்பயல்கள் இருக்கிறார்களா? (என்று சுத்தியுமுத்தியும் திரும்பி பார்க்கிறார்.)
ஆ: ஒருத்தருமில்லை சொல்லுங்கோள்.
சா: நீர்தான் மகாபுத்திசாலியாயிற்றே அப்படி இருக்க இந்த எம்.சி.ராஜா என்கிற – யன் பிராம்மணாள் ஓட்டலிலே, காப்பிகடைகளிலே “பறையன் பள்ளன்” எல்லாம் ஒண்ணா பின்னா புழங்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் நீங்கள் 50-60 பிராம்மணாள் கொழுக்கட்டையாட்டமா அங்கே இருந்துண்டு அதெ பாசாக்கீட்றதா? இது என்ன கலி காலம். நீர் தான் உம் பெண்ணை காந்தி மகனுக்கு தந்தீர். தொலைந்து போமே. குரங்கு வனத்தைக் கெடுத்ததுமல்லாமெ சந்திரபுஷ்கரணியையும் கெடுத்த மாதிரி இப்படிப் பண்ணீட்டீரே இது நியாயமா? உம்ம தலையில் இடி விழாதா?
ஆ: கோபித்துக் கொள்ளாதேயும் சாஸ்திரிகளே, நன்னா யோசித்துப் பார்த்து பேசுங்கோள். சட்டத்தை நன்னா படித்து பாருங்கோள். அப்படி ஒண்ணும் நீங்கள் சொல்ற மாதிரி ஆபத்து இல்லை. அதெல்லாம் பழய மாதிரிதான் இருக்கப்போறது.
சா: அப்படியில்லையே. எல்லோரும் சொல்றாளே: இனிமேல் எல்லாம் ஒண்ணுதாண்ணு சொல்றாளே. எல்லாப் பயல்களும் வந்து ரகளை பண்ணுவான்களே. உமக்குத் தான் மெஜாரிட்டி இருந்ததே ஏன் அதை ஒழித்திருக்கப்படாது?
ஆ: அதிலே இரண்டு கஷ்டம் வந்து சேர்ந்தது சாஸ்திரியளே; என்னான்னர ஒண்ணு இரண்டு சட்டமும் ஒண்ணாய் ஒரே தடவையிலே வந்தூட்டது.
சா: என்னா சட்டம் இரண்டு அப்படி வந்தது?
ஆ: அப்படி கேளுங்கள். ஒண்ணு கோவிலுக்குள் அவணுண ஸ்தாளையெல்லாம் விடணுமென்னு. இன்னொண்ணு ஓட்டல்களிலே யெல்லாரையும் விடணுமெண்ணு.
இரண்டையும் ஏக காலத்திலே ஒழிக்க முடியாது. ஏதாவது ஒண்ணைத்தான் ஒழிச்சூடலாம்.
சா: ஏன்? அந்த நாசமாய்ப் போன சட்டங்களை ஒவ்வொண்ணாய்ப் போட்டுண்டூட்றதானே. ஏன் ஓட்டாய் போட்டுண்டீர்?
ஆ: அதிலே இன்னம் ஒரு கஷ்டமும் வந்துடுத்து. என்னான்னா அந்த நாயக்கன் இருக்கான்லோ. எந்த நாயக்கன்? ராமசாமி நாயக்கன் அவன் ஒரு மாதத்து முன்னே என்ன சொன்னான் தெரியுமா?
சா: யாரு அந்த ஈரோடு ராமசாமி நாயக்கனா? அவன் இராக்கதன் ஆச்சே! அவன் என்ன சொன்னான்?
ஆ: நீடாமங்கலத்லே மொட்டை அடிச்ச தகராறு சாக்கை வச்சுண்டு ஆதிதிராவிடாளே முஸ்லீமாக்கப் போகிறெண்ணு சொன்னான். அதனாலே ஒண்ணையாவது ஒப்துண்டூடலாம் என்னு இப்படி செய்தேன். எனக்கு தெரியாதது போல சொல்லவந்தூட்டீளே?
சா: எவனோ என்னமோ சொன்னால் அதுக்கோசரம் பிராம்மணணும் பறையணும் ஒண்ணாப் பூட்றதா?
ஆ: அப்டீன்னா பறையன்கள் எல்லாம் துலுக்கனாப்பூட்டா பரவாயில்லையா?
சா: ஏன் துலுக்கனாவான்? அதுக்கொரு சட்டம் போட்டு திருட்டு………யா பிள்ளைகளை 2-வருஷம் 3-வருஷம் களி தின்னப்போட்டா போராது.
ஆ: போதும் போதும் சாஸ்திரிவாளே. 6 – மாதம் ஒரு வருஷம் எண்ணு இந்தி எதிர்க்கிறவாளே போட்டே இந்தியா பூராவும் நாற்றது. இது வேறே சொல்றீளாக்கும்?
சா: அது நீர் பண்ணினது தப்புத்தானே? சமஸ்கிரதம் சூத்ராள், மிலேச்சாள், சண்டாளாள் வாசிக்கலாமா? நீர் வாசிக்கச் சொல்றீரே அதுதான் பகவான் உமக்கு தொல்லையை கொண்டு வந்து விட்டார். அதற்கு யாரென்ன செய்வார்?
ஆ: சரி, சரி. அவாள்ளாம் சமஸ்கிருதம் படிச்சாலும் சரி, படிக்காட்டாலும் சரி, நம்ப புராணங்கள் எல்லாம் படிக்கலாமல்லோ. அதனால்தான் கட்டாயம் படிக்கணுமென்னு சொன்னேன். அதுகளாவது படிக்கிறதாவது அந்த சாக்கிலே புராணக் காலக்ஷேபம் செய்யலாமுண்ணுதான் பின்னேயும் வேறே படிப்பு படிக்கிறதும் கொஞ்சமாவது தடை ஆகாதா?
சா: சரி எப்படியோ போகட்டும். நீராயிற்று அவாளாயிற்று. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இதை சொல்லும்.
ஆ: சாஸ்திரீளே, ஒண்ணுக்கும் பயப்படாதேள். அதல்லாம் நான் பாத்துண்டூடுவேன்.
சா: கோயில் பிரவேச தீர்மானமும் ராஜா கொண்டு வந்து தோற்றுப்போனது சரிதான். நீர் என்னமோ வேறு ஒரு மசோதா கொண்டு வரப் போகிறீராமே?
ஆ: அப்படி ஒண்ணும் இல்லை. அது மலையாளத்துக்கு மாத்தரம். அது ஒரு மாதிரி சட்டம். நீங்கள் கவலைப்பட வாண்டாம்.
சா: அங்கேதான் ஏன் இந்த சட்டம்? அப்பறமும் கலகம் தானே?
ஆ: உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவே மலையாளத்தில், திருவாங்கூரில் அந்த சட்டம் இருக்கு. மலையாளத்திலே சிலர் கூப்பாடு போட்றா. இல்லாட்டாலும் நாம் ஒரு மாதிரி சட்டம் செய்தூட்டா கொச்சி ராஜ்ஜியத்திலே ஒரு பெரிய ரகளை நடக்கும். இங்கே நாமும் திண்டாட்றோம். திருவாங்கூரிலே நம்ம சி.பி.ராமசாமி அய்யர் திண்டாட்றார். கொச்சியிலே மாத்தரம் அந்த ஆள் ஹாய்யா ஐரோப்பா பிரயாணம் செய்துண்டிருக்கார். ஆகையால் அங்கேயும் ரகளை நடக்கட்டுமே இது தான் ரகசியம்.
சா: என்னமோ ஆச்சாரியாரே, நீர் செய்யரது உமக்கென்னமோ குயுக்த்தியாக தோன்றுது. எனக்கு இதெல்லாம் பைத்தியக்காரத்தனமென்னுதா தோணறது.
ஆ: அப்படி ஒண்ணும் இல்லை. நானும் சமாளிக்கிற வரையில் சமாளிப்பேன். அவர்ணஸ்த்தாள் எல்லாம் முஸ்லீம்களாவதனால் நான் ஒப்பமாட்டேன். திருவாங்கூர் மாதிரி தான் செய்தூடுவேன். ஆனாலும் என்னாலானவரை பார்த்துத்தான் செய்வேன், நம்புங்கள். மற்றதெல்லாம் எனக்குத் தெரியும். அதில் அனேக சூஷ்மங்கள் உண்டு. இப்போது – விளக்காதீர். அடங்கட்டும். ஆகட்டும் ஆகட்டும் என்று சொல்லிண்டே வந்து ஆலய பிரவேச சட்டத்தை சமயம் பார்த்து நேற்று சட்டசபையில் கழுத்தறுத்துவிட வில்லையா. இதே சட்டத்தை 4 வருஷத்துக்கு முன் இந்திய சட்டசபையில் காந்தியார் பெயரைச் சொல்லி கொலை செய்து விடவில்லையா. மற்றும் ஆந்திர மாகாணம் பிரிவினை பாசாயும் கூட அமலுக்கு வராமல் செய்யவில்லையா?
சா:- என்னமோ நீர் செய்யரது உமக்குத்தான் சரின்னு தோன்றாப்லே இருக்கு. கடைசியா மோசம் நாசம் கம்பளி வேஷம் தான். நான் போயிட்டு வர்றேன்.
குடி அரசு – உரையாடல் – 28.08.1938