கவர்னர் வரவேற்பும் திருநெல்வேலி ஜில்லா போர்டும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தடபுடல்

மூர்த்திக்கு ஒர் சட்டம் தளவாய்க்கோர் சட்டமா?

காங்கிரசிலும் மனுநீதியா?

சிதம்பரப் பார்ப்பான் செய்தால் கப்சிப்

திருநெல்லை முதலியார் செய்தால் கடபடாவா?

இந்த ஏமாற்று இன்னும் எத்தனை நாளைக்கு?

திருநெல்லைக்கு கவர்னர் இம்மாதம் 16ந் தேதி வந்தார். திருநெல்வேலி ஜில்லா போர்டு, கவர்னருக்கு வரவேற்பு பத்திரம் வாசிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தது. போர்டின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றி வைப்பது போல இத்தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேணடியது பொறுப்புள்ள தலைவரின் கடமை. அதில் அறிவுள்ளவருக்குள், சதி ஆலோசனை யில்லாதாருக்குள் அபிப்பிராய பேதமிருக்க முடியாது.

அதுவே சரியான வழியென்று நமது மாபெருந் தலைவரும், பாரத மாதாவின் வீர புத்திரரும், சுயநலமின்மைக்கு ஓர் அறிகுறியாய் வாழ்க்கை நடத்தியவரும், சுதந்திர போராட்டத்திலே உயிரிழந்தவரும், சத்தியமூர்த்தி அய்யர் ஜெயில் வாழ்விற்குப் பயந்து திருவல்லிக்கேணியில் ஒளிந்து கிடந்த காலையில் சிறைச்சாலை சென்றவருமாகிய காலஞ்சென்ற தோழர் வி. ஜே. பட்டேலே காண்பித்திருக்கிறார். அவர் அசம்பிளிக்கு காங்கிரசின் பேரால் தெரிந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு உபதலைவராகவும் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவாலேயே, சர்க்கார் போட்டிக்கும் எதிராய் அசம்பிளி தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலானவுடன் அவர் என்ன சொன்னார்? நான் இனிமேல் ஓர் கட்சியையும் சார்ந்தவனல்லேன். எக்கட்சி கட்டுப்பாட்டுக்கும் அடங்கியவனல்லேன் என்றார். சொன்னதோடு நின்றாரில்லை; செய்கையிலும் காட்டினார். அசம்பிளியில் வைசிராய் பேச வரும்பொழுது காங்கிரசார் வெளியேற வேண்டும் என்பது காங்கிரஸ் விதி. அப்படியே மோதிலால் நேரும் மற்றவர்களும் வெளியேறுவார்கள். ஆனால் பட்டேல் அசம்பளியில் இருந்து வைசிராயை மரியாதையாய் வரவேற்பார். அம்மட்டோ! சில வருடங்களுக்குப் பின் காங்கிரஸ், சட்டசபைகளில் யாதொரு பயனுமில்லை, காங்கிரஸார் எல்லோரும் வெளியேறவேண்டும் என்று தீர்மானித்தது. எல்லாரும் வெளியேறினார்கள். சட்ட சபையிலிருப்பது வீணென்று தீர்மானித்த பிறகும் பட்டேல் அசம்பிளி தலைவராகவேயிருந்தார். ஏன்? அதுதான் தலைவர் பதவியேற்ற எவரும் நடக்கவேண்டிய முறை. அதைச் சரியென்று மகாத்மா காந்தி, நேரு போன்ற மாபெரும் தலைவர்களும் ஒப்புக்கொண்டார்கள். பட்டேலாவது, நேருவாவது நமது அய்யரை விட தேசபக்தியிலும், காங்கிரஸ் பக்தியிலும் குறைந்தவர்களா? இல்லையே!

ஆனால், மகா மேதாவியென்று தன்னைத்தானே மதித்த சத்தியமூர்த்தி அய்யரைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஜில்லா போர்டு தலைவர் வரவேற்பு பத்திரம் வாசித்துக்கொடுத்தல் கூடாது என்று ஒரு பெரிய உத்திரவு போட்டுவிட்டது; அதற்கு கடுமையான தண்டனையும் விதித்து விட்டது. என்ன? “பொது வாழ்வில் மூக்கறுபட்டுப்போமாம்”. மூக்கறுக்கும் தொழிலில் வேலையில்லா மூர்த்தி யிறங்கிவிட்டார். அதற்குத் “தினமணி” பத்திராதிபரும் கத்திப் பெட்டி தூக்கி பின் தொடர்ந்து விட்டார். “நண்பர்களே மூக்கு ஜாக்கிரதை” ஜாக்கிரதை போனால் தலை முடியுடனாவது நிற்கட்டும்.

இப்படிச் செய்வதற்கு அய்யரும் அவரது கூலிகளும், தோழர் பட்டேலை விட, மகாத்மா காந்தியை விட, பண்டித மோதிலால் நேருவை விட எதில் உயர்ந்தவர்கள்? தேசபக்தியிலா, தேசத் தொண்டிலா, தேசத்திற்காக பட்ட கஷ்டத்திலா, ராஜீய ஞானத்திலா, யோக்கியதையிலா, எதில்? ஒன்றிலு மில்லையே? அல்லது இவர்கள் சொல்வது தான் காங்கிரஸ் விதியா? அந்த விதிதான் இதுவரை கைப்பற்றப்பட்டு வந்திருக்கிறதா? காங்கிரஸ் விதிகளை மீறினவர்களுக்கெல்லாம் மூக்கறுத்தாய்விட்டதா? எத்தனை பேருக்கு இன்று மூக்கில்லை? இவைகளைக் கவனிப்போம்.

இதுவரையும் “தாலி அறுத்த மூர்த்தியா”யிருந்து இன்று மூக்கறுக்கும் மூர்த்தியாய் மாறின சத்தியமூர்த்தி அய்யரின் யோக்கியதை தான் என்ன? காங்கிரசின் விதிகளை விட காங்கிரசின் கொள்கை தான் முக்கியமென்று ராஜீயக் குழந்தைகளும் அறியும், காங்கிரசின் கொள்கை (இணூஞுஞுஞீ) பூர்ண சுதந்திரம் பெறுதல் என்பது காங்கிரசில் நாலு அணாக் கொடுத்து கையெழுத்துப் போட்ட ஒவ்வொருவருக்கும் தெரியும். விதிகள் என்று சொல்லப்படுகிறவைகளை மீறுகிறவர்களுக்கு மூக்கறுபட வேண்டுமானால், கொள்கையையே இல்லையென்று சொல்லுகிறவர்களுக்கு பொது வாழ்வில் மரண தண்டனை யல்லவோ இடவேண்டும்? அதைத்தானே செய்தார் சத்தியமூர்த்தி ஆனைமலையில். ஆனைமலை ஐரோப்பிய சங்கத்தில் காங்கிரசின் நோக்கம் குடியேற்ற அந்தஸ்துதான், பூரண சுதந்திரமில்லை யென்று முக்காலும் மூன்று முறை ஆணையிட்டுக்கொடுத்தாரே, இதை விட காங்கிரசுக்கு என்ன துரோகம் வேண்டும்? கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஒருவன் காங்கிரசில் நாலணா மெம்பருக்கும் லாயக்கு இல்லையே? காட்டிக்கொடுக்கும் இவருக்கு இன்னும் தலைவர் பதவியா? இவர் மூக்கு அறுபடவில்லையே! மூக்கில் கண்ணாடியும் துலங்குகிறதே!

கவர்னருக்கு, ஜில்லா போர்டின் தீர்மானத்தை மதித்து வரவேற்பு வாசிப்பது காங்கிரசுக்கு கேவலமானால், கவர்னர் வரும்போது சட்ட சபையிலிருப்பது கேவலமானால், சுயநலத்திற்காக, மந்திரி பதவி கிடைக்காதாவென்ற ஏக்கத்திற்காக, ஒரு காங்கிரஸ் வாதி அதுவும் ஓர் மாகாணத் தலைவர் பல்லெல்லாம் தெரியக்காட்டி மிகப் பணிவுடன் வேண்டி அதே கவர்னரை பேட்டிக் காணப்போவது காங்கிரசிற்கு கேவலமல்லவா? கவர்னரைப் பேட்டி காணும் விதம் தெரியுமா? அவருடைய காரியதரிசிக்கு “ஐயா தயைகூர்ந்து எனக்கு கவர்னரிடம் உத்திரவு வாங்கிக்கொடுங்கள்” என்று எழுத வேண்டும். இந்த நாள் இத்தனை மணிக்கு பேட்டி கொடுக்க கவர்னர் இசைந்துள்ளார் என்று காரியதரிசியிடமிருந்து பதில் வரும். அன்று அந்நேரத்திற்கு முன்பாகவே கவர்னர் மாளிகையில் காத்து நிற்க வேண்டும். இது காங்கிரசுக்கும், தலைவருக்கும் மரியாதைபோலும்! ஆனால் அது சுயநலத்திற்கு அல்லவா? அதுவும் பார்ப்பனரின் சுயநலத்திற்கல்லவா? ஆகையால் காங்கிரஸ் மனுநீதியின்படி சரியாகத்தான் இருக்க வேண்டும் போலும்! இத்தோடு நின்றாரா? “மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்” என்ற பொன்மொழியையும் மறந்து காங்கிரசின் எதிரியாகிய பொப்பிலி ராஜாவையும் பேட்டி கண்டாராமே! அதை அவரே சொல்லிக்கொள்ளுகிறாரே! மூர்த்தி, யாரையும் பேட்டி காணலாம்; எதுவும் செய்யலாம். தளவாய் மாத்திரம் வரவேற்பு பத்திரம் வாசிக்கக்கூடாதா?

சத்தியமூர்த்தி அய்யர் சிம்லாவிலும் டெல்லியிலும் காலை சந்தியா வந்தனம் செய்ததும் கவர்ண்மெண்டு மெம்பர்களை தரிசிக்கப்போவது தானே வழக்கமாம்; எல்லாரும் சொல்லுகிறார்களே! ஆனால் அவர் இல்லை என்று சொல்லலாம்; நாம் நம்பத் தயாரில்லை. ஏனெனில் இவருக்கு அசத்தியமூர்த்தி அய்யர் என்ற பட்டம் கிடைத்துவிட்டது. “சத்தியமூர்த்தி பொய்யன் இல்லையென்று கோர்ட்டில் நடவடிக்கை எடுக்கட்டும்” என்று “ஜஸ்டிஸ்” பத்திரிகை அறைகூவி அழைத்ததே, இதுவரை ஒன்றும் செய்யவில்லையே! அது காணாதென்று சுதந்திரத்தாகம் ததும்பும் பத்திரிகையாகிய “சுதந்தரசங்கி”ன் பத்திராபதிபரும் தேசிய வீரருமாகிய சங்கு கணேசன் அவர்கள் நாலுநாட்களுக்கு முன்பாக “இச் சிறு சங்கதிக்கும் பொய்யா” என்று கேட்டார்களே! பதிலில்லையே! ஆகையால் இல்லை யென்று ரூபிக்க வேண்டுமானால் ஒரு கவர்ன்மெண்ட் மெம்பராவது சர்டிபிக்கட் கொடுக்கவேண்டும்.

சரி, யோக்கியதை நேர்மை என்பதே தெரியாத தலைவர் தான் போகட்டும், மற்றவர்களும், மற்ற விதிகளும் என்னாயிற்று?

காரைக்குடியில் பட்டதாரிகளுக்கு காங்கிரசில் இடமில்லை என்று தீர்மானித்த பிறகு, திவான் பகதூர் ரத்தினசபாபதி முதலியாருக்கும், ராவ்சாகிப் கச்சாபகேச முதலியாருக்கும் காங்கிரசில் என்ன வேலை? சத்தியமூர்த்தி அய்யருக்கு மந்திரி பதவிக்கு ஓட்டுக்கொடுப்பதற்காகவா?

சித்தூர் ஜில்லா போர்டிற்கு காங்கிரஸ்காரர் ஓட்டு காணாமல் கடவுளும் ஓட்டுக்கொடுத்து தலைவரான சி.ஆர். ரெட்டியார், அதற்கு அடுத்த வாரம், மகாத்மா படமொன்று போர்டில் காங்கிரஸ் மெம்பர்கள் சொந்தச் செலவில் வைப்பது என்று கொண்டுவந்த தீர்மானத்தை அனுமதிக்க மாட்டேனென்றாரே. ஆக்டிங் கவர்னருக்கு ஏகோப உபசாரம் செய்தாரே என்ன ஆயிற்று? அவர் சற்று அறிவுள்ளோர் அடங்கிய ஆந்திர காங்கிரசைச் சார்ந்தவர், போகட்டும்.

தமிழ்நாட்டில் மூக்கறுபட்டோர் கணக்கென்ன? சென்னை கார்ப்பரேஷன் மேயர் ஹமீத்கான், ரயில்வே ஸ்டேஷன்களில் போலீஸ் கமிஷனருக்கு முன்னதாகவே போய் நின்று கவர்னர்களை வரவேற்பதுவும் ரயிலில் ஏற்றுவதுமாயிருந்தாரே என்ன ஆயிற்று? காங்கிரசின் பேரால் காங்கிரசின் வெற்றி என்ற முழக்கத்துடன் கவுன்சிலரானது தான் கைமேல் கிடைத்த பலன்.

தென்னாற்காடு ஜில்லாபோர்டு தலைவர் சீமான் ரெட்டியார், “ஜில்லா போர்டு நிர்வாகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனம் என்றாரே” அவர் மூக்கு இருக்கிறதா, போய்விட்டதா?

சிதம்பரத்திலே திருச்சபையிலே நடராஜப்பெருமான் முன் தவமிருந்து சத்தியமூர்த்தி அய்யர், அவருடைய பார்ப்பன சகோதரர் ஜடா வல்லபரை காங்கிரசின் பேரால் முனிசிபல் சேர்மனாக்கினாரே அவர் சென்ற மாதம் அழகான டுவீட்டு சூட்டுடன் கவர்னருக்கு வரவேற்பு அளித்து கைகுலுக்கி குலாவினாரே அதற்கேன் கேள்வியில்லை? கூச்சலில்லை? மூக்கறுக்க கத்தி தீட்ட வில்லை? அன்று “தினமணி” செத்துக்கிடந்ததா? மூர்த்தி மந்திரி பதவி மோகத்தில் மதிமயங்கிக் கிடந்தாரா? ஆனைமலையில் ஐரோப்பியர் முன் பூர்ண சுதந்திரம் வேண்டாமென்று சொன்னது பார்ப்பன சூழ்ச்சியோடு சேர்ந்த சூழ்ச்சிதானே. சிதம்பரம் பார்ப்பான் செய்தால் கப்சிப், திருநெல்வேலி முதலியார் செய்தால் கடபடாவா? அதுவும் போகட்டும். நமது ஜில்லாவில்தான் என்ன ஒழுங்கு?

ஜில்லாபோர்டு தலைவர் பதவிக்காக காங்கிரசில் கையெழுத்திட்டு எலக்ஷன் இல்லாமல் மெம்பரான தோழர் சின்னக்கண்ணுப்பிள்ளையவர்களும், மற்றும் ஐவர்களும் எலக்ஷன் முடிந்து பத்து நாட்களுக்குள் கட்சி மாறினார்களே என்ன ஆயிற்று? அன்னவர்களின் ஆப்த நண்பர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ன செய்தார்? எத்தனை கூட்டத்தில் கண்டனம் செய்தார்?

இந்த கவர்னர் வரவேற்புத் தீர்மானம் வரும்பொழுது போர்டு காங்கிரஸ் கட்சித்தலைவர் தோழர் குப்புசாமி அய்யர் என்ன செய்தார்? எதிர்த்தாரா? இல்லையே! சள சள என்று பேசும் நாவடக்கமேயில்லாத அவர் அன்று நாவடக்கியிருந்ததின் மர்மமென்ன? கதர் குல்லாயும் சட்டையும் போட்டு அலங்காரமாய் முதல் சீட்டில் இருந்த அவர், கவர்னர் வரவேற்புக்கு எதிர் எத்தனை பேர் என்று பிரசிடெண்டு கேட்கும்போது அவரது கை, வீரத்துடன் கதர் குல்லாவிற்கு மேல் வரவேண்டியிருக்க, சட்டைப்பைக்குள் போய் ஒழிந்ததேன்? இவரை என்ன செய்தார்கள்? வேறொன்றுமில்லா விட்டாலும் தலைவர் பதவியை விட்டாவது நீக்கினார்களா? அன்று வரவேற்பு இல்லை என்று காங்கிரஸ் முறைப்படி செய்யாமல் சும்மாயிருந்த அய்யர் தலைவரை விட்டு விட்டு ஒழுங்குப்படி நியாயப்படி வரவேற்பு வாசிக்கப்போகும் முதலியாரின் பேரில் ஏன் இக்கோபம்? அய்யரின் குற்றத்தை மறைப்பதற்குத்தானே!

சங்கரன் கோவில் மெம்பர் தோழர் அம்பலவாணபிள்ளை காங்கிரஸ் கட்டளையை மீறனாரென்றும், ஜஸ்டிஸ் கட்சியுடனேயே ஓட்டுச் செய்கிறாரென்றும், உட்காருவது கூட எதிரிகளுடன் உட்காருகிறாரென்றும் குற்றஞ்சாட்டியதின் மேல் தமிழ்நாடு கமிட்டியாரே அவரை ஜில்லாபோர்டு மெம்பர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி கட்டளையிட்டார்களே! இன்றைக்கும் அவர் மெம்பர் தானே? தமிழ்நாட்டுக் கமிட்டியை நிராகரித்து “போடா பொட்டைக்கண்ணா” என்றுசொல்லித்திரிகிறவருக்கு கைமேல் என்ன பலன் தெரியுமா? ஜில்லா கமிட்டித் தலைவரின் பேருதவியால், வேசிப்பூர் காங்கிரசுக்கு பிரதிநிதியாகவும் தமிழ்நாடு கமிட்டியில் மூர்த்தி அய்யருடன் சம மெம்பராகவும் ஆய்விட்டார். இனம் இனத்தோடு சேரவேண்டியதுதானே!

நமது டவுன் காங்கிரஸ் பிரபலர் மிட்டாய்க்கடை லாலா தெரியுமல்லவா, சினிமா ஒன்றும் நடத்தினாரே! மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் இறந்ததற்காக சினிமாவை அடைத்து தனது ராஜவிசுவாசத்தை காட்டிக்கொண்டார், அதில் தப்பிதமென்ன? அவருடைய குருக்கள் தலைவர்கள் அண்ணாக்களெல்லாம் கதர் குல்லா தலையில் தாங்கி ராஜ விசுவாசப் பிரமாணம் செய்வதற்கு இது அடுத்தபடி தானே? ஆனால் கமலா நேரு, டாக்டர் அன்சாரி போன்ற பெரியோர் பிரிவாற்றாமையை எவ்வாறு காட்டினார்? சினிமாவை நடத்தியா? அடைத்தா? என்று யோசித்துப்பாருங்கள். அம்மட்டா, இம்மாதம் மற்ற சினிமாக்களைப் போல இதற்கும் லைசன்ஸ் தகராறு வந்தவுடனே என்ன நடந்தது தெரியுமா? கதர் கொடியைக் காணோம். தேசீயக்கொடி திடீரென்று மறைந்து வந்ததையா பிரிட்டீஸ் ஏகாதிபத்தியக்கொடி (க்ணடிணிண ஒச்ஞிடு) முதல் வகுப்பு நாற்காலிகளுக்கு மேலும் இரண்டாவது வகுப்பு நாற்காலிகளுக்கு மேலும். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. லைசென்ஸ் ரத்தாயிற்று. கெட்டுப்போனதென்ன? காங்கிரஸ் கொடுத்தது கைமேலே பலன். அவர்தான் நமது நகருக்கு புது அசம்பிளி தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகராம். ஒரு சந்தேகம், தேர்தல் போது நமது லாலா தேசீயக்கொடி பிடிப்பாரா, யூனியன் ஜாக் பிடிப்பாரா?

எல்லாம் தொலையட்டும், லாலாவும், அம்பலவாணரும் எப்படியும் போகட்டும். நமது ஜில்லா காங்கிரஸ் தலைவரும், மாஜி சர்வாதிகாரியுமான தோழர் கூத்தர் நமக்கு நடந்து காட்டும் நல்வழியென்ன? சில நாட்களுக்கு முன் முனிசிபாலிட்டி தண்ணீர் தீர்வை பிரச்சினையில் எவ்வாறு நடந்துகொண்டார்? ஜில்லா காங்கிரஸ் கமிட்டியும் அவர் இல்லத்திலே, அது தான் சாவடி ஹாலிலே அன்னாரின் தலைமையிலே கூடி இந்த தண்ணீர் தீர்வை பிரச்சினையில் காங்கிரஸ் கலந்துகொள்ளக் கூடாதென்று தீர்மானித்ததே! “தினமணியும்” கொட்டை எழுத்தில் பிரசுரித்ததே. அதற்கு இவர் செய்த மரியாதை என்ன? காங்கிரசின் பேரைச்சொல்லி, காங்கிரஸ் தொண்டர்களை உபயோகித்து கலாட்டா செய்தாரே! மற்றும் இரு தலைவர்களே அதற்கு எதிரிடையாய் நின்றார்களே! என்னாயிற்று? இவரின் மூக்கை இவரே அறுத்துக்கொண்டாரா? மூக்கும் நீளம் தானே கொஞ்சமாவது அறுத்துக்கொள்ளக்கூடாதா? இவரை தலைவர் பதவியை விட்டு விலக்க வேண்டாமா? அவசரப்படேல்; அவரே விலகப்போகிறார் என்று ஒரு சிட்டுக்குருவி சொல்கிறது. நன்னாளும் நற்சமயமும் தான் பார்க்கிறாராம். ஏனென்று கேட்டதாம் நமது குருவி. சொன்னாராம் பிள்ளை அவர்கள். “பெருமையும் புகழும் நாடி வந்தேன், காங்கிரசிற்கு அவை கிடைத்தது; சர்வாதிகாரியானேன். இந்த ஜில்லா மட்டுமல்ல, மற்ற ஜில்லாவிலும் காங்கிரஸ் பிளசர் காரில் சுற்றினேன், காந்தியும் நேருவும் வந்தார் என் வீட்டிற்கு. ஜில்லா போர்டிற்கு வந்த காங்கிரஸ் மெம்பர்கள் எல்லாம் என் தயவால் தான் வந்தார்கள் என்ற ஜம்பமும் அடித்தாய்விட்டது. ஆனால் காலம் மாறுகிறது, பெருமையும் புகழும் போய் சிறுமையும் சிரமும் வரும்போல் தெரிகிறது. செக்ஷன் 144ஆம், ஜாமீனாம் என்னமோ பேசுகிறார்கள். பக்கத்து ஜில்லாவில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் சமயம் தெரியவில்லை. கவர்னர் வரும்போது தலைவர் வீட்டிலாவது கருப்புக்கொடி வேண்டாமா என்கிறார்கள். சீக்கிரம் நழுவ வேண்டியது தான்.” சிட்டுக்குருவி சொல்வதின் உண்மை சீக்கிரம் விளங்கிவிடும்.

கவனித்தீர்களா! சகோதரர்களே! எத்தனை அய்யர்கள், தலைவர்கள் மூக்கு போன பின் முதலியார் மூக்குக்கு ஆபத்து வரவேண்டும். முதலியார் அவர்கள் பயப்பட வேண்டாம். தங்கள் மூக்குப் போகுமுன், தங்கள் தலைவர் அசத்தியமூர்த்தியின் சிரசே போய் ஆகவேண்டும். ஆனால் எத்தனை நாளைக்கு இந்த ஏமாற்றம்? பார்ப்பனரல்லாத மக்களே விழியுங்கள்!

குடி அரசு கட்டுரை 29.11.1936

You may also like...