கூடங்குளம்: அவசரமாக ‘இயக்குவது’ ஏன்?
கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று அறிவிப்பு வெளி வந்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராசனிடம் இது குறித்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக பேசினோம். அவர் விரிவான விளக்கங்களை நியாயங்களை எடுத்துரைக்கிறார். அவர் நம்மிடம் தெரிவித்த கருத்துகளின் சுருக்கமான தொகுப்பு: கூடங்குளம் அணுமின் திட்டத்தின் ஒவ்வொரு உதிரிப் பாகத்தையும் தனித்தனியாக பாதுகாப்பானதா என்பதை சோதித்துக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. பல லட்சம் உதிரிப் பாகங்கள் அனைத்தையும் இரண்டே மாதத்தில் சோதித்து முடித்துவிட்டதாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் சீல் இடப்பட்ட உறையில் பதிவாளரிடம் அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரர் களாகிய எங்களுக்கு அந்த அறிக்கையைத் தரவும் இல்லை. நிர்வாகம்...