கூடங்குளம்: அவசரமாக ‘இயக்குவது’ ஏன்?

கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று அறிவிப்பு வெளி வந்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராசனிடம் இது குறித்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக பேசினோம். அவர் விரிவான விளக்கங்களை நியாயங்களை எடுத்துரைக்கிறார். அவர் நம்மிடம் தெரிவித்த கருத்துகளின் சுருக்கமான தொகுப்பு:

  • கூடங்குளம் அணுமின் திட்டத்தின் ஒவ்வொரு உதிரிப் பாகத்தையும் தனித்தனியாக பாதுகாப்பானதா என்பதை சோதித்துக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. பல லட்சம் உதிரிப் பாகங்கள் அனைத்தையும் இரண்டே மாதத்தில் சோதித்து முடித்துவிட்டதாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் சீல் இடப்பட்ட உறையில் பதிவாளரிடம் அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரர் களாகிய எங்களுக்கு அந்த அறிக்கையைத் தரவும் இல்லை. நிர்வாகம் தந்த இந்த அறிக்கையில் என்ன அடங்கியிருக்கிறது என்று எங்கள் வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கேட்டபோது, நாங்களே அதைப் படிக்காதபோது உங்களுக்கு எப்படி கூற முடியும் என்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர். கூடங்குளம் அணுமின் திட்டம் பாதுகாப்பானது என்பதை சோதித்து உறுதிப்படுத்தியது உண்மைதான் என்றால், அந்த அறிக்கையை ‘சீல்’ செய்து, ரகசியமாக ஏன் பதிவாளரிடம் தர வேண்டும்? மனுதாரராகிய எங்களுக்கு தராமல் ஏன் மறைக்க வேண்டும்? நீதிபதிகளே படிக்காத நிலையில் திட்டத்தை ஏன் அவசரமாக செயல்படுத்த வேண்டும்?
  • கூடங்குளம் அணுமின் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகு, திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்படி மக்களை இவர்கள் சந்திக்க தயாராக இல்லை. மக்களிடம் பேசவும் இல்லை. மாறாக இத்திட்டத்தை எதிர்த்து வரும் மக்கள் மீது வழக்குகளைப் போட்டுள்ளார்கள். எத்தனை பேர் மீது தெரியுமா?

2 இலட்சத்து 50ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12,500 பேர் மீது தேசத்துக்கு எதிராக ‘போர் தொடுத்தவர்கள்’ என்ற பிரிவிலும் 9000 பேர் மீது ‘தேசத் துரோக’ சட்டப் பிரிவின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘சுதந்திர’ப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சி தமிழ்நாட்டில் பதிவு செய்த தேசத் துரோக வழக்கே 2400 மட்டும் தான். ‘சுதந்திர’ இந்தியாவில் பாதுகாப்பற்ற அணுமின் திட்டத்தை திணிக்காதே என்று போராடும் சொந்த நாட்டு மக்கள் மீது அதைவிடப் பன்மடங்கு எண்ணிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அணுமின் திட்டம் தொடங்குவதற்கு முன்பு திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தும் பின்பற்றப்படவில்லை.

  • உலக மின் உற்பத்தியில் அணுசக்தி வழியாக மின்சாரம் தயாரிக்கப்படுவது இந்தியாவில் 2.7 சதவீதம் மட்டுமே. மற்றபடி – நீர், நிலக்கரி, சூரிய சக்தி, காற்றாலை, இயற்கை எரிவாயு அடிப்படையில்தான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்த மின்சார உற்பத்தி 2 லட்சத்து 15 ஆயிரம் மெகாவாட். இதில் அணுமின் சக்தி வழியாக தயாரிக்கப்படுவது 4,780 மெகாவாட் மட்டுமே. எனவே, குறைந்த அளவிலே தயாரிக்கப்படுகிற இந்த ஆபத்தான மின் உற்பத்தி முறையைக் கைவிட முடியும். அதே நேரத்தில் ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அணுமின் சக்தியையே அதிக அளவில் பயன்படுத்திய நிலையில், அதில் அடங்கியுள்ள ஆபத்து கருதி, கைவிடும் முடிவுக்கு வந்து விட்டன. குறிப்பாக ஜப்பான் அதன் மின் உற்பத்தியில் 34 சதவீதம் அணுமின் உற்பத்தியையே சார்ந்து நின்றது. ‘புக்குஷிமா’ விபத்துக்குப் பிறகு, தனது முடிவை அது மாற்றிக் கொண்டுவிட்டது. இதை நாம் கூறும்போது, அணுமின்சக்திக்கு ஆதரவாக பேசும் விஞ்ஞானிகள், அவர்கள் அணுமின் உற்பத்தியைக் கைவிடவில்லை. 2022 வரை அதை நீடிக்கவே திட்டமிட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். இது திசை திருப்பும் கருத்து. அணுமின் உற்பத்தியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடுகள் மாற்று மின்சார உற்பத்திகளை கட்டமைக்க தேவைப்படும் கால அவகாசத்துக்காகவே அதைத் தள்ளிப் போடுகிறார்கள் என்பதே உண்மை. அணுமின் சக்தியின் ஆபத்துகளை உணர்ந்த மக்கள், அங்கே போராடத் தொடங்கி விட்டார்கள். நாங்களும் இங்கே இருக்கிற அணுமின் உலைத் திட்டங்களை மூடிவிட வேண்டும் என்று கோரவில்லை. ஏற்கனவே செயல் படும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அதன் செயல்படும் காலம் வரை செயல்பட அனுமதித்து பிறகு மூடி விடுங்கள். அதே நேரத்தில் புதிய அணுமின் திட்டங்களைத் தொடங்கிட வேண்டாம் என்றுதான் வற்புறுத்துகிறோம்.
  • கூடங்குளத்தில் முதல் பிரிவில் இப்போது அணுமின் உற்பத்தி தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார்கள். இன்னும் 3 மற்றும் 4-வது பிரிவுக்கு ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் போடப் போகிறார்கள். 5 மற்றும் 6வது பிரிவுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. ‘அணுமின் பூங்கா’வை (சூரஉடநயச ஞயசம) கூடங்குளத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது அதன் உற்பத்தி இலக்கு 1000 மெகாவாட். இந்தியாவில் முதன் முதலாக தாராப்பூரில் அணுமின் தொடங்கப்பட்ட அந்தக் காலத்திலேயே 60 மெகா வாட் மின்சார உற்பத்தியே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. படிப்படியாக சிறிது சிறிதாகவே இந்த உற்பத்தி இலக்கு அதிகரிக்கப் பட்டது. இதற்கு 60 ஆண்டுகால தொடர் நிகழ்வுகள் தேவைப்பட்டன. ஆனால், கூடங்குளத்தில் மிக அதிக அளவில் 1000 மெகாவாட் என்று உற்பத்தி இலக்கை நிர்ணயிக்கிறார்கள். இதன் ஆபத்துகள் பற்றி கவலைப்படவில்லை. 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கு நாளொன்றுக்கு 700 கோடி லிட்டர் ‘கூலிங் வாட்டர்’ பயன்படுத்தப்படுகிறது. ‘கூலிங் வாட்டர்’ என்றால், குளிர்ந்த நீர் என்று கருதிவிடக் கூடாது. அணுமின் உலையை குளிர்விப்பதற்காக

29 டிகிரி செல்சியசில் தண்ணீரை செலுத்தி, 39 டிகிரி செல்சியசில் வெளியேற்றப்படும் தண்ணீர் இது.

6 கூடங்குளம் மின்உற்பத்தி பிரிவுகளும் செயல்படும் போது ஒவ்வொரு நாளும் 4200 கோடி லிட்டர் வரை கடலில் கலக்க வேண்டும். அதாவது 4200 கோடி லிட்டர் தண்ணீர் 38 டிகிரி செல்சியஸ் சூட்டில் கடலில் கலக்கப் போகிறது. இந்த நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் நிலை என்னவாகும்? கடலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் நிலை என்னவாகும்?

  • அதுமட்டுமல்ல, இந்தத் தண்ணீரை கடலில் கொட்டாமல் கடற்கரையிலேயே கொட்டப்படுகிறது. கடலுக்குள் உள்ளே 2 கிலோ மீட்டர் தொலைவில் கொட்டப்பட வேண்டும் என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் கூறுகிறது. இப்போது தடை மீறப்படுவதை சுற்றுச் சூழல் அமைச்சகமும் கண்டு கொள்ளவில்லை. உச்சநீதிமன்றமும் கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு நாள் நள்ளிரவில் அணுமின் திட்டம் செயல்படத் தொடங்குவதாக அறிவிப்பு மட்டும் அவசர அவசரமாக வெளிவந்துள்ளது.
  • அணுமின் நிலையம் அதிகமாக செயல்படும் நாடுகள் எவை? இதற்கு உலக வரைபடத்தைப் பார்த்தாலே விடை கிடைத்துவிடும். பூமத்திய ரேகையை சுற்றியுள்ள ஸ்இந்தியா போன்ற நாடுகளில் தண்ணீர் வளம் குறைவு. கடக ரேகைக்கு (கூசடியீiஉ டிக ஊயnஉநச) மேலே உள்ள நாடுகளில் தண்ணீர் வளம் அதிகம் என்பதால் அந்தப் பகுதி நாடுகளில் மட்டும் தான் உலக அணுமின் உற்பத்தியில் 95 சதவீதம் அணுமின் உலைகள் நிறுவப் பட்டுள்ளன. உலகில் மொத்தம் உற்பத்தியாகும் அணுமின் உற்பத்தி

3 லட்சத்து, 60 ஆயிரம் மெகாவாட். ஆனால் உலகில் மரபு சாரா முறையில் உற்பத்தியாகும் மின் உற்பத்தியே அதிகம். அதன் உற்பத்தித் திறன் 4 லட்சத்து 50 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகம்.

  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி இழப்பீட்டு சட்டத்தின்படி, விபத்துகள் நேரிட்டால், ‘உலைகளை’ வழங்கிய நாடுகள் 1500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கூறுகிறது. இழப்பு எவ்வளவு அதிகம் இருந்தாலும் சரி, 1500 கோடி வழங்கினாலே போதும் என்று கூறும் சட்டத்தை கடும் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றினார்கள். இழப்பீடு தர வேண்டும் என்பதை சட்டபூர்வ மாக்கியிருப்பதாக இந்திய அரசு பெருமை பேசியது. இப்போது கூடங்குளம் அணு உலையை வழங்கிய ரஷ்யா, இந்த சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி விட்டது. இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதாக ரஷ்யா வாதாடியது. அதை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டுவிட்டது. (‘வோடாபோன்’ அலை பேசி நிர்வாகம் இதேபோல ஒப்பந்தக் காரணத்தைக் காட்டி அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கட்ட மறுத்தபோது, அதை எதிர்த்து இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றமும் ‘வோடாபோன்’ பணத்தை கட்டியாக வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது) இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இழப்பீடு முழுமையாக வழங்கப்பட வேண்டும். எந்திரங்களை வழங்கும் நாடுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாகக் கூறியுள்ள நிலையில் அரசியல் சட்டத்தையே மீறி இந்திய அரசு செயல்படுகிறது.
  • கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப் பவர்கள் ‘தேசத்துக்கு விரோதிகள்’ என்று திட்ட ஆதரவாளர்களும் காங்கிரசாரும் கூறு கிறார்கள். 600 தமிழ் மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றதைத் தடுக்காத வர்கள், இறுதிப் போரில் இலட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததைத் தடுக்காதவர்கள், கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்போரை தேசத் துரோகிகள் என் கிறார்கள். இப்போது கூடங்குளம் அணுமின் திட்டத்தில் திட்டத்துக்கான எரிபொருளை இத்திட்டம் முடிவுக்கு வரும்காலம் வரை ரஷ்யாவிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. ஆக, ரஷ்யாவை சார்ந்து மட்டுமே இத்திட்டத்தை அமுல்படுத்த முடியும். இடையில் வேறு அரசியல் காரணங்களைக் காட்டி, ரஷ்யா, எரிபொருளை நிறுத்துவதாக மிரட்டினால், அதற்கு இந்தியா பணிந்து போக வேண்டும் என்ற நிலை ஏற்படக் கூடும். ‘தேச பக்தி’ பற்றி பேசுகிறவர்களைக் கேட்கிறோம், இதுதான் தேசபக்தியா?
  • அணுமின் உற்பத்திக்கான அடிப்படையான எரிபொருள் ‘யுரேனியம்’; இது உலகிலேயே அதிகமாகக் கிடைக்கும் நாடு ஆஸ்திரேலியா; அங்கே உலக யுரேனியத்தில் 23 சதவீதம் கிடைக்கிறது. ஆனால், அந்த நாடு ஒரு சதவீத அணுமின் உற்பத்திக்குக்கூட தயாராக இல்லை. மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் ‘யுரேனி யத்தை’ ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளது. ‘யுரேனியத்தை’ செறிவூட்டும் ஆலை ஒன்றை சீனாவில் குவாங்டாங்க் (ழுரயபேனடிபே) என்ற பகுதியில் அந்நாட்டு அரசு தொடங்கத் திட்ட மிட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால் சீனா கடந்த வாரம் இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி யது போல சீனா, வட அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் எல்லாம் ‘கடக ரேகை’ மேலே உள்ள நாடுகள்.
  • அண்மையில் தென்கொரியா நாட்டில் அணு உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் தரமற்றவை என்பதைக் கண்டறிந்த அந்நாட்டு அரசு, அதன் செயல்பாடுகளை ரத்து செய்துள்ளது. சீனாகூட, ரஷ்ய தொழில் நுட்பத்தை, அணுமின் திட்டத்தில் அங்கீகரித்தா லும் அத்திட்டத்தை வடிவமைத்து உற்பத்தி செய்து காட்டும் வரை பொறுப்பு முழுவதையும் ரஷ்யாவிடமே ஒப்படைத்து விட்டது. பாதுகாப்பாக திட்டத்தை அமுல்படுத்திக் காட்டிய பிறகே ஒப்புதல் வழங்கும் இந்த முறை ‘கூரசn முநல’ என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் விஞ்ஞானிகள் தாங்களாகவே ரஷ்ய அணு உலைகளைக் கொண்டு கூடங் குளத்தில் தாங்களாகவே கட்டுமானம் வடி வமைப்புகளை செய்ய முன்வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இது இந்தியாவுக்கே புதிய தொழில் நுட்பமாகும்.
  • ஒரு விபத்து நேர்ந்தாலோ இயற்கைப் பேரழிவு நடந்தாலோ அதிலிருந்து மக்களைக் காப் பாற்றக் கூடிய ‘பேரிடர் மேலாண்மை’ (னுளையளவநச ஆயயேபநஅநவே) அமைப்பு இந்தியாவில் படுமோச மாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதான். அண்மையில் உத்தரகாண்ட் – வெள்ளம் – மலைச் சரிவுகளில் நாடே இதைப் பார்த்தது. பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடிய வில்லை. தமிழ்நாட்டில் கடற்கரையிலிருந்து

16 கிலோ மீட்டர் சுற்று தூரம் வரை அவசர பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட் டுள்ளது. அதன் படி கன்யாகுமரி மாவட்டத்தில் கடற்கரை அவசரப் பாதுகாப்புப் பகுதிகளாக உள்ள கிராமங்கள் பற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது அப்படி எந்த ஒரு பகுதியும் கன்யாகுமரி மாவட்டத்தில் கிடை யாது என்று தேசிய அணுமின் கழகம் உண்மைக்கு மாறாக பதில் தந்தது. ஆனால் கள ஆய்வில் 13 இலட்சம் மக்கள் இத்தகைய பகுதியில் வாழ்வதாக அவர்களே அறிக்கை தயாரித்துள்ளனர்.

  • உச்சநீதிமன்றமே கூறிவிட்ட பிறகு, இவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சில விஞ்ஞானிகளும் அரசியல் கட்சிகளும் வாதிடுவது ஏற்புடையதல்ல. உச்சநீதிமன்றத்தை யும் மிஞ்சியது மக்கள் மன்றம். அந்த மக்களிடம் வந்து பேசுங்கள். அவர்கள் கேட்கும் கேள்வி களுக்கு பதில் சொல்லுங்கள். “விஞ்ஞானி களுக்கு எல்லாம் தெரியும்; மக்களுக்கு எதுவுமே புரியாது” என்ற ஆணவப் பேச்சே, இந்தப் பிரச்னைக்கு மிகவும் அடிப்படை. உச்சநீதி மன்றம் கூறியதுதான் சரியானது என்றால், நான், ஒரு பொறியாளனாக வந்திருக்க முடியாது. ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ செல்லாது என்று தீர்ப்பளித்தது, இந்த உச்சநீதிமன்றம் தான். அப்போது பெரியார் மக்களை அணி திரட்டி, தீர்ப்பை எதிர்த்துப் போராடியதால் தான் முதல் சட்டத் திருத்தம் வந்தது. எங்களைப் போன்றவர்கள், கல்வி உரிமைக்கு கதவு திறந்து விடப்பட்டது” என்றார் பொறியாளர் சுந்தர ராசன்!

பெரியார் முழக்கம் 18072013 இதழ்

You may also like...