நெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு
அணு உலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்களால் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் பேராபத்து நிகழலாம்.
எனவே அணு உலை வேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பாக 03-12-2016 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி முதல் இரவு வரை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் “கூடங்குளம் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது.
அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யாவுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்; கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதையும், கல்பாக்கத்தில் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்; தமிழகத்தை அணுக்கழிவுக் கூடமாக்க வேண்டாம் என இந்திய அரசை வலியுறுத்தியும், அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிடவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் இந்த மாநாடு நடைபெற்றது.
நாகர்கோவில் ‘முரசு’ கலைக் குழுமத்தினரின் பறை முழக்கங்களோடு தொடங்கிய இந்த மாநாட்டின் இடையே, இசைப்பாறை அவர்கள் எழுதிய “இடிந்த கரையின் போராட்டம்” நூல் வெளியிடப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், நூலின் முதல் பிரதியியை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பெற்றுக் கொண்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக பிற்பகல் 3-00 மணிக்கு நடைபெற்ற அறிவாளர் அரங்கத்திற்கு தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சார்ந்த திருநாவுக்கரசு தலைமை ஏற்றார். நாணல் நன்பர்கள் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் வரவேற்புரை ஆற்ற, முதல் இரண்டு அணு உலைக் குழறுபடிகள் என்ற தலைப்பில் பச்சைத் தமிழகம் தலைவர் சுப.உதயகுமார், மாற்று எரிசக்தி என்ற தலைப்பில் திருநாவுக்கரசு, என்.எஸ்.பி ஒப்பந்தம் என்ற தலைப்பில் பூவுலகு அமைப்பைச் சார்ந்த அருண் நெடுஞ்செழியன், அணு உலை அரசியலும், ஏகாதிபத்திய நலன்களும் என்ற தலைப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாலை 5-00 மணிக்கு தொடங்கிய அரசியல் அரங்கிற்கு அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை ஏற்றார். சி.பி.எம்.எல்-மக்கள் விடுதலை அரசியல் தலைமைக் குழுவைச் சார்ந்த மீ.த பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன், இடிந்தகரை போராட்டக் குழு சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரிஃப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருப்பாளர் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருப்பாளர் கே.ஜி.பாஸ்கர், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொருப்பாளர்கள் கருத்துரை வழங்கினர்.