வினாக்கள்… விடைகள்…!

திருவண்ணாமலையில் “உலக நன்மைக்காக” ஜெபம்-பூஜை நடத்திய சாமியார்கள், தங்களுக்கு நிலம், காப்பகம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.         – ‘தமிழ் இந்து’ செய்தி

உலக நன்மையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்; எங்கள் கோரிக்கைகளை அரசுதான் கவனிக்க வேண்டும் என்கிறார்கள். சாமியார்களுக்குக்கூட பகுத்தறிவு வந்துடுச்சு!

கூடங்குளம் அணுமின் நிலைய பராமரிப்புப் பணியின்போது ஆறு ஊழியர்கள் படுகாயம் அடைந்ததற்கு வால்வு பழுதடைந்ததே காரணம் என்று கூறுவது தவறு. ஊழியர்கள் சரியாகக் கையாளாமல் போனதே காரணம். – அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம்

மனிதர்களுக்கு ஆபத்துன்னா, அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், எந்திரங்கள் பாதுகாப்பா இருக்குதுன்னு சொல்லவர்றீங்க…. நல்ல மனசு!

வங்கிகளில் பெருமுதலாளிகள் வாங்கிய ரூ.2.40 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளில் வராத கடனாக தள்ளுபடி செய்யப் பட்டது ரூ.2 லட்சம் கோடி. – வங்கி ஊழியர் சங்கம் தகவல்

உஷ்… சத்தமாய் பேசாதீங்க… பெரு முதலாளிகள் காதுல விழுந்தா எவ்வளவு சங்கடப்படுவாங்க. அப்புறம் நாட்டை யார் காப்பாத்தறது, சொல்லுங்க…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ‘அந்த°தை’ பெற காங்கிர° தீவிர முயற்சி.         – செய்தி

தேர்தலுக்கு முன்பே மக்களிடம் ஒழுங்கு முறையா இந்தக் கோரிக்கையை வச்சிருந்தா, அவங்களாவது, பரிசீலித்திருப்பாங்க… இப்பப் போய் கதறி என்ன ஆவப்போவுது?

மோடி அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சராகவுள்ள ராஜ°தானைச் சேர்ந்த நிகல் சந்த்மேவில் என்பவருக்கு பாலியல் வன்முறை வழக்கில் நீதிமன்றம் சம்மன்.            – செய்தி

இருக்கட்டுமே! இது என்ன ஊழல் குற்றச்சாட்டா? நாங்கள் ஊழலுக்குத்தான் எதிரிகள்.

மோடியை விமர்சித்து கல்லூரி இதழில் புதிர் போட்டி நடத்திய 9 கல்லூரி மாணவர்கள் கேரளாவில் கைது.              – செய்தி

யாரங்கே! மன்னரை விமர்சித்த இந்த துரோகிகளை இழுத்துச் சென்று எண்ணெய் கொப்பரையில் வீசுங்கள்! இது பாரதத்தின் உத்தரவு…

ஆப்கானி°தான் அதிபர் தேர்தலில் தலிபான்கள் எச்சரிக்கையை மீறி வாக்களித்தவர்களின் கை விரல்களை தலிபான் தீவிரவாதிகள் வெட்டினர்.                                                              – செய்தி

கடவுளின் பெயரால் கைவிரல்கள் வெட்டப்படும் போதும் கடவுள் அதைத் தடுக்க மாட்டாரா? என்று கேட்டால், இப்படி கேள்வி எழுப்புவதை தடுப்பதற்கு மட்டும் மதவாதிகள் வந்து விடுவார்கள்!

நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1008 லிட்டர் பால், 500 லிட்டர் தயிர், நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டது.       – ‘தினமணி’ செய்தி

ஆஞ்சநேயருக்கு மூச்சு முட்டுமேன்னு, கொஞ்ச மாவது கவலை இருந்தா இப்படி தலையில குடம் குடமா ஊத்துவாங்களா? ‘அபிஷ்டுகள்!’

பீகார், கதிகார் மாவட்டத்தில் பூஜாதேவி என்ற 20 வயது திருமணமான பெண்ணின், கழிப்பறை கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை மாமனார் வீட்டில் அலட்சியப்படுத்தியதால், பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து விட்டார். – ‘இந்து’ ஏடு செய்தி

பூஜை அறையைவிட கழிப்பறையே முக்கியம் என்பதைப் புரிந்து போர்க்கொடி உயர்த்திய பூஜாதேவியை பாராட்டுவோம்!

தமிழ்நாட்டில் – கோயிலில் உள்ள சாமி சிலைகளை கணக்கெடுக்கும் பணியின்போது ஆகம விதிகளை மீறக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.  – அறநிலையத் துறை அதிகாரி

கோயில் சிலைகளைக் கணக்கெடுப்பதற்கே ஆகம விதிகளில் இடமிருக்கிறதா என்பதையும், சாமி சிலைகள் திருட்டுப் போவதை ஆகம விதிகள் அனுமதிக்கிறதா என்பதையும், திருடுப்போகிற சாமி சிலைகளை தேடிக் கண்டுபிடிக்க ஆகமவிதிகளில் இடமுண்டா என்பதையும் விளக்கமாகச் சொன்னால் நல்லது, சார்!

பெரியார் முழக்கம் 19062014 இதழ்

You may also like...