பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கப் பொதுக் கூட்டம் 25.3.2012 மாலை 6.45 மணிக்குப் புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலையருகில்) நடைபெற்றது. பெருந்திரளாகப் பொது மக்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்திற்கு புதுச்சேரி கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சமர்பா குமரனின் இன எழுச்சிப் பாடல்களுடன் கூட்டம் துவங்கியது. துணைத் தலைவர் வீராசாமி நன்றியுரை வழங்கினார். கூட்டம் இரவு பதினொரு மணி வரை நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில் – “உலக நாடுகளெல்லாம் இந்தியாவை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் நடத்தி வந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது வெடி பொருளாகப் பயன்படுத்தி மிஞ்சிப் போன, மண்ணைக் கெடுக்கின்ற வேதிப் பொருள்களையெல்லாம் உரமாக மாற்றி எம்.எஸ்.சாமிநாதன் என்கின்ற பார்ப்பனனை வைத்து இந்தியாவில் பிரபலப்படுத்தினர். ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாகக் கொண்ட கப்பலைப் பிரான்சு நாட்டில் உடைத்தால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று நம் நாட்டில் வந்து உடைத்தனர். உலகத்தில் கைவிடப்படுகின்ற, அங்கு காலாவதி ஆகின்ற தொழில் நுட்பமெல்லாம் நம் தலையில் கட்டப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதால், அவற்றின் கழிவுகளால் அதிகம் புற்று நோய் வரும் இடங்களாக வாணியம்பாடி, கல்பாக்கம், ஆம்பூர், திருப்பூரும் இருக்கின்றன. இரண்டாயிரம் பேர் வேலை செய்த ஸ்டாண்டர்டு கம்பெனியை மூடிவிட்டு 400 பேர் வேலை செய்கின்ற போர்ட் கம்பெனியைத் திறக்கிறார்கள். நம் நிலமும் வேலை வாய்ப்பும் இவர்களால் பறி போகிறது.
2010-2011 ஆம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்ட ‘ஆட்டோ மொபைல்ஸ்’ 2,34,00,000 ஆகும். அதற்கே புதிய மின் உற்பத்தி நிலையங்களை அவர்கள் அமைக்கவில்லை.
1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் 81,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அன்று 52 சதவீதம் கிராமங்களுக்கு மின் வசதி இல்லை. 2011 ஆம் ஆண்டில் 1,82,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இன்னும் மின்சார வசதி பெறாத கிராமங்கள் 43 சதவீதம் உள்ளன. உற்பத்தியாகும் மின்சாரம் பன் னாட்டு நிறுவனங்களுக்குத் தான் பயன்படுகிறது. தன்னை (சிறுதொழில் செய் வோர்) அழிக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாத வர்கள், கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாகப் போராட முன் வருகிறார்கள்.
அணுஉலை வெடித்தால் 2 மணி நேரத்தில் அனைவரும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உடனே சென்றுவிட வேண்டும். அணுஉலையிலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் ஒரு லட்சத்திற்கும் மேலாக மக்களோ, சுற்றுலாத் தளமோ இருக்கக் கூடாதென்று இந்திய அணு சக்தி ஆணையம் வரையறுத்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் கொடுத்த அறிக்கையில் நாகர்கோவிலில் மொத்தம் 2980 பேர் மட்டுமே வாழ்வ தாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாகர்கோவில் 2 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.
அணுஉலைக்கடியில் பூமியிலுள்ள நெருப்புப் பிழம்பை மூடிய படிமங்கள் வெறும் 110 மீட்டர்தான் இருக்கிறது. ஆனால், இறுகிய பாறை 140 கி.மீ. ஆழம் வரை இருக்கவேண்டும் என்பது அணுசக்தி ஆணையத்தின் வரையறை.. மக்கள் சேர்ந்து போராட்டம் தொடங்கி, அதற்குப் பின்னால் அரசியல் கட்சிகள் ஓடிய போராட்டம் இது ஒன்றுதான்.
அணுஉலை கூடங்குளத்தில் வேண்டுமென்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் கேரளா மற்றும் மராத்திய மாநிலம் ஜெய்தாபூரில் அணுஉலையை எதிர்க்கிறார்கள். இராசபக்சே தமிழர்களுக்குத் தனிநாடு கொடுத்தால்கூட இவர்கள் (மார்க்சிஸ்ட்கள்) ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வு என்பார்கள். அணுஉலை அமைக்க 13000 கோடி ரூபாய் செலவு செய்தது வீணாகிவிடும் என்கிறார்கள்.
2005-2006 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கு 3,74,937 கோடி ரூபாயை வரித் தள்ளுபடி செய்துள்ளது. இது வீண் விரயம் இல்லையா? அணுஉலைக்குப் பதிலாக அதே கட்டிடத்தில் எரி பொருளாக இயற்கை வாயுவைப் பயன்படுத்து என்கிறார்கள் அணுஉலை எதிர்ப்பாளர்கள்.
மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1994 ஆம் ஆண்டில் இனிமேல் மின் நிலையங்களைக் கட்டுவதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதியில்லை என்றார். தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 4 தனியார் அனல் மின் நிலையங்கள் தங்களுக்கு நிலுவைத் தொகையை அரசாங்கம் தரவில்லை என்று கூறிக் கடந்த பிப்ரவரி முதல் தேதி முதல் மின் உற்பத்தியை நிறுத்தினாலும், அவர்களுக்கு தமிழக அரசு தினமும் 2 கோடி ரூபாயை இழப்பீடாகத் தருகின்றது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 3,200 மெகாவாட் மின்சாரத்தில் 1100 மெகாவாட் குறைவாகத் தருகின்றது. அதை முழுமையாகக் கொடுத்தாலே தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை போய்விடும்.
மாற்று மின் திட்டங்களைக் கைக்கொள்ளுங்கள்! ஆபத்தான அணுமின் நிலையங்களைக் கைவிடுங்கள்! போராடுகின்ற மக்கள் போராட்டத்திற்குத் துணை நில்லுங்கள்! என்றார் கொளத்தூர் மணி.
புதுவை தலைவர் லோகு. அய்யப்பன் உரையாற்றுகையில் – கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாது என்று போராடும் போராட்டக் குழு மற்றும் அதற்குத் தலைமையேற்றிருக்கின்ற உதயகுமார், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெற்றார். மூன்று தொண்டு நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெர்மானியர் கண்டுபிடிக்கப்பட்டார் என்ற செய்தியெல்லாம் ‘தினமலர்’ போன்ற பத்திரிகையிலெல்லாம் போட்டு மக்களை நம்ப வைத்தீர்கள். அவரை ஜெர்மனிக்கே நாடு கடத்திவிட்டோம் என்கிறீர்களே, அவர் இங்கிருந்தால் போராட்டக் குழுவிற்கு தான் பணம் கொடுக்கவில்லை யென்ற உண்மையைச் சொல்லிவிடுவார் என்ற பயத்தினாலா? ஆனால், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தபோது அப்படிப்பட்ட எந்தச் செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இதே நாராயணசாமி நாடாளு மன்றத்தில் கூறியிருக்கின்றார். அப்போ, அது வேற வாய், இது வேற வாயா? போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்றார்.
பெரியார் முழக்கம் 23082012 இதழ்