தேவதாசி முறை ஒழிந்த வரலாறு
தேவதாசி முறையை உயர்த்திப் பிடிக்கும் கருத்தரங்கு சென்னையில் “தேவநாயகிகள்” என்ற பெயரில் நடைபெற்றிருக்கிறது. இங்கே நடந்த நிகழ்வுகளை திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தனது முகநூல் பதிவின் மூலம் வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்.
கருத்தரங்கில் பேசிய கவிஞர் வெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட சிலர் தேவதாசி முறையை அழுத்தமாக ஆதரித்தும் வேறு சிலர் எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள். பெண்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் இந்தச் சிறப்பான முறையை பிரிட்டிஷ் மிஷனரிகளும் பிரிட்டிஷ் ஆட்சியும் திட்டமிட்டு சீர்குலைத்தனர் என்ற வழமையான சங்கிகளின் பிரச்சாரம் தான் இங்கும் நடந்திருக்கிறது.
பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்தக் கொடூரமான அடிமை முறையின் வரலாற்றை மீண்டும் இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தேவதாசி முறை என்பதுதான் என்ன?
பருவத்துக்கு வராத பெண்களை முதலில் கடவுளுக்கு “பொட்டுக் கட்டுதல்” என்ற சடங்கை நடத்தி காணிக்கையாக்குகிறார்கள். சடங்குகளை நடத்துகிறவர்கள் பார்ப்பனர்கள்; கடவுளின் சார்பாக இந்தச் சிறுமிகளுக்குத் தாலி கட்டுவதும் பார்ப்பனர்கள் தான்!
பெண் பருவமடைந்ததும் அவர்களுக்கு “நித்திய சுமங்கலி” என்ற பட்டத்தைச் சூட்டி மீண்டும் பார்ப்பனர்கள் சடங்குகளை நடத்துகிறார்கள். அதற்கு ஊர் பெரிய மனிதர்களும் கோயில் தர்மகர்த்தாக்களும் வருகிறார்கள் . பிறகு அந்தப் பெண் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தேவதாசியாக நியமிக்கப்படுகிறார்.
எழுதக் கூசும் அளவுக்கு செயற்கையாக பருவமடைய வைக்கும் கொடூரமான சித்திரவதை முறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன.
“நித்திய சுமங்கலி” என்று பார்ப்பனர் சூட்டிய பட்டத்திற்கான அர்த்தம் ; அந்தப் பெண் சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளாமல் விரும்பும் எவருடனும் வாழலாம் என்பதுதான்.
பாலியல் துணைவர்களை பெண்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் பெண்களுக்கு இது சுதந்திரம் என்றும் சனாதனப் பெருமை கொண்டாடினார்கள். ஆனால் நிலப் பிரபுக்கள்; கோயில் அறங்காவலர்கள்; பார்ப்பன அர்ச்சகர்களின் உடல் பசிக்கு இவர்கள் தீனியாக்கப்பட்டார்கள் என்பது தான் வரலாறு! இந்தப் பெரிய மனிதர்கள் தேவதாசி பெண்களுக்கு வீடுகளையும் நிலங்களையும் தானமாக வழங்கினார்கள்; என்றாலும் அவை கோயிலின் பெயர்களிலே வழங்கப்பட்டன.
இந்தச் சொத்துக்களின் உரிமைகளை தேவதாசி பெண்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஒரு பெண் வாரிசை கட்டாயம் உருவாக்க வேண்டும். இப்படி தேவதாசிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் வேறு எந்தத் தொழிலையும் செய்ய முடியாது; மீண்டும் அவர்கள் தேவதாசியாகவே மாற வேண்டும்.
தேவதாசிகள் மரணமடைந்து விட்டால் கோயில் வாசலில் அந்தப் பெண்ணின் உடல் சிறிது நேரம் வைக்கப்பட்டு அன்று முழுதும் கோயிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டு தீட்டு கழிக்கப்படும்.
தேவதாசிகள் மீது அடிமை முத்திரைகள் பொறிக்கப்பட்டு ஆடு, மாடுகள் போல் நடத்தப்பட்டார்கள் என்பதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
காளஹஸ்தியில் உள்ள முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டில் இந்தப் பெண்கள் உடல்மீது முதலில் அரச முத்திரை தவறுதலாக குத்தப்பட்டு பிறகு அதை நீக்கி திரிசூல முத்திரைகள் உடலில் குத்தப்பட்டதாக கூறுகிறது.
பெண் வேலையாட்களையும் அவர்களது குழந்தைகளையும் திருவழுக்கரை கோயிலுக்கு பரிசுப் பொருளாக வழங்கியதையும் தேவரடியார்கள் விலைக்கு வாங்கப்பட்டதையும் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவழுக்கரை கல்வெட்டு கூறுகிறது.
ஒரு ராணுவ தளபதி தனது மகளையும் இரண்டு பேரக் குழந்தைகளையும் திரிசூலம் முத்திரை குத்தி கோயிலுக்கு பரிசாகக் கொடுத்ததாக வட ஆற்காடு மாவட்டத்தின் “திரு வல்லம்” கல்வெட்டு கூறுகிறது.
விற்பதற்கும் வாங்குவதற்கும் இடமாற்றம் செய்வதற்குமான சந்தைப் பொருளாக தேவதாசிகளை அரசாணை மூலம் அரசர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் தேவதாசிகள் கோயில்களில் சுத்தம் செய்வதற்கும் பாத்திரங்களைக் கழுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் காலப்போக்கில் தான் அவர்கள் நடன இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டனர் என்று ஆய்வு நூல்கள் கூறுகின்றன. (South Indian history Congress proceedings,Kakaiya University,Warangal pp 166- 167)
கிறிஸ்தவ மிஷனர்களின் சதி என்பது ஆர்.எஸ்.எஸ் சங்கிகளின் திசை திருப்பும் சூழ்ச்சிக்கதை இந்தச் சமூகக் கொடுமையை எதிர்த்து இந்தியாவில் பெண்கள் இயக்கங்கள் போராடின. 1912-ல் மானக்ஜி தாதாபாய்- முதோகர்- மாடகர் என்ற மூவரும் இணைந்து இந்த முறையை ஒழிக்கக் கோரி டெல்லி நாடாளுமன்றத்தில் மூன்று மசோதாக்களைக் கொண்டு வந்தனர். சென்னை மாகாணத்தில் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இணைந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். காந்தியார் இதைக் கடுமையாக எதிர்த்து ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். தேவதாசிப் பெண்களைச் சந்தித்து பேசினார். அந்தக் காலகட்டத்தில் தான் கோயில்கள் விபச்சார விடுதிகளாக மாறி வருகின்றன என்ற கடும் சொற்களையும் காந்தி பயன்படுத்தினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்த சத்தியமூர்த்தி போன்ற சனாதன பார்ப்பனர்கள் தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது என்று பிடிவாதம் காட்டினர். ‘தடைச் சட்டம் வந்தால் அதை எதிர்த்து சிறைக்குப் போவேனே தவிர இந்து தர்மத்தை எதிர்த்து நரகத்துக்குப் போக மாட்டேன்’ என்று திமிரோடு பேசினார் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி அப்படி விரும்பினால் அவரின் ஜாதிப் பெண்கள் தேவதாசிகளாக மாறட்டும் என்று பதிலடி தந்தார் முத்துலட்சுமி ரெட்டி. இந்தப் பதிலைக் கூறுமாறு முத்துலட்சுமி ரெட்டிக்கு அறிவுறுத்தியவர் பெரியார்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கமும். “குடிஅரசு” பத்திரிக்கையும் தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தில் உறுதியாக நின்றது என்பது வரலாறு! இந்தியாவில் ஜாதிப் பிளவுகளையும் இந்து, முஸ்லீம் மோதல்களையும் பிரிட்டிஷ்காரர்களே உருவாக்கினர் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பொய் பிரச்சாரத்தைத் தான் இந்த கருத்தரங்கிலும் பேசியிருக்கிறார்கள்.
சதி ஒழிப்பு, பால்ய விவாக ஒழிப்பு, விதவை மறுமணம் போன்ற சட்டங்களை பிரிட்டிஷ்காரர்கள் கொண்டு வந்தார்கள் என்பதற்காக கிறிஸ்தவ மிஷனரிகளின் சதி என்று இவர்கள் எதிர்ப்பார்களா?
பெண்களுக்கு அடிமை முத்திரைக் குத்தி சந்தைகளில் விற்பனைப் பொருளாக்கப்பட்ட இந்தக் கொடூரமான வரலாற்றுப் பக்கங்களை பார்க்காமல் இசையும் நடனக்கலையும் வளர்ந்தது என்று பேசுகிறவர்களுக்கு பெரியாரின் ஒரு கருத்தைத் தான் பதிலாக கூற வேண்டி இருக்கிறது.
மடமையையும் இழிவையும் திணிக்கும் பக்தி இலக்கியங்களில் தமிழின் பெருமையைத் தேடியவர்களுக்கு பெரியார் சொன்ன பதில் அது “மலத்தில் அரிசியைப் பொறுக்காதீர்கள்; அரிசி வேண்டுமானால் அரிசி கடைக்கு போங்க” – விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் இதழ் 01102026
