பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

அடக்குமுறையின் இருண்ட நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒளியேற்றியப் பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும். பெரியாரின் ‘விடுதலை’ இதழ் மட்டுமே துணிச்சலுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 1950 பிப்ரவரி 11-இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து ‘விடுதலை’ தீவிரத் தலையங்கம் எழுதியது. “பலிப்பட்ட 22 வீரர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை. மரக்கட்டைகளாகவா கருதுகிறீர்கள்? அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் உண்டு. விசாரணைக் குழுவில் கம்யூனிஸ்ட் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாராவது இருக்க வேண்டும்” என்று துணிச்சலாக எழுதியது. பெரியார் கண்டனக் கூட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்தார். 1951-இல் கட்சித் தடை நீக்கப்பட்டபோது, தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தலைமறைவில் இருந்த பி.ராமமூர்த்தி பெரியார், குத்தூசி குருசாமியுடன் இரகசியமாக சந்தித்துப் பேசினார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ்நாடு முழுவதும் “ரத்தக்கண்ணீர்”, “முருகன்”, “பேப்பர் நியூஸ்” நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார். பரமக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சென்னை என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். வண்ணாரப்பேட்டையில் ஜீவாவுக்கு பிரச்சாரமும் செய்தார். புதுக்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான எம்.கல்யாணசுந்தரம், குத்தூசி குருசாமிக்கு நன்றிக் கடிதம் எழுதினார். “திராவிடர் கழக – கம்யூனிஸ்ட் கட்சி அய்க்கியம் தமிழ்நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி” என்றுப் போற்றினார். 1965-இல் குத்தூசி குருசாமி மறைந்தபோது, செஞ்சட்டை அணிந்த தொழிலாளர்கள் அயனாவரம் சுடுகாடு வரை அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

ஏனெனில் தடைக்காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்குப் புகலிடம் தந்த பெருந்தன்மை குத்தூசியாருக்கு உண்டு. மாஸ்டர் ராமுண்ணி – கிருஷ்ணாபாய் (ரமணிபாய்) தம்பதியரும் தலைமறைவுத் தோழர்களுக்கு உணவும் தங்குமிடமும் அளித்து உதவினர். இவ்வாறு மனிதநேயத்தின் உச்சத்தைக் காட்டிய திராவிடர் கழகத்தின் உதவிகளைத் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கம் என்றும் மறக்காது என வரலாறு பதிவு செய்கிறது.
– தீக்கதிர் நாளேடு, (02.02.2025)
பெரியார் முழக்கம் 07022025 இதழ்

You may also like...