கோகுல்ராஜ் கொலை: கழகம் எடுத்த தொடர் போராட்டங்கள்
தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ‘கவுண்டர்’ சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்த குற்றத்துக்காக கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த சில ஜாதி வெறியர்கள் கோகுல்ராஜ் தலையைத் துண்டித்து, பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் வீசி ‘தற்கொலை’ என்று ஏமாற்ற முயன்றனர். திராவிடர் விடுதலைக் கழகம் உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.
- ஜாதிவெறிக் கும்பலை உடனே கைது செய்து வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்தார். (‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 2, 2015)
- வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர், தலைமறைவாகி காவல்துறைக்கு சவால் விடும் ‘வாட்ஸ்அப்’ பதிவுகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 19.7.2015இல் தர்மபுரியில் கூடிய கழகச் செயலவைக் கூட்டத்தில், காவல் துறையில் ஊடுறுவியுள்ள ஜாதிய மனநிலையைக் கண்டித்தும் அவர்களின் அலட்சியப் போக்கால் தான் தேடப்படும் குற்றவாளிகள், காவல்துறைக்கு சவால் விடுகின்றனர் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. மாவட்ட காவல்துறை அதிகாரிகளாக அம்மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியாக இருக்கும் பிரிவைச் சார்ந்தவர்களை நியமிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது.
- மேற்குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வரும் ஜாதி எதிர்ப்பு பரப்புரைகளுக்கு காவல்துறை தடைபோடுவதை நிறுத்தி அனுமதிக்க வற்புறுத்தியும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் சட்டம் ஒழுங்குப் பிரிவு காவல்துறை இயக்குனரிடம் சென்னையில் 1.7.2015 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- கொலையைக் கண்டித்து திருச்சியில் கழகம் சார்பில் உடன்பாடுள்ள அமைப்புகளை இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 3.7.2015 அன்று நடத்தப்பட்டது.
- 2015 ஆகஸ்ட் 17 அன்று திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் திருச்செங்கோடு காவல்துறை முற்றுகைப் போராட்டம் கழக சார்பில் நடந்தது. 200 தோழர்கள் கைதானார்கள். அப்போது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82ஆவது பிரிவின் கீழ் தேடப்படும் யுவராஜ் என்பவரை ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்று அறிவிக்க வேண்டும் என்றும் 83ஆவது பிரிவின்படி அவரின் சொத்துக்களை முடக்கி சரணடைய செய்ய வேண்டும் என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.
- இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்த காவல் ஆய்வாளர் சக்கரபாணி, நாமக்கல்லுக்கு மதுவிலக்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து கழகம் வலியுறுத்தியபடி ஆதிக்க ஜாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தலித் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக நியமிக்கப் பட்டார். அதேபோல் யுவராஜ் தேடப்படும் குற்வாளியாக அறிவிக்கப்பட்டார். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் நோட்டீஸ் அவரது வீட்டிலும் அவர் நடத்தும் ஜாதி சங்கக் கட்டிடத்திலும் ஒட்டப்பட்டது. வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
- காக்கி சட்டையைக் கழற்ற வைப்பேன்; கவுண்டர்கள் அணி திரள வேண்டும் என்று தலைமறைவாக இருந்து யுவராஜ் பேசிய வெறிப் பேச்சுக்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
- மாவட்ட காவல்துறை பெண் அதிகாரியாக இருந்த தலித் சமூகத்தைச் சார்ந்த விஷ்ணு பிரியா, ஜாதிவெறியர்களின் அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வலியுறுத்தியது.
வழக்கின் வெற்றிக்கு அயராது உழைத்த வழக்கறிஞர் ப.பா. மோகன்
பல்வேறு தடைகளை சந்தித்து வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; பிறகு அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர். கோகுல் ராஜ் வகுப்புத் தோழியான சுவாதி முதலில் தன்னிடமிருந்து கோகுல்ராஜ் பிரிக்கப்பட்டு, கடத்தப்பட்டதையும் செல்போன் பிடுங்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டாலும் பிறகு பிறழ் சாட்சியாகி விட்டார்.
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினாலும் சாட்சியங்கள் அப்படியே இருந்தன. 106 சாட்சிகள் அளித்த சாட்சியங்களையும் 500 ஆவணங்களையும் 700 பொருள்களையும் பரிசீலித்து சந்தர்ப்ப சூழலை முன் வைத்து வழக்கை நடத்தினோம். அரசு தரப்பு ஒத்துழைப்பும் அவ்வளவாக இல்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு காவல்துறை அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கேமரா மற்றும் உடற்கூறு ஆய்வுகள் அறிக்கைகளைக் கொண்டு அறிவியல் ரீதியாக குற்றம் நிரூபிக்கப்பட்டது என்றார் ப.பா.மோகன். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு கடமையாற்றியபோதும் அவருக்கு ஊதியம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை வழக்கிற்கு சொந்த செலவிலேயே வந்து சென்று வழக்கை நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பெரியார் முழக்கம் 10032022 இதழ்