சேலத்தில் கரைபுரண்ட உற்சாகம்; பேரெழுச்சியுடன் வாகனப் பேரணி; மேடையில் ஜாதிமறுப்புத் திருமணம்; கழக ஏட்டுக்கு நிதி!

சேலம் கிழக்கு, மேற்கு மற்றும் மாநகரக் கழகங்கள் பெரியார் பிறந்தநாள் விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர்.

சேலம் மேற்கு மாவட்டத்தில் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாள் விழா 17.09.2026 காலை 9 மணிக்கு கோனூர் சமத்துவபுரத்தில் தொடங்கி தார்க்காடு பகுதியில் இரவு 10 மணி வரை இருசக்கர வாகனப் பேரணியுடன் நடைபெற்றது. காலை 9 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேரம் தவறாமை
கோனூர் சமத்துவபுரத்தில் இருசக்கர வாகனப் பேரணியை கழகத் தலைவர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் பேசுகையில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அணுகுமுறைகளை குறிப்பிட்டுப் பேசும்போது பெரியார் தன் வாழ்நாளில் நேரம் தவறாமையை கடைபிடிப்பார் என்றும், இந்த பெரியார் பிறந்த நாளில் நாம் உறுதியேற்பது இனி வரும் காலங்களில் கழக நிகழ்வுகளைக் குறித்த நேரத்தில் தொடங்குவதாக இருக்கவேண்டும் அதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வெள்ளார் பகுதியைச் சேர்ந்த சு. கபிலன் கழகத் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இருசக்கர வாகனப் பேரணி மல்லிகுந்தம், மேச்சேரி, பனங்காடு, மசக்காளியூர், கீழ் வனவாசி, வனவாசி மேல் ரோடு, நங்கவள்ளி பேருந்து நிலையம், தோப்புத்தெரு, வீரக்கல், ராமன் நகர், மேட்டூர் ஆர்.எஸ், காவேரி கிராஸ், மேட்டூர், கண்ணாமூச்சி, காவலாண்டியூர், கொளத்தூர், இறுதியாக தார்க்காட்டில் நிறைவு பெற்றது.
மேச்சேரி ஒன்றியம்: இருசக்கர வாகனப் பேரணியை வரவேற்று மாரிமுத்து, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். மல்லிகுந்தம் பகுதியில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் படத்திற்கு அன்பழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மேச்சேரி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம் தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நங்கவள்ளி ஒன்றியம்: வனவாசி கிளைக் கழகம் பனங்காடு பகுதியில் வனவாசி நகரத் தலைவர் செந்தில் தலைமையிலும், மசக்காளியூர் பகுதியில் வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், வனவாசி பேருந்து நிலையம் (கீழ் வனவாசி) இந்திராணி, வனவாசி மேல் ரோடு பகுதியில் வனவாசி நகரப் பொருளாளர் பன்னீர்செல்வம், நங்கவள்ளி நகரக் கழகத்தின் சார்பில் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், தோப்புத்தெரு பகுதியில் நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வீரக்கல் பள்ளிக்கூடம் பேருந்து நிறுத்தத்தில் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தோழர்களுக்கு காலை உணவு நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் வழங்கப்பட்டது.
மேட்டூர் ஆர்.எஸ் கிளை: ராமன் நகர் பகுதியில் ஜஸ்டின்ராஜ் பேரணியில் வந்த தோழர்களுக்கு குளிர்பானம் வழங்கினார். ஆர்.எஸ். பெரியார் படிப்பகத்தில் கழகக் கொடியினை வழக்கறிஞர் அறிவுமதி தலைமையேற்று ஏற்றி வைத்து பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். மேட்டூர் ஆர்.எஸ் பகுதிகளில் பெரியார் பிறந்தநாள் விழா சுவரெழுத்துகள் எழுதப்பட்டு, சாலையின் இருபுறமும் 300-க்கும் மேற்பட்ட கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ராமன் நகர், சாம்பள்ளி, ஆர்.எஸ், தங்கமாபுரிபட்டினம் ஆகிய பகுதிகளில் பெரியார் வாசகங்கள் மற்றும் படங்கள் அடங்கிய உயர் மின்னொளி கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது.
மேட்டூர் நகரம்: காவேரி கிராஸ் பகுதியில் காளியப்பன், சின்ன பார்க் பகுதியில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மேட்டூர் நகர பெரியார் படிப்பகத்தில் நகரத் தலைவர் மார்ட்டின் மற்றும் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்ட படத்திற்கு நகரச் செயலாளர் குமரப்பா ஆகியோர் தலைமையில் பெரியார் படம் மற்றும் பதாகைகளுக்கு மாலை அணிவித்து கழகக் கொடியேற்றினர். மேட்டூர் நகரம் முழுவதும் சுவர் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. தோழர்களுக்கு மதிய உணவு சேலம் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
கொளத்தூர் ஒன்றியம்: கண்ணாமூச்சி பகுதியில் மூத்த தோழர் பொன்னுசாமி, காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் சரசுவதி, கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் கழகக் கொடியினை ஏற்றி படத்துக்கு மாலை அணிவித்தனர். கொளத்தூரில் கணேசன் விழா ஏற்பாடுகள் செய்திருந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் பள்ளிக் குழந்தைகளுக்கு பேனா, நோட்டு வழங்கினர். விசிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தார்க்காட்டில் பொதுக்கூட்டம்
நிறைவாக தார்க்காடு பகுதியில் பொதுக்கூட்டம் மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு தார்க்காடு கிளைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, தவாக மாவட்டத் துணைத் தலைவர் சக்திவேல், திமுக வழக்கறிஞர் சரவண பரத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பொதுக் கூட்டத்தில் கார்த்திகா-கிருஷ்ணராஜன் ஆகியோரது ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் ஏரிக்காடு பெரியார்நகர் கிராம மக்கள் புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.50,000 கழகத் தலைவரிடம் வழங்கினார்கள்.
குழந்தைகளுக்கான தனித்திறன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தார்க்காடு பகுதியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தார்க்காடு கிளைக் கழகத் தோழர்கள் அன்பரசு, சண்முகம், தினேஷ், அன்பழகன், பாரதிகண்ணன், குமரேசன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
ரூ.3,500 மதிப்புள்ள பரிசுப்பொருட்களை சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத்குமார் அன்பளிப்பாக வழங்கினார். தோழர்களுக்கு இரவு உணவு கொளத்தூர் நகரக் கழகத்தினர் ஏற்பாடு செய்தனர். நிகழ்வில் காலை முதல் இரவு வரை மகளிர் அணித் தோழர்கள், சேலம் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 24092026

You may also like...