பரப்புரைக்கு தயாராகும் கழகம்!
சென்னை: மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 18-02-23 கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழக சேத்துப்பட்டு அமைப்பாளர் இராசேந்திரன் அவர்கள் கடவுள், மறுப்பு, ஆத்மா, கொள்கையை கூறினார். மாவட்டச் செயலாளர் உமாபதி தொடக்க உரையாக சென்னை மாவட்ட கழகம் கடந்த ஆண்டு செய்த சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழல்களையும் விளக்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் சென்னையில் கடந்த ஆண்டு நடந்த “எது திராவிடம்,எது சனாதனம்” தலைப்பில் 200 கூட்டங்களைச் சிறப்பாக செய்ததற்கு உழைத்த அனைத்து தோழர்களையும் பாராட்டி வருகிற பரப்புரைப் பயணத்தின் தேவைகள் குறித்துப் பேசினார். கழகத் தலைமை குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரைக்குப் பிறகு கழக மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் புதிய தோழர்களை இன்னும் அமைப்பாகக் கட்டமைக்க ஆலோசனைகள் வழங்கினார். தாம்பரம் பகுதி அமைப்பாளர் அருண் கோமதி நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டியத் தேவை குறித்து உரையாற்றினார். சுகுமார், மனோகரன், பிரகாசு, தேன்மொழி, மாணவர் கழக பேரன்பு உள்ளிட்ட தோழர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.ஆவடி பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் ராஜ் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கழகத் தலைவர் அவருக்கு புத்தகங்கள் வழங்கினார். பல்லாவரம் பகுதி அமைப்பாளராக அழகிரி தேர்வு செய்யப்பட்டார். பெரியார் முழக்க பொறுப்பாளராக பிரசாந்த் நியமிக்கப்பட்டார். நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பிரகாசுடன் இணைந்து பிரசாந்த் செயல்படுவார். நிறைவாக கழக தலைவர் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தின் தேவை குறித்தும் பரப்புரை பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கவுரை ஆற்றினார். சென்னையின் பரப்புரை பயணம் சிறப்பாக அமைய புருஷோத்தமன் 5000 ரூபாயை கழகத் தலைவரிடம் வழங்கினார். பரப்புரைப் பயணம் மார்ச் 15 தொடங்கி மார்ச் 22 மயிலாடுதுறையில் நிறைவடைகிறது. பரப்புரைப் பயணத்துக்கு வரும் தோழர்கள் பெயர் பட்டியல் தருமாறும்வர இயலாத தோழர்கள் தங்களால் முடிந்த நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
– பெரியார் முழக்கம் 27022025 இதழ்
