புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்த கடந்த இதழின் தொடர்ச்சி…

திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடந்தால், கு.சி.பழனிச்சாமி தன் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்வார். தினசரி நூல்களைப் படிப்பது, விவாதிப்பது, பேச்சுப்பயிற்சி என இருந்த மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோரின் உரைகள், கொள்கை உணர்வை ஊட்டி வளர்த்தன. ‘பவளக்கொடி’, ‘வள்ளித் திருமணம்’, ‘சாரங்கதாரா’, ‘நல்லதங்காள்’ ஆகிய நாடகங்கள்தான் கும்மம்பட்டியில் ஆண்டாண்டு காலமாக நடந்தன. அவை தவிர, வேறு எந்த நாடகத்தையும் கும்மம்பட்டி மக்கள் பார்த்ததில்லை. அதனால், பகுத்தறிவுக் கருத்துகளை நாடகம்மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, கலைமன்றம்.

சுமார் மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுத்து, 1952-இல் கலைஞரின் ‘தூக்குமேடை’ நாடகத்தை நடித்தனர். அப்போது, தூக்குமேடை நாடகம் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், `இளைஞர் குரல்’ என்ற பெயரில் மாற்றி, அந்த நாடகத்தை நடித்தனர். காவல் துறை, அரசு அதிகாரிகள், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலரும் வருகை தந்து நாடகத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிச் சென்றனர்.

அதன்பிறகு, வெளியூர்களில் இருந்தும் தங்கள் ஊரில் நாடகம் நடத்த வருமாறு கலை மன்றத்திற்கு அழைப்புகள் வந்தன. ஆனால், முக்கிய வேடங்களில் நடித்த மாணவர்கள் சிலர் படித்துமுடித்து, வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால், மீண்டும் புதிய மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து கலை மன்றத்தைப் புதுப்பித்தார், கு.சி.பழனிச்சாமி. தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்குள் நுழைய அனுமதிக்காத ஊர்ப் பெரியவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை மீறி, அழைத்து வந்ததுடன், சலவைத் தொழிலாளி ஒருவரை நாடகத்தில் நீதிபதியாக நடிக்கச் செய்து, ஊர் மக்களைப் பார்க்க வைத்தது, ’கலை மன்றம்’. செல்லம் என்ற சலவைத் தொழிலாளிதான் நாடக ஒத்திகைக்காகக் கலை மன்றத்திற்கு இடமும் வழங்கினார். கலை மன்றத்தின் நாயகர் கு.சி.பழனிச்சாமியோ வில்லனாக நடித்தார்.

அதே ஆண்டுதான் கலைஞரின் `பராசக்தி’ திரைப்படம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. `தூக்குமேடை’ நாடகத்தின் சில பகுதிகளும் `பராசக்தி’ படத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டு காரணமும் சேர்ந்து கும்மம்பட்டி இளைஞர்களைப் `பராசக்தி’யைப் பார்க்கத் தூண்டியது. முதல் நாளே கும்மம்பட்டியில் இருந்து 40 இளைஞர்கள் சின்னாளபட்டிக்குச் சென்று, `பராசக்தி’ திரைப் படத்தைப் பார்த்தனர். இரண்டிரண்டு பேராக வரிசையாகத் திரையரங்கிற்குள் உள்ளே நுழைந்த போது, `கும்மம்பட்டி படை வருகிறது’ என சின்னாளப்பட்டி கழகத்தினர் ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனர்.

சொந்த ஊரில் மட்டுமல்ல, பகுத்தறிவுப் படைப்புகளுக்கு தமிழ்நாட்டில் எங்கு தடையோ, எதிர்ப்போ எழுந்தாலும் கும்மம்பட்டியில் இருந்து ஆதரவுக்கரம் நீட்டியது, கலை மன்றம். எம்.ஆர்.ராதாவின் `கீமாயணம்’ நாடகத்திற்கு எதிர்ப்பு வந்தபோது, நேரில் சென்று நாடகத்தைக் கண்டுகளித்து ஆதரவு தெரிவித்தனர். சுற்றுப்புறப் பகுதிகளில் எங்காவது புராண நாடகங்கள் நடைபெற்றாலும்கூட அங்கு சென்று, `பெரியார், அண்ணா, கலைஞரைப் பற்றி பாட்டு பாடுங்கள்’ என துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்து பாடவைத்தனர். அப்படி, கலையை கொள்கை பரப்புவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திய கலை மன்றம், 1953-இல் திமுகவை நோக்கி தன்னை நகர்த்தியது.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளராக மதுரை முத்து இருந்தபோது, கும்மம்பட்டிக்கு அடிக்கடி வந்துசெல்வார். கும்மம்பட்டி கலை மன்றத்தோடு நெருக்கமான தொடர்பும் கொண்டிருந்தார். பின்னாளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னாளப்பட்டி நாச்சிமுத்துவும் கும்மம்பட்டி கலை மன்றத்துடன் நெருங்கிப் பழகினார். இந்தத் தொடர்புகள் காரணமாக, 1953-இல் கலை மன்றத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகமாக இணைத்தார் கு.சி.பழனிச்சாமி. கும்மம்பட்டி சுற்று வட்டாரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் கிளை இங்குதான் உருவானது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, சோழவந்தான் என முக்கிய பகுதிகளில் மட்டுமே அப்போது தி.மு.கழகம் அடர்த்தியாக இருந்தது. அந்தக் காலகட்டத்திலேயே கும்மம்பட்டி என்ற சிற்றூரில் உருவான கிளைக்கழகம், கலை மன்றத்தின் வீரியமிக்க செயல்பாடுகளால் சுற்றுப்புற கிராமங்கள் எங்கும் பரவத் தொடங்கியது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் இருந்து இம்மியளவும் பின்வாங்காமல், பகுத்தறிவுக் கிராமமாகவும் கும்மம்பட்டியை வளர்த்தது கலை மன்றம். புரோகிதத் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுவந்த கும்மம்பட்டியில், முதன்முறையாக கு.சி.பழனிச்சாமி – இராசம்மாள் இணையருக்கு, பார்ப்பனியச் சடங்குகளை மறுத்து, சுயமரியாதைத் திருமணம் நடை பெற்றது. அதன்பிறகு, கும்மம்பட்டியில் திருமணம் நடைபெறும் வீடுகளுக்குக் கலை மன்றத்தினர் சென்று, முன்னேற்பாட்டுப் பணிகளைச் செய்துகொடுத்து, அவற்றை தமிழ் முறை திருமணங்களாக மாற்றினர். 1969-இல் சுயமரியாதைத் திருமணத்திற்கு அண்ணா சட்டபூர்வ அங்கீகாரம் தருவதற்கு முன்பே கும்மம்பட்டியில் நூற்றுக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் கலை மன்றத்தால் நடந்துவிட்டன.

தில்லான், தில்லையம்மாள், அரியம்மாள், குழந்தை, குட்டியப்பன் எனக் குல தெய்வங்களின் பெயர்களே திரும்பத் திரும்ப வைக்கப்படுவது நடைமுறையில் இருந்தது. கலை மன்றம் தொடங்கப்பட்டபின், தமிழில் பல்வேறு புதிய பெயர்களைச் சூட்டத் தொடங்கினர். சிற்றரசு, வணங்காமுடி எனத் தன் வீட்டில் இருந்தே புதிய தமிழ்ப் பெயர்கள் வைக்கும் வழக்கத்தை உருவாக்கினார் சிற்றரசு. தி.மு.க.வாக மாறிய பின்னர், கும்மம்பட்டியில் தமிழ்ப்பெயர் சூட்டல் ஒரு பெரும் இயக்கமாகவே மாறிவிட்டது. சிற்றரசு, வணங்காமுடி, புகழேந்தி, கலையரசி எனக் கு.சி.பழனிச்சாமி தன் குடும்பத்தில் சூட்டிய தமிழ்ப் பெயர்கள் ஊரெங்கும் பரவின. அனைவரும் தமிழ்ப் பெயர்களையே சூட்டத்தொடங்கினர்.
பெரியார் முழக்கம் இதழ் 21052026

You may also like...