ஓ.பி.எஸ்-சின் நாகதோஷ நம்பிக்கை
நாக தோஷம்” தனது தொகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதைத்தடுப்பதற்கு நாக தோஷம் என்ற சடங்கை நடத்த வேண்டும்” என்று முன்னாள் முதலமைச்சரும் இப்போது திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது நகைச்சுவைக்கான பேச்சு என்று திசை திருப்பி விட முடியாது.இது போன்ற பேச்சுகள் பெரும்பாலும் வட மாநில சட்டமன்றங்களில் தான் பேசப்படும். இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கே வந்துவிட்டது. ஆனால் உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சி இப்படி பேசலாமா? என்று கேட்க, அமைச்சர் அருண்ராஜ் பில்லி, சூனியத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருப்பது பாராட்டி வரவேற்க வேண்டிய ஒன்று.
முதலமைச்சரை ஆஸ்தான ஜோதிடர்தான் வழி நடத்துகிறார் என்று முதலமைச்சரின் மூடநம்பிக்கையை எதிர்க்கும் போது இப்படி “நாகதோஷ” மூடநம்பிக்கைகளை திமுக உறுப்பினர் வெளிச்சம் போட்டுக் காட்டலாமா?
வைதீக மூடச்சடங்குகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர் ஓ.பி.எஸ். அவர் இப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாம்புகள் மீதான பல மூடநம்பிக்கைகளில் பாமர மக்கள் மூழ்கி இருக்கிறார்கள். இந்த மூட நம்பிக்கைகளை மறுக்கும் அறிவியல் விளக்கங்கள் ஏராளமாக வந்து விட்டன.
தமிழ்நாட்டில் மந்திரவாதிகளிடம் ஏமாறுவதும் பேய்,பில்லி,சூனிய நம்பிக்கைகளில் வாழ்க்கையை தொலைப்பதும் அதிகரித்து வரும் நிலையில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் ஒன்றை ஏற்கனவே கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ்நாடு அரசும் கொண்டு வர வேண்டும் திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஆகஸ்ட் 12 அன்று காரைக்குடியில் நடந்த மாநாட்டில் இந்தக் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியதை சுட்டிக் காட்டுகிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
