பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 33வது கூட்டம், 29/8/26 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தொகுத்து வழங்கினார்.

“ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள்” குறித்து கார்த்தி ராஜேந்திரன், “50 விழுக்காடு தொகுதிகள் உயர்வு தீர்வாகுமா?” எனும் தலைப்பில் சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தொகுதி மறுசீரமைப்பு ஆபத்துகளையும், பாஜவின் சதிதிட்டம் குறித்தும் ர.பிரகாசு, எழுத்தாளர் தமிழ் காமராசன் விளக்கி உரையாற்றினர். நிறைவாக பேசிய இடதுசாரி செயல்பாட்டாளர் மருதையன் அரசியல் சட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் அவசர காலத்தில் வாழ்கிறோம் என்று கூறினார். தொகுதி மறுவரையரைத் திட்டத்தின் ஆபத்துகளை விரிவாக விளக்கிப் பேசினார்.

“ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள் என்ற தலைப்பில் கார்த்திக் ராஜேந்திரன் உரை:

தொகுதி மறு வரையறை சட்டத் திருத்தத்தை யார் கையில் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த மறு சீரமைப்பு முறையை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் பாஜக அரசு வந்ததற்குப் பிறகு ஏன் இவ்வளவு தீவிரமாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் துடிக்கிறது என்பதுதான் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. இது ஒரு ஜனநாயக நாடு என்ற அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்று சொல்லாடலை அதே சட்டதைப் பயன்படுத்தி குறுக்கு வழியாக அதை நீர்த்துப் போகச் செய்பவர்களாகத் தான் உள்ளார்கள். அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடைபெறும் தேர்தல் முறையையே காலி செய்வது தான் பாஜக உள்நோக்கம். அதை தொகுதி மறுசீரமைப்பு செய்வதன் வழியாக செய்திட பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தான் தோன்றுகிறது.

இந்திய மாநிலங்களில் வேறு எங்கேயும் செய்யத் தொடங்காத இந்தத் தொகுதி மறுவரையறையை அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு 126 சட்டமன்றத் தொகுதிகளும், 17 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. அசாமின் மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 35 விழுக்காடு இஸ்லாமியர்களாக உள்ளார்கள். அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் இந்த இரண்டு மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதை திட்டமிட்டு சிதைத்துள்ளனர்.

கடந்த 2026 தேர்தலுக்கு முன்பாக இன்றைக்கு முதலமைச்சராக இருக்ககூடிய ‘ஹேமந்த் பிஸ்வாஷ் ஷர்மா’ என்ற பார்ப்பனர் ஒரு கூட்டத்தில் பேசியதாவது “36 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகளை தீர்மானிக்கும் சக்திகளாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள், அவ்வாறு இருக்கக்கூடாது, இதை 23-ஆகக் குறைக்க வேண்டும். என்று பேசியுள்ளார். இதற்காக அவர்கள் 3 வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். இது ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நடைமுறை.

1. Cracking – இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் அதிக அடர்த்தியாக இருக்கிறார்களோ அந்தத் தொகுதிகளை உடைத்து பக்கத்து தொகுதியில் அவர்களைச் சேர்த்து இஸ்லாமிய வாக்குகளை சிதறடிப்பது.

2. Packing – இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இதர தொகுதிகளில் பிரித்தெடுத்து ஒரே தொகுதிக்குள் கொண்டு வருவது.

3. Stacking – பல்வேறு தொகுதிகளில் சிதறுண்டு கிடக்கும் இந்துக்களை ஒரு தொகுதிக்குள் கொண்டுவந்து அவர்களை பெரும்பான்மையாக மாற்றுவது.

தொகுதி மறு சீரமைப்பிற்குப் பிறகு என்ன நடந்துள்ளது என்பதை அங்குள்ள சமூக ஆர்வலரான யோகேந்திர யாதவ் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு பஞ்சாயத்தை மூன்றாக உடைத்து வெவ்வேறு நாடாளுமன்ற தொகுதிகளோடு இணைத்துள்ளனர்.” உதாரணமாக, நமது திருவல்லிக்கேணியை ஒரு பஞ்சாயத்தாக எடுத்துக்கொண்டால் அதை மூன்றாக உடைத்து பக்கத்தில் இருக்ககூடிய மூன்று பாராளுமன்ற தொகுதியோடு அந்த மூன்றையும் சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி செய்துள்ளார்கள். இதைச் செய்வதன் வழியாக திருவல்லிக்கேணியில் பெரும்பான்மையாக இருக்கிற இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்யலாம்.

தொகுதி மறுசீரமைப்பைப் பொறுத்தவரை கடைசியாக எடுக்கப்பட்ட 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி தான் செய்திருக்க வேண்டும், ஆனால் அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி செய்துள்ளனர். ஏனெனில் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுத்துக்கொண்டால் இஸ்லாமியர்களின் ஓட்டு விழுக்காடு அதிகமாக இருக்கும் என்பதால் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதைச் செய்துள்ளனர்.

அடுத்து ஜம்மு காஷ்மீரில் 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மொத்த மக்கள் தொகையில் 28 விழுக்காடு இந்துக்களும், 72 விழுக்காடு இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். அங்குள்ள 20 மாவட்டத்தில் 16 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதில் காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாகவும் ஜம்முவில் இந்துக்கள் அதிகமாகவும் வாழ்கிறார்கள். காஷ்மீரில் 2024 தொகுதி மறு வரையறைக்கும் முன்னால் காஷ்மீர் பள்ளதாக்கின் தொகுதியின் எண்ணிக்கை 46 ஆகவும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 47 ஆகவும் ஆனது. அதாவது 1 தொகுதி கூடுதலாக கிடைக்கப்பெற்றது. ஆனால் ஜம்முவில் தொகுதி மறுவரையறைக்கு முன்னால் 36 ஆகவும் தொகுதி மறுவரையறைக்குப் பின்னால் 43 தொகுதிகளாக உயர்த்தப்பட்டது. அதாவது 6 தொகுதிகள் கூடுதலாக கிடைத்துள்ளது. ஏனென்றால் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்ததால் ஒரு தொகுதி கூடுதலாகவும், ஜம்முவில் இந்துக்கள் அதிகமாக இருந்ததால் ஆறு தொகுதி கூடுதலாகவும் வழங்கப்பட்டுள்ளன.

2002-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான அரசு “ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1957” மற்றும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 47(3) திருத்தம் செய்தது. இதன் அடிப்படையில் அங்கும் 2026 வரை தொகுதி மறுசீரமைப்பு பணிகள் செய்யக்கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமைச் சட்டம் 370-யை நீக்கியப் பிறகு அங்கு தங்களது அதிகாரத்தை செலுத்துவதற்கு பாஜக அரசு தயங்கவில்லை‌. அதன் அடிப்படையில் கடந்த 2022ல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்குள் சென்றது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைந்த இவ்வாணையத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் கே.கே. சர்மா ஆகியோர் பதவிவழி உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். அரசுக்கு ஆதரவாக செயல்படும் பிரதிநிதிகள் இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தபோதிலும் ஆணையம் தொகுதி மறுவரையறைக்கான பணியைச் செய்து முடித்தது. இதனை மார்ச் 14, 2022 அன்று இந்திய அரசிதழ் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசிதழ் ஆகியவற்றில் வெளியிட்டது.

லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய இரு பிராந்தியங்களுக்கும் எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பதைத் தீர்மானிப்பதில் பாஜகவின் பங்கு இருந்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி ஜம்மு காஷ்மீரின் 1.25 கோடி மக்களில் 68.8 லட்சம் பேர் காஷ்மீரிலும், 53.8 லட்சம் பேர் ஜம்முவிலும், 2.74 லட்சம் பேர் லடாக்கிலும் வசிக்கின்றார்கள். 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், இது காஷ்மீர் பிராந்தியத்திற்கு 46 இடங்களாகவும், ஜம்முவிற்கு 37 இடங்களாகவும், லடாக்கிற்கு 4 இடங்களாகவும் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 90ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி இந்த இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பான்மை இஸ்லாமிய வாக்குகளை சிதறடித்து அவர்கள் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ள இடங்களிலிருந்து பிரித்தெடுத்து பல்வேறு தொகுதிகளை இணைத்து அவர்களின் சக்திகளைக் குறைத்து அதன் மூலம் அங்கு ஒரு ஹிந்து அரசை கட்டமைக்கும் வேலைத்திட்டமாகதான் இந்தத் தொகுதி மறுவரையறையை அவர்கள் செய்துள்ளார்கள். எனவே இதுபோன்ற நிலை மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக நம் மாநிலத்தில் வந்து விடாமல் தடுத்திட இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார் கார்த்திக் ராஜேந்திரன்.
பெரியார் முழக்கம் இதழ் 03092026

You may also like...