உற்சாக வெள்ளத்தில் காரைக்குடி மாநாடு!
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு” ஆகஸ்ட் -12,2026 அன்று காரைக்குடியில் சுயமரியாதை சுடரொளி கானாடுகாத்தான் வை.சு சண்முகம் அரங்கில், (பாண்டியன் தியேட்டர் அருகில்) மாலை 6 மணிக்குத் தொடங்கியது.
முன்னதாக காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் இருந்து பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த கழகத் தோழர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பேரணியில் உற்சாகமாக தோழர்கள் கலந்து கொண்டு கொள்கை முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டுத் திடலை நோக்கி அணிவகுத்து வந்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது.
பேரணி செல்லும் பாதையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநாட்டு அமைப்பாளர் காரைக்குடி இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்தனர். தோழர்கள் பெரியார் வாழ்க! புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்.
மாநாட்டுத் திடலில் அருகாமையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர்.
மாநாடு மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. லதா,சத்யா, மேட்டூர் கோவிந்தராஜ், சித்திர சேனன், திராவிட மகிழன் இணைந்து பாடல்களைப் பாடினர். உமாபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேட்டூர் தோழர்கள் சீனிவாசன், அண்ணாதுரை, குமரன், காளியப்பன் மற்றும் கார்மேகம் தாளக் கருவிகளை இசைத்தனர். மாநாடு தொடங்கிய சில மணித்துளிகளில் பெரு மழையால் தடைபட்டாலும் மழை நின்ற பிறகு அதே உற்சாகத்துடன் தொடர்ந்து மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்டத் தலைவர் நா.முத்துக்குமார், காரைக்குடி மாநகர அமைப்பாளர் அ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்டத் தலைவர் பெரியார் முத்து வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார்.
மாநாட்டுத் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு தோழர்களின் கையொலிகளுக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன்,பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி, ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் ’தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் கழகத்தின் ஜாதி ஒழிப்பு இயக்கத்தை வெகுவாகப் பாராட்டினார். மேலும் ஜாதியத்தின் இயங்கியல் குறித்தும் அம்பேத்கர் அவர்களின் “ஜாதியை ஒழிக்கும் வழி” என்ற நூலின் கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையை வலியுறுத்தியும் பேசினார். (அவரது உரை பின்னர் வெளிவரும்).
பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற கலைக்குழுவினர், பயணத்தில் பங்கேற்ற தோழர்கள், பரப்புரைப் பயணத்திற்கு உழைத்த தோழர்கள் அனைவருக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயனாடையும், குழுத் தலைவர்களுக்கு நினைவுக் கேடயமும் வழங்கி சிறப்பித்தார்.
பரப்புரைப் பயணத்துக்காக வெளியிடப்பட்ட நூல்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார். உலகத் தமிழர் பேரவை துணைத் தலைவர் சா.இராமன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பாவெல் , பெரியார் பேரவைத் தலைவர் நாகேஸ்வரன், விசிக மாவட்டச் செயலாளர் உஞ்சனை சரவணன், ‘நாளை விடியும்’ இதழ் ஆசிரியர் அரசெழிலன், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஐந்திணை மக்கள் கட்சி இணை பொதுச் செயலாளர் கருணாநிதி, திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் நீ. இளங்கோ, சிபிஅய் மாநகரச் செயலாளர் சிவாஜி காந்தி, முடியரசனார் அவைக்களம் பாரி முடியரசன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், தங்க குமரவேல் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
நாமக்கல், ஈரோடு, கோபி, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், மயிலாடுதுறை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கடலூர் பெங்களூர், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி- பரிமளராசன்
பெரியார் முழக்கம் இதழ் 20082026
