திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15
கேள்வி: நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா?
பதில்: அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது மெய்யல்ல.
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர்.
மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிகிறது. இதன் பொருள், அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது. இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர, அச்சு முறிகிறது. அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம். அந்த நொடியில், பாய்ச்சல் வேகத்தில் முடிந்துவிட்டது.
அளவு மாற்றம், குணமாற்றம் மற்றும் பாய்ச்சல் வேக மாற்றம் என்பது மார்க்சிய இயங்கியல் தத்துவத்தில் அடிப்படையான நான்காவது விதியாகும்.
நீரைக் கொதிக்க வைத்தால் 99 டிகிரி வரை சூடேறும், 100 டிகிரியில் கொதிக்கும். அதுபோல் குளிர்வித்தால் 0 டிகிரிக்கு போகும்போது பனிக்கட்டியாக மாறும். ஆக, அளவு மாற மாற குணம் மாறிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முந்தைய நிலையை மறுத்து அடுத்த நிலைக்கு பாய்ச்சல் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.
இந்தப் பூமிப்பந்தில் பெருவெள்ளமும் இயற்கைப் பேரழிவும் ஆதிமுதலே அவ்வப்போதைக்கு நடந்து வந்தது. இந்த பெருவெள்ளம் அப்போதிருந்த வேடர்களின் நாகரீகத்தை அழித்தது. அதிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள் குகைகளில் வாழ்ந்து தங்கள் வாழ்க்கை முறையைப் பூரணமாக மாற்றிக் கொண்டார்கள் என்பதைச் சுட்டும் ஜார்ஜ் பொலிட்ஸர், “ஆக, நில இயல் வகைப்பட்ட ஒரு பேரழிவின் விளைவாக பூமியும் நாகரிகமும் திடீரென மாறுதல் அடைந்தது என்கிறார்.
இது போல் வரலாற்றில் சில திடீர் திருப்பங்கள், புரட்சிகள் நிகழ்ந்ததுண்டு. இவற்றை சில வரலாற்றாசிரியர்கள் “தற்செயல் நிகழச்சி’ என வருணிப்பர். இது சரியல்ல. ஏனெனில் ‘நடத்திருக்க வேண்டாதது எப்படியோ நடந்துவிட்டது என்கிறபோதே அது தற்செயல் நிகழ்வாகும்: ஆனால் சமூகத்தில் நடந்த புரட்சிகள் எதுவும் அப்படிப்பட்டதல்ல. அவசியத் தேவையாக ஏற்பட்டவையே ஏனெனில், தொடர்ச்சியாக மாறுதல் நிகழந்த வண்ணமே உள்ளன; அவை கூட்டாகச் சேர்ந்து திடீர் மாறுதல்களில் போய் முடிகின்றன என்பதே மெய்.
ஆம், சொந்த வாழ்வும் அப்படித்தான். பூப்பெய்தல் என்று கூறப்படும் இயற்கையான நிகழ்வு உங்கள் மகளுக்கோ தங்கைக்கோ இன்று காலை அல்லது மதியம் திடீரென ஏற்பட்டிருக்கலாம்: அதற்கான மாறுதல் சில மாதங்களாக அவர் உடலில் ஏற்பட்டுவந்தது. என்பதே மெய். அதன் அளவு மாற்றம் குணமாற்றமாகி திடீரென நிகழ்ந்தது அவ்வளவே. ஒருவருக்கு திடீரென வேலை இழப்பு ஏற்பட்டது. அவர் சுற்றிலும் நடப்பதை அறியாதவராக இருந்தால் ஏதோ தனக்கு கிரகம் சரியில்லாததால் திடீரென வேலை பறிபோய் விட்டது எனக் கருதுவர். உண்மை என்ன? நாட்டில் நிலவிய பொருளாதார மந்தமும் தொழில் தேக்கமும் பல மாதமாக உருவாக்கிவந்த நெருக்கடியின் கோரவிளைவால் நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்து வந்தனர் அதன் ஒரு அம்சமே இவரின் வேலை இழப்பும் என்பதே உண்மை.
ஆக. திடீர் நிகழ்வுகள் எதுவாயினும், அதனை சற்று ஊடுருவிப்பார்த்தால் அது தானாய் விளங்கும். எந்த வகையிலும் அது கடவுளின் திருவிளையாடல் அல்ல.
கேள்வி: டார்வின் பரிணாம தத்துவத்தைச் சொன்னாலும் கிறித்துவத்தை நம்பினார் என்பது மெய்யல்லவா?
பதில்: அப்படித்தான் நம்பப்பட்டு வந்தது; சொல்லப்பட்டு வந்தது அதே சமயம் அன்றைய மத ஆதிக்கச் சூழலில் புருனோ எரிக்கப்பட்ட குழலில், கோப்பர் நிகஸ் கடும் சவாலை சந்தித்த வேளையில், தன் கருத்தை முன்னெடுத்துச் செல்ல கிறித்துவத்தை நம்புவதாக ஒரு நாடகத்தை அவர் தந்திரமாக மேற்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டு வந்தது. ஏனெனில், உலகில் பல நாடுகளில் அப்படித்தான் நடந்தன. இந்தியாவிலும் மிகச்சிறந்த வானியல் நிபுணர்களாகத் திகழ்ந்த பூமியின் வடிவம் உருண்டை என்பதையும் சூரியனே மையமானது என்பதையும் கண்டு சொன்ன ஆரியபட்டரும், வராகமித்திரரும் கூட அவற்றை எழுதும் போது சில மதநம்பிக்கை சார்ந்த சுலோகங்களோடு கலந்தே தர வேண்டியிருந்தது.
டார்வின் விவகாரத்தில் உண்மை வெளிப்பட்டு, நாம் கருதியது சரிதான் என நிரூபணமாகியுள்ளது. அண்மையில் வெளிவந்த செய்தி இது:
“பரிணாம உயிரியல்வாதக் கோட்பாட்டை உருவாக்கிய இயற்கை அறிவியல்வாதி சார்லஸ் டார்வின், தான் ஒரு நாத்திகன் என்று எழுதிய கடிதம் ஏலம் விடப்படுகிறது.இந்தக் கடிதம் நியூயார்க்கில் ஏலத்தில் சுமார் 90,000 டாலர்களைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
இளம் பாரிஸ்டர் பிரான்சிஸ் மெக்டர்மட் 1880ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி டார்வினுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் நூல்களை வாசிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், பைபிள் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை. இருப்பினும், நான் உங்களுக்கு இதனை எழுதும் காரணம் என்னவெனில், உங்களுக்கு பைபிள் மீது நம்பிக்கை இருக்கிறதா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் எனக்கு போதுமானது’ என்று எழுதியிருந்தார்.
இதற்குப் பதில் கடிதம் எழுதிய டார்வின், “பைபிள் ஒரு இறைவெளிப்பாடு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று எழுதினார்.
டார்வினுக்கு மெக்டர்மட் இந்த கடிதம் வெளியிடப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது வெளிவரவில்லை.
ஆதாரம்: சு.பொ. அகத்தியலிங்கம் எழுதிய ஆன்மீகமா? அறிவியலா? நூலிலுருந்து.
பெரியார் முழக்கம் இதழ் 18092025
