இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

தென் மண்டல எல்.அய்.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு முன்னெடுத்த சமூக நீதி போராளி இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம் அண்ணாநகர் டவர் கிளப் இக்லு அரங்கில் ஆகஸ்ட்-1 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இரட்டைமலை சீனிவாசன், பெரியார் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ச.அய்யனார் (பொதுச்செயலாளர், தெ.ம.எல்.அய்.சி.பி. ஊழியர் கூட்டமைப்பு) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. வி. சகாயராணி ( தலைவர், எல்.அய்.சி.பி ஊழியர் நலச்சங்கம் செ.கோ-1) வரவேற்புரை ஆற்றினார்.

ச.சுரேஷ்குமார் ( செயலாளர்(சமூக உறவு) தெ.ம.எல்.அய்.சி.எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கம்), இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட நிகழ்வுகளை விவரித்தார். தமிழ் சாக்ரடீஸ் (திராவிட இயக்க பேச்சாளர்), இரட்டை மலை சீனிவாசன் குறித்த பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் ஜாதியை எதிர்த்து களமாடிய நிகழ்வுகள் குறித்து கருத்துரையாற்றினார்.

க.கார்குழலி (தலைவர், தெ.ம.எல்.அய்.சி ஊழியர் கூட்டமைப்பு) பெண்கள் இது போன்ற முற்போக்கு செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும், ஜாதியப் பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் ஜாதி எதிர்ப்பு போராளிகளின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய தேவை உள்ளது. இது போன்ற கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கூறினார்.

நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பேசுகையில் ஜாதியின் நவீன பரிணாமத்தையும், தனக்கு கீழே ஒருவர் இருக்க வேண்டும் என்று கட்டமைத்த பார்ப்பனிய மனநிலையை எடுத்துரைத்தார். ஜாதி ஒழிப்பு பேச வருகிறவர்கள் முதலில் சுயஜாதி எதிர்ப்பாளராக இருக்க வேண்டிய அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். கருத்துரையாற்றிய தோழர்களுக்கு பொன்னாடையை அணிவித்தனர். மஞ்சு ( தெ.ம.எல்.அய்.சி.பி. ஊழியர் கூட்டமைப்பு) நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ் 13082026

You may also like...