வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள் – (2)

ஜோதிடம் அறிவியலா?
ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு -ஜோதிடருக்கு -‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஜோதிடத்தின் இந்த அஸ்திவாரமே அறிவியலுக்கு விரோதமானது. சூரியன் ஒரு கிரகமே (Planet) அல்ல. அது ஒரு நட்சத்திரம் (Star). நட்சத்திரம் என்றால் அது பிரதானமாக ஹைட்ரஜன் வாயுவால் ஆனது. ஒளியையும் வெப்பத்தையும் உருவாக்கவல்லது. ஒரு மாபெரும் அணு உலை என்று சூரியனைக் கூறலாம். இதனைச் சுற்றி செல்லும் கிரகங்கள் அப்படி அல்ல. இவற்றிற்கு சொந்தமாக ஒளியை உருவாக்கும் ஆற்றல் இல்லை. சூரிய ஒளியைத்தான் ஸ்பெஷல் நாடகப் பின்பாட்டுக்காரன் போல வாங்கி விடுகின்றன. கிரகங்கள் சுழன்று வருவதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது கதிரவன் அநேகமாக ஓரிடத்திலேயே இருப்பது எனக் கூறலாம். அதாவது சூரியன்தான் மையம். அதைச் சுற்றித்தான் பல கிரகங்களும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு விஷயம் ஜோதிடத்தில் வரும் இந்த ஒன்பது கிரகங்களில் பூமி இல்லையே கவனித்தீர்களா? விஞ்ஞானத்தின்படி பூமியும் ஒரு கிரகமே. அதுவும் சூரியனைச் சுற்றியே வருகிறது. பிறகு ஏன் அதை நமது ஜோதிடசிகாமணிகள் சேர்க்கவில்லை? காரணம் அந்தக் காலத்தில் பூமிதான் மையம் என்றும், அதைச் சுற்றியே சூரியன் வலம் வருகிறது என்றும் மனிதன் நம்பினான், கண்ணில் கண்ட காட்சியே மெய் என்று நம்பினான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்னும் ஞானம் அவனுக்குப் பின்னாளில் ஏற்பட்டது. தீர விசாரித்த பின் உண்மையைத் தெரிந்து கொண்டான். தற்பொழுது பள்ளிப் பாடப் புத்தகத்தில் சூரியமண்டலம் என்கிற குடும்பத்தில் சூரியனே தலைவன். அவனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்திலோ இன்னும் பூமிதான் மையம், அதைச் சுற்றி வரும் ஒரு கிரகம்தான் சூரியன்!

இன்னொரு வேடிக்கையை நோக்குங்கள். ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரனும் ஒன்று. ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும் ஒரு கிரகம் அல்ல சந்திரன். மாறாக பூமியைச் சுற்றிவரும் ஒரு துணைக்கிரகம் (Satellite) அது.

ராகு, கேது என்று கிரகங்கள் உண்டு என்கிறார்கள் அல்லவா? அப்படி கிரகங்களே கிடையாது. என்ன செய்வார்கள் ஜோதிடர்கள்? ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் இவை பின்வந்த மகரிஷிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று கூறி சமாளிக்கிறார்கள். பின்வந்தவர்கள் ஏற்றுக் கொண்டார்களாம்! ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? அதற்கெல்லாம் காரணம் கேட்கக்கூடாது. பெரியவங்க தப்புச் செய்தால் அது பெருமாளே செய்தது போல.

பூமி, மெர்க்குரி (புதன்), வீனஸ் (வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர் (வியாழன்), சாட்டர்ன் (சனி), யுரேனஸ் (விண்மம்), நெப்டியூன் (சேண்மம்) என்கிற எட்டு கிரகங்களே சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதாக முதலில் அறியப் பட்டது. 1930-ல் புளூட்டோ (சேணாகம்) என்கிற புதுக்கிரகம் கண்டுபிடிக்கப் பட்டது. 1987ல் மேலும் இரண்டு கிரகங்கள் கண்டறியப்பட்டதாக சில வானவியலார் அறிவித்தார்கள். இன்னும் அறியப்படாத கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் இருக்கக் கூடும் என்றே விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால் ‘யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் நமது ஜோதிட சாஸ்திரத்தில் சேர்க்கப்படவில்லை.

ஆக, இல்லாத கிரகங்களைச் சேர்த்தும், இருக்கிற கிரகங்களை விட்டு விட்டும் ஜோதிட சாஸ்திரம் வகுத்திருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையே கோளாறாக இருக்கிறது. இப்படி விஞ்ஞான விரோதச் சிந்தனையில் தயாரிக்கப்பட்ட ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்தானாம். இந்தக் கூத்தை என்னென்பது?.

கிரகங்களின் நிலைக்கும் தனிமனித வாழ்வுக்கும் சம்பந்தம் உண்டா?

கிரகங்களைப் பற்றிய ஜோதிடர்களின் வருணனைகள் சுத்த ஏமாற்று வித்தைகள் என்றால் அவற்றையும் மனிதனின் பிறப்பையும் இணைக்கிறார்கள் பாருங்கள். அது இன்னும் பெரிய மோசடி! ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த ராசியில் இருக்கின்றனவோ அந்த நிலை அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கதையளக்கிறார்கள். ஒரு வினா நெஞ்சில் எழக்கூடும். சூரிய மண்டலத்தில் கிரகங்கள் இருப்பது உண்மைதானே. அவை சூரியனைச் சுற்றி வருவதும் உண்மைதானே. ஒரு மனிதன் பிறக்கும்போது கிரகங்களானது சூரிய மண்டலத்தில் எந்த நிலையில் இருக்கிறதோ அது இந்த மனிதனைப் பாதிக்காதா?

கிரகங்கள் என்பவை ஏதோ பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்துத் தெருவில் இருப்பவை அல்ல. சூரியனிலிருந்து ஒவ்வொரு கிரகமும் பலகோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக்கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனிமனிதனின் வாழ்வைத் தீர்மானிக்கும் ? தீர்மானிக்க முடியும்? இதைவிட வேறு அபத்தம் இருக்க முடியாது, உண்மையில் இதர கிரகங்களின் நிலையினால் பூமிப் பந்தில் கூட திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவதில்லை. பிறகு எப்படி ஒரு தனிமனிதனின் வாழ்வில் அவை புகுந்து வரும்?

பிறந்த நேரம் கணிப்பது சரியா?

பிறந்த நேரத்தில் இருக்கும் கிரக நிலைமைக்கு ஏற்ப வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது என்றால் அந்த நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஒரே மாதிரியாக சற்றும் பிறழாமல் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பிறந்த இந்த 600 பேரின் வாழ்வும் ஒரே மாதிரியாக – இறப்பு உட்பட ஒரே மாதிரியாகஇருக்க வேண்டும் அல்லவா? அப்படித்தான் இருக்கிறதா? இருக்க முடியுமா? ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் பிறரிடமிருந்து ஏதாவதொரு சிறு வகையிலாயினும் வேறு பட்டிருக்கிறதே! பிறந்த நேரம் என்கிறார்கள் அல்லவா. அதை எப்படி கணிப்பது? இது மிகவும் முக்கியம். இது சரியில்லை என்றால் சகலமும் தவறாகப் போய்விடும். ஜோதிடம் என்பதே பிறந்த நேரத்தை நம்பியல்லவா இருக்கிறது. அட பிறந்த நேரம் என்பது தான் எது?

பெரியார் கேட்கிறார்

“பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி, நிலத்தில்பட்டு, கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக்கொண்டிருக்கும் காலமா? அல்லது கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த காலமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த காலமா? – என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க, ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படிக் கண்டு பிடிக்கமுடியும்? குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடன் இருக்கிறதா இல்லையா. ஆணா பெண்ணா போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்தச் சேதியைக் கொண்டுவந்து வெளியிலிருக்கும் ஆண்களிடம் சொல்லச் சிறிது நேரமாவது செல்லும். அந்தச் சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்கு கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணி காட்டுவதா என்பது தெரியவேண்டும். கடிகாரம் இல்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம்பக்கத்திலுள்ள கடிகாரம். அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?”
– பெரியார்

இன்னும் கொடுமை என்னவென்றால் பெண் ருதுவான நேரத்தை வைத்துக் கொண்டும் ஜாதகம் கணிக்கிறார்கள். பிறந்த நேரத்தைக் குறிப்பதிலேயே இவ்வளவு சிரமம் என்றால் இதிலே எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் சரியான ஜனன, ருதுவான நேரத்தைக் கணக்கிடவே முடியாது என்று தெரிந்துதானோ என்னவோ பிறந்த தேதியை வைத்துக் கொண்டேகூட ஜாதகம் கணித்துத் தருகிறார்கள். அதேநாளில் உலகில் எத்தனை ஆயிரம் பேர் பிறந்திருப்பார்கள்! அவர்களது வாழ்வெல்லாம் எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்? இதைக்கூட யோசிக்காமல் அதற்கும் தட்சணை வழங்கி ஜாதகம் கணித்துக் கொண்டு போகிறார்களே!

பிறந்த அல்லது ருதுவான நேரத்தை வைத்து எந்தெந்த கிரகங்கள் எவ்வப்பொழுது இவனது/இவளது வாழ்வில் தலையிடும் என்று கணிக்கிறார்கள் அல்லவா? அதற்கு முன்கூட்டியே எந்தெந்த கிரகம் என்னென்ன பலன்களைத் தரும் என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். யார் தீர்மானித்தார்கள்? எப்படித் தீர்மானித்தார்கள்? என்றெல்லாம் கேட்கக்கூடாது. சொன்னால் கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான். உதாரணமாக பிதா, ஆத்மா, சிரசு, தந்தம், வலது நேத்திரம், சிலும்பின மயிர், பித்தம், சரீரம், வைத்தியம், ஒரு தலை நோவு முதலிய சிரசு ரோகம், சுரம், வியாதீஸ்திரி அல்லது சித்த சுவாதீனமில்லாத ஸ்திரி, போகம், சௌரியம், பிரதாபம், தைரியம், இராஜசேவை, உத்தியோகம். சைவானுஷ்டானம், தபசு, சதாசிவன், பஞ்சலோகம், வச்சிரரத்தினம், இரசவாதம். யானை, கோதுமை, மிளகு, யாத்திரை, பகற்பொழுது, ஒளி, மலை, காடு, கிராம சஞ்சாரம் இவைகட்கெல்லாம் சூரியனே காரகன்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ‘சிலும்பின மயிர்’ யாருக்காகிலும் இருந்தால் அதற்குக் காரணம் ‘சூரிய பகவானே’ என்பதைத் தெரிந்திடுக! இப்படியாக இவர்களது ஒன்பது கிரகங்களுக்கும் பலன்கள் வகுத்திருக்கிறார்கள். கதைக்குக் கால் இல்லை என்று பாட்டிமார்கள் கூறுவதுபோல இதற்கும் ஆதாரம் ஏதும் கிடையாது.

நல்லநேரம், ராகுகாலம் இருக்கிறதா?

நடைமுறையில் இந்த நல்ல நேரம் விவகாரம் முன்பு அளவுக்குக் கறாராகத் தற்காலத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது ஓர் ஆறுதலான விஷயம். பெரியார் கூறினார்-

“நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு நல்ல கொழுத்த இராகு காலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் `இராமசாமி, இராமசாமி’ என்று கூப்பிட்டால் இவன் இப்போது இராகு காலம், நான் வரமாட்டேன்’ என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குடுகுடு என்று – எங்கே சீக்கிரம் போகாவிட்டால் வழக்கைத் தள்ளிவிடப் போகிறானோ என்று ஓடிப்போய் வந்தேன்’ என்றுதானே கூறுவான். அப்பொழுது எங்கே போயிற்று இராகுகாலம்? எமகண்டத்திலே இரயிலும் பஸ்சும் புறப்படுகிறது. கொஞ்சம் இரு இப்பொழுது இராகுகாலம் என்று கூறினால் அது நிற்குமா அதில்தானே செல்கிறான்!’’
-பெரியார்
(நன்றி: அருணன் எழுதிய ’மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை’ நூலிருந்து சில பகுதிகள்..)
பெரியார் முழக்கம் இதழ் 06082026

You may also like...