வந்தே மாதரம் சட்டமாகியது இந்தியா – `இந்து’ இந்தியாவாகியது!
`வந்தே மாதரம்’ பாடலுக்கு மிகுந்த சூழ்ச்சியுடன் ஒன்றிய பாஜக ஆட்சி சட்டபூர்வ ஏற்பை வழங்கிவிட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருந்ததை ஒரு வாய்ப்பாக ஒன்றிய ஆட்சி பயன்படுத்திக் கொண்டது. மாநிலங்களவையில் எந்த விவாதங்களும் இல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத அவையில் (வெளிநடப்பு செய்திருந்தனர்) குரல் ஓட்டு வழியாக மசோதா நிறைவேறிவிட்டது. அதேபோல் மக்களவையிலும் வேறு பிரச்சனைகளை முன்வைத்து நடந்த அமளி துமளிகளை பயன்படுத்தி கடந்த ஜூன்-29, அன்று மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது.
அமளிகளுக்கு இடையே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்த எதிர்ப்பும், ஆ. ராசா தந்த திருத்தங்களும் புறந்தள்ளப்பட்டன. `வந்தே மாத’ரத்தின் முழுமையான பாடலுக்கும் இப்போது சட்டத்தால் ஏற்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் நிர்ணய சபையில் செய்த முடிவின்படி முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது ஆ.ராசா கொடுத்த திருத்தம்.
உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் அளித்த பதிலில் காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்காகவே `வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்ட ஏற்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதிலிருந்து ஒரு உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களை இப்பாடல் வெறுத்து ஒதுக்குகிறது என்பதுதான் அந்த உண்மை. இஸ்லாமியர்களைத் திருப்தி செய்யும் அரசியல் என்ற பெயரில் பாஜகவும் சங்பரிவாரங்களும் மதச்சார்பற்ற கட்சிகளைக் குற்றம் சாட்டி இஸ்லாமியர்களைத் தேச துரோகிகளாக அடையாளப்படுத்தி வருகிறார்கள். அந்த கருத்துக்கே இப்போது உள்துறை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். `வந்தே மாதரம்’ வரலாறும் இதைத் தான் கூறுகிறது.
1882-இல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனரால் வங்க மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது இந்த `வந்தே மாதரம்’. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது.
முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’.
“நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால் நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை; 7 கோடி இந்துக்கள் வாளேந்தி களத்தில் குதிப்போம்” என்பதே வந்தே மாதரம் பாடலின் கருத்து.
வந்தே மாதரம் பாடலைப் பாடி வைணவ இந்து இளைஞர்கள் முஸ்லிம்களை கொலைசெய்து, முஸ்லிம் பெண்களை ‘பாலியல் வல்லுறவுக்கு’ உள்ளாக்கி முற்றாக ஒழித்துவிட்டு, காளி தேவி முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். அப்போது கதாநாயகன் சத்யானந்தாவிடம், “நாம் தான் முஸ்லிம்களை அழித்து ஒழித்து விட்டோமே; இந்து இராஜ்யம் வரவில்லையே; ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு கதையின் நாயகன் சத்யானந்தா, “இப்போது நமக்கு எதிரிகளே இல்லை; ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள்; அவர்கள் தங்கள் அதிகாரங்களை நம்முடைய விஷ்ணு கடவுளுக்குத் தான் காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்று பதில் கூறுகிறார்.
இப்படி இஸ்லாமியர் ஒழிப்பையும் ஆங்கிலேயர் ஆதரவையும் கொண்டாடுகிறது இந்த ‘வந்தே மாதரம்’.
1937-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் `வந்தே மாதரம்’ பாடப்பட்ட போது இஸ்லாமிய உறுப்பினர்கள் எழுந்து நிற்க மறுத்தார்கள். அப்போது குடிஅரசு பத்திரிக்கை `வந்தே மாதரம்’ பாடலை கடுமையாகக் கண்டித்து எழுதியது. இதற்கு எதிராக பெரியார் இயக்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.
அரசியல் நிர்ணய சபை 1976-ஆம் ஆண்டு நிராகரித்தது போல் 42-வது அரசியல் சட்ட திருத்தமும் நிராகரித்தது. தேசியச் சின்ன அவமதிப்பிலும் `வந்தே மாதரம்’ இடம்பெறவில்லை. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான `இந்து பயங்கரவாதத்தை’ அரசின் தேசிய கீதமாக்கி மதச்சார்பின்மை பிரிவையே புறந்தள்ளி இந்தியாவை `இந்து’ இந்தியவாக மாற்றிவிட்டது ஒன்றிய பாஜக ஆட்சி.
மதச்சார்பின்மை பேசும் எதிர்க்கட்சிகள் இதற்கு போதிய அழுத்தம் தராமல் ‘கட்சி அரசியலுக்கே’ முன்னுரிமை கொடுத்ததும் வரலாற்று அவலம்!
பெரியார் முழக்கம் இதழ் 06082026
