மேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்
வீடு கட்டுவதற்கான திட்டங்களுக்குத் தான் வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் தந்திருக்கிறது. அதற்காக வீடு கட்டுவதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்ற அவசியமில்லை என்று வீட்டுவசதி வாரியம் கூறினால் எப்படி இருக்கும்? கட்டப் போகாத வீடுகளுக்கு ஏன் திட்ட நகலை தயாரிக்க வேண்டும்? அந்தத் திட்ட நகலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சராசரி அறிவுள்ளவர்கள் கூட கேட்பார்கள்.
காவிரியின் குறுக்கே மேகதாதுபகுதியில் அணைகட்டும் திட்டம் ஒன்றுக்கு வரைவு நகலை தயாரித்து கருநாடக அரசு மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பியவுடன், ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. பா.ஜ.க.வினர், வரைவுத் திட்ட அறிக்கைக்குத் தானே ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லையே என்று இப்போது வாதம் செய்கிறார்கள். காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அதைத் தொடர்ந்து மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட அரசாணைகளின் அடிப்படையில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகள் தொடங்கும் நிலை யிலேயே அதைத் தடுத்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட போது அது அதிகாரமற்ற அமைப்பு என்று முன் வைக்கப்பட்ட கருத்து உறுதியாகி யிருக்கிறது.
பெருமழை காலங்களில் தண்ணீர்தேக்க முடியாத நிலை வரும்போது கருநாடகம், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது. இப்படி உபரியாக தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பதையும்கூட தடுப்பதற்காகவே நீர்மின் திட்டங்களை உருவாக்கி அதற்காகத் தண்ணீரை கருநாடகத்திலேயே தேக்கி வைத்து விடலாம் என்று கடந்த 50 ஆண்டுகளாகவே கருநாடக அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
தமிழ்நாட்டோடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய காவிரி நீரை கருநாடக அரசு மின் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க மாற்றுத் திட்டம் ஒன்றை தி.மு.க. ஆட்சி முன் வைத்தது. மத்திய அரசே மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி கருநாடகத்துக்கு 60 சதவீதம், தமிழ்நாட்டுக்கு 40 சதவீதம் என்று பகிர்ந்தளிக்கலாம் என்பதே அத் திட்டம். மன்மோகன்சிங் தலைமையிலிருந்த அரசும் இதை ஒப்புக் கொண்டது. ஆனால் கருநாடகம் ஏற்க மறுத்தது.
காவிரி நீரைத் தடுத்து நீர் மின் திட்டம் அமைக்கும் முயற்சிகள் குறித்து காவிரி நடுவர் மன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கருநாடக அரசு நீர் மின் திட்டங்களை எப்போது அமைத்தாலும் அததற்காகத் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு பாதகமாகிவிடக் கூடாது. நடுவர் மன்றம் வரையறுத்துள்ள தமிழகத்துக்குத் தரவேண்டிய நீரின்அளவை சீர்குலைத்து விடக் கூடாது – என்று நடுவர் மன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. உச்சநீதி மன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
மேகதாதுவில் அணையோ, நீர்மின் திட்டமோ கட்டக் கூடாது என்று 2013இல் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். 23.4.2015இல் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர், “கருநாடகத்தில் சிவசமுத்திரம் மின் திட்டத் துக்காக கருநாடக அரசு அனுமதி கோரியது. தொடர்புடைய மாநிலங்களின் கருத்தை அறிந்தே ஒப்புதல் தர முடியும் என்று மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது” மேகதாது பற்றி எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று கூறினார்.
இப்போது கருநாடகத் தேர்தலை கருத் தில் கொண்டு பா.ஜ.க. இந்தப் பிரச்சினை யில் அரசியல் விளையாட்டுகளைத் தொடங்கி மீண்டும் தமிழகத்துக்கு எதிரான துரோக நடவடிக்கைகளைத் தொடங்கி யிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
பெரியார் முழக்கம் 13122018 இதழ்