நவ.26 ஜாதி ஒழிப்பு வீரர்கள் நாளில்… உரத்து சிந்திப்போம்!
இளைய தலைமுறைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. நவம்பர் 26, 1957 தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நாள். அன்றுதான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற புரட்சிகரப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை அறிவித்தவர் பெரியார். அது என்ன போராட்டம்?
இந்தியாவின் அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீ வைத்து எரிக்கும் போராட்டம்.
அப்படி ஒரு போராட்டம் நடந்ததா என்று வியப்படையாதீர்கள். உண்மையில் நடந்தது. அரசியல் சட்டம் தமிழ்நாடு முழுதும் வீதிகளில் எரிக்கப்பட்டது. பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் 10000 பேர் எரித்தார்கள். கைதானவர்கள் 3000க்கும் மேல். அவர்களில் பெண்கள், ஆண்களும் சிறுவர்களும் இருந்தார்கள். 3 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றார்கள்.
மற்றொரு வியப்பான செய்தி தெரியுமா? இவர்கள் அனைவரும் பிணையில் வெளிவர மனு போட வில்லை; எதிர் வழக்காடவில்லை!
“ஆம் சட்டத்தை எரித்தோம்; நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயாராக வந்துள்ளோம்” என்று நெஞ்சு நிமிர்த்தி சொன்னார்கள்.
அன்று சிறை வாழ்க்கை மிக கொடூரமானது. மோசமான உணவு; சுகாதாரமற்ற சிறை; அதுவும் இவர்கள் மீது போடப்பட்டதோ கிரிமினல் வழக்கு. இவர்களை சிறை நிர்வாகம் அரசியல் கைதிகளைப்போல் நடத்தவில்லை; கிரிமினல் குற்றவாளிகளாகவே நடத்தியது. அரைக்கால் சட்டை, அரைக் கைச் சட்டை, கிரிமினல் கைதிகளைப் போலவே சிறையில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். இத்தனை துயரங் களை ஜாதி ஒழிப்பு இலட்சியத்துக்காக இன்முகத்துடன் ஏற்றார்கள். சிறைக் குள்ளே 5 தோழர்கள் பலியானார்கள். சிறையின் மோசமான உணவு, வெப்பம் காரணமாக நலிவுற்று விடுதலை பெற்ற ஒரு மாதத்துக்குள்ளேயே உயிரிழந்த வர்களையும் சேர்த்து களப்பலியானோர் 18 பேர். சிறை வாழ்க்கையோடு குடும்பத்தையே இழந்தவர்கள் ஏராளம்.
ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் தியாகங்களைச் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பக்கங்கள் இவை. பார்ப்பனர்கள் சமூகத்தில் திணித்த இந்த ஜாதியம் தான் இப்போதும் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடைச் சுவர்.
ஏன் இந்த ஜாதி? எதற்காக ஜாதிக் கலவரங்கள்?
குடும்ப உறவுகளையே கொன்று போடும் இந்த ஜாதி ஆணவக் கொலைகள் ஏன்?
சமூகத்தின் எதிர்காலத்தை உரு வாக்கப் போகும் இளைய தலைமுறை யின் சிந்தனைக்கு சில கருத்துகளை முன் வைக்கிறோம். மனம் திறந்து சிந்தியுங்கள்.
- நம்மை இப்போது அடையாளப் படுத்தும் ஜாதியை நாம் விரும்பி, நாமே தேர்வு செய்து கொண்டோமா, இல்லையே!
- விருப்பமில்லாத ஜாதியை உதறிவிட்டு, விரும்புகிற ஒரு ஜாதிக்கு மாறு வதற்கான வாய்ப்புகள் நமக்கு இருக்கிறதா? இல்லையே! தோழர்களே! இந்த அடையாளம் நம் மீது பரம்பரை பரம்பரையாக திணிக்கப்பட்டு வருகிறது!
- எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எப்போதோ நம் மீது திணிக் கப்பட்ட இந்த அடையாளத்தை சுமந்து கொண்டு, நமக்கு நாமே ‘பெருமை’ பேசிக் கொண்டிருப்பது ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியுமா?
- குருதிக்கு ஜாதி இல்லை. ஒரு ஜாதிக்காரன் குருதி இன்னொரு ஜாதிக்காரர் உடம்புக்குள் உயிர் காக்க ஏற்றப்படுகிறது.
- உடல் உறுப்புகளுக்கு ஜாதி இல்லை; விபத்தில் ‘மூளைச் சாவு’ அடைந்த ஒருவரின் உடல்உறுப்புகள் அப்படியே ஆண்-பெண் பாகு பாடின்றி வேறு ஒரு ஜாதிக்காரர் உடலுக்குள் பொருத்தப்படுகிறது. இங்கே ஜாதி பார்க்காமல் ஏற்றுக் கொள்கிறோம்.
- இயற்கை சீற்றங்களான புயலும், வெள்ளமும் ஜாதி பார்க்கிறதா? தண்டவாளம் விரிசலடைந்து தடம் புரளும் தொடர் வண்டிகள், ஜாதி பார்த்து பயணிகளை சாகடிக்கிறதா? நோட்டுக்களை மாற்றுவதற்கு வங்கிகள் முன் நாம் சோர்ந்து போய் நிற்கும் கியூ வரிசையில் ஜாதி இருக்கிறதா? எல்லாமே ஜாதி கடந்து தானே இருக்கின்றன.
- வர்த்தகங்களில் – சேவைகளில் ஜாதி இருக்கிறதா? இருக்கத்தான் முடியுமா? சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே மருத்துவம் செய்வேன் என்று ஒரு டாக்டரோ, சொந்த ஜாதிக்காரர் களுக்கு மட்டுமே வியாபாரம் செய்வோம் என்று ஒரு வணிகரோ கூற முடியுமா? ஆனால் சொந்த ஜாதிக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவது என்ன, நியாயம், தோழர்களே!
ஒரே நாட்டில் – ஒரே சமூகமாக – ஒரே அரசியலமைப்பில் – ஒரே சமூக வாழ்க்கைக்குள் – நாம் வந்த பிறகும், மனித சமூகத்தை கூறுபோட்டு, ‘நீ உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்’ என்று பிறப்பிலேயே பேதப்படுத்தும் ஜாதி ஏன்?
அதன் பெயரால் கலவரம் ஏன்? அடிதடி ஏன்?
மனித மாண்போடு சிந்தியுங்கள்!
ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்து சிறை புகுந்து, உயிர்ப்பலி தந்து, சொந்த வாழ்க்கையை இழந்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் நினைவு நாள் நவம்பர் 26!
60 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதே நாளில் – நாம் சிந்திக்கவே இந்த அன்பான வேண்டுகோள்.
– திராவிடர் விடுதலைக் கழகம்
(தோழர்கள் துண்டறிக்கையாகப் பயன்படுத்தலாம்)
பெரியார் முழக்கம் 24112016 இதழ்